கீழடி அகழாய்வுத் தொழிலாளர்களை நான் பார்க்கிறேன்!

By ம.சுசித்ரா

கீழடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பண்டையப் பொருட்கள் தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்வதாகப் பெருமை கொள்கிறோம். இந்த அகழாய்வுப் பணியில் ஈடுபடும் உயரதிகாரிகள் குறித்த சேதி நமக்குத் தெரியும். ஆனால், பழந்தமிழர்களின் அடையாளங்களைத் தோண்டி தோண்டி கண்டெடுக்கும் தொழிலாளர்களை நமக்குத் தெரியுமா? அம்மனிதர்களின் மன உணர்வையும் மண் உணர்வையும் தனது கலையின் ஊடாக உலகின் பார்வைக்குக் கொண்டு செல்ல முயல்கிறார் சரண் ராஜ்.

சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் டிசம்பர் 9-ம் தேதி 'சென்னை ஃபோட்டோ பினாலே’ (Chennai Photo Biennale) ஒளிப்படக் காட்சி நடைபெறவிருக்கிறது. இதில் சரண் ராஜின் கேமரா கண்கள் அகப்படுத்திய கீழடி அகழாய்வுத் தொழிலாளர்களின் முக்கிய தருணங்கள் காட்சிப்படுத்தப்படவிருக்கிறது.

கீழடி தொழிலாளர்கள்

’திராவிட அரசியலைவிட எனக்கு இதுவே முக்கியம்!’

“என்னுடைய சொந்த ஊர் மதுரையில் கரடிப்பட்டி. அங்கிருக்கும் கல்குவாரியில் அம்மா, அப்பா முன்பு வேலை செய்தார்கள். நான்கூட சிறுவனாக இருந்தபோது அங்கு கல் லோட்டு ஏற்றி இறக்குவது, ஜல்லி பிரிக்கும் வேலைகூட பார்த்திருக்கிறேன். இப்படிக் கல் உடைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை, அது தொடர்பான எனது சிறுவயது நினைவுகளை, அசரீரிபோல் அங்கு வியாபித்திருந்த ஒலிகளைச் சிற்பங்களாக, ஒளிப்படங்களாக, ஒலி படைப்பாக 2019-ல் வடித்தேன். அந்த படைப்புகள் சென்னையில் உள்ள கோதே ஜெர்மன் மொழி இன்ஸ்டிடியூட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இதை பார்த்துவிட்டு அதுபோன்றதொரு கலை படைப்பை சென்னை ஃபோட்டோ பினாலேவுக்கு தரும்படி கேட்டார்கள்.

கீழடி தொழிலாளர்கள்

கீழடி அகழாய்வுப் பகுதி

அப்போது கீழடி ஐந்தாவது கட்ட அகழாய்வுப் பணி நடந்துகொண்டிருந்தது. என் வீட்டிலிருந்து ஒரு மணிநேர பயணத் தொலைவுதான் கீழடி என்பதால் தினந்தோறும் சென்றேன். அங்கு கண்டெடுக்கப்படும் பொருட்களின் மூலம் திராவிட அரசியலையும் தமிழர் பண்பாட்டையும் கட்டமைக்கும் போக்குதான் பரவலாக உள்ளது. எனக்கோ அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைதான் கண்ணுக்குத் தெரிந்தது. பெரும்பாலும் செங்கல் காளவாசல் தொழிலிலும் விவசாயத்திலும் ஈடுபட்டுவரும் அம்மக்கள் கடந்த ஏழாண்டுகளாக அகழாய்வு வேலை செய்துவருகிறார்கள். இதில் கிடைக்கும் தினக்கூலியை நம்பி அவர்களது வாழ்வாதாரம் உள்ளது. சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் காலையிலிருந்து மாலைவரை பூமியைத் தோண்டும் இவர்கள்தாம் முதன்முதலில் ஒவ்வொரு அகழாய்வுப் பொருளையும் கண்டெடுக்கிறார்கள். இந்த தொழிலாளர்கள் மீது பாயும் சூரிய ஒளிக்கீற்றை மையமாக வைத்து ஒளிப்படங்களும் ஆவணப்படமும் பிடித்தேன். பழைய சைனோடைப் (cyanotype) முறையில் ஒளிப்படங்களை அச்சிட்டேன்” என்கிறார் சரண் ராஜ்.

பறை மேல் ஒப்பாரிக் கலைஞர்கள்

தென்கொரியாவில் பறையில் ஒப்பாரிக் கலைஞர்கள்!

சென்னை கவின்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற சரண் ராஜின் வேறு சில படைப்புகள் சென்னையில் காட்சிப்படுத்தப்படும் அதே வேளையில் தென்கொரியா இந்தியாவுடன் இணைந்து நடத்தும் கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள இன்கோ மையமும் இந்தியக் கலை அருங்காட்சியகமும் இணைந்து ‘தி எமர்ஜிங் கேன்வாஸ்- எடிஷன் ஏழு’ என்ற கண்காட்சியை நடத்திவருகின்றன.

ஆன்லைன் கண்காட்சியாக இருந்தாலும் முப்பரிமாணத்தில் மெல்லிய இசையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக ஒரு கலைக்கூடத்துக்குள் நடந்தபடி ஒவ்வொரு ஓவியங்களையும் கண்டு ரசிப்பதுபோன்ற உணர்வு மெய்நிகராக ஏற்படுகிறது. நவம்பர் 25 அன்று தொடங்கிய இந்த இலவச ஆன்லைன் கண்காட்சி 2022 ஜனவரி 7வரை நீடிக்கும்.

இதில் 11 கொரிய கலைஞர்கள் மற்றும் 11 இந்தியக் கலைஞர்களின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து சரண் ராஜ் உருவாக்கிய பறை இசைக்கருவி மீது வடிக்கப்பட்ட ஒப்பாரி கலைஞர்களின் முகங்கள் கொண்ட ஒரு படமும், சலவைத் தொழிலாளர்களின் முகங்கள் ஓவியங்களாக இஸ்திரி பெட்டியில் பதிக்கப்பட்டு வெள்ளை வேட்டியில் அச்சடித்தது போன்றதொரு படமும் இதில் இடம்பெற்றுள்ளன.

தம் மக்களே, தம் கலை!

“பள்ளி நாட்களிலிருந்தே வரைவதில் பேரார்வம். பிளஸ் 2 படிக்கும்போதே சென்னையில் கவின்கலைக் கல்லூரி இருப்பதுகூடத் தெரியும். ஆனாலும் பிபிஏ மதுரையிலேயே படித்து முடித்தேன். பிறகு இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கரிகாலன் பாப்பாத்தி எடுத்த ஒரு ஆவணப்படத்திற்குக் கலை இயக்குநராகவும் துணை இயக்குநராகவும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது மட்டுமல்லாமல் சென்னை கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரான சிற்பக் கலைஞர் ஓவியர் சந்துரு குறித்துச் சிலாகித்துப் பேசினார். அதேபோல அன்று மதுரைக் கல்லூரி முதல்வராக பணியாற்றிய பேராசிரியர் முரளி சொன்ன ஒரு வாசகம் என் மனதைவிட்டு இன்றுவரை அகலவில்லை. ’கவின் கலைக் கல்லூரியில் படிப்பது தவமிருப்பதுபோல. மிகப் பெரிய அறிவு முதிர்ச்சி கிடைக்கும். அதிலும் சந்துரு போன்றொரு ஆசிரியர் கிடைப்பது வாழ்க்கையின் திருப்புமுனையாக மாறும்’ என்று சொல்லக்கேட்டேன். நாம் மதிக்கும் மனிதர்கள் இன்னொருவர் குறித்துப் பிரமிப்புடன் பேசுவதைக் கேட்கும்போது மிகப் பெரிய நம்பிக்கை பிறக்கும்தானே!

சென்னை வந்து கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என்னுடைய ஆர்வத்துக்கும் தேடலுக்கும் தோள்கொடுக்கும் விதமாக நண்பர்கள் தங்க அறை கொடுத்து அன்றாட செலவுக்குப் பணம் கொடுத்தனர். கல்லூரி நேரம் போக ஓவியர் சந்துருவுடன்தான் பெரும்பாலான பொழுதுகளைக் கழித்தேன். யாருக்கும் புரியாத அதிநுட்பமானவற்றை வடிப்பது மட்டுமே கலை என்று நினைக்கக்கூடாது. நம்மைச் சுற்றி நிகழ்பவற்றை உற்றுநோக்குவதன் மூலம் கலைப் படைப்புகளை உருவாக்க முடியும் என்பதை அவர் மூலமாகப் புரிந்துகொண்டேன்” என்கிறார் சரண் ராஜ்.

சலவைத் தொழிலாளர்களின் வாழ்வைச் சொல்லும் மூங்கில்

கேரளா வாழ் தமிழர்களின் வண்ணமயமான வாழ்க்கை!

மேலும் அவர் கூறுகையில், “சிறுவனாக இருந்தபோது எனக்கிருந்த பெரிய அச்சம் ஒப்பாரிக் குரல்தான். எங்களுடையது கிராமமென்பதால் வீட்டை விட்டு தெருவோரம் சென்று சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். நடுநிசியில் அப்படி செல்லும்போது எங்கோ தொலைவிலிருந்து ஒப்பாரி பாடும் ஓலம் கேட்டு நடுநடுங்கி வீட்டுக்குள் ஓடிவந்து அம்மாவையும் அப்பாவையும் கட்டிப்பிடித்துப் பல நாட்கள் அச்சத்தில் உறைந்துபோய் உறங்கியிருக்கிறேன். இன்றுவரை அந்த ஒலி எனக்குள் ஒருவிதமான பயம் கலந்த சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. இது என் மனத்தில் சஞ்சரித்துக் கொண்டே இருந்ததால் கோவில்பட்டி, திருநெல்வேலியில் வாழும் ஒப்பாரி கலைஞர்கள் பலரை சந்தித்து ஓராண்டுகாலம் உரையாடினேன். அவர்களது வாழ்க்கையைத் தரிசித்தபோதுதான் ஒப்பாரி பாடல்களின் வேறொரு பரிமாணம் தட்டுப்படத் தொடங்கியது. எனது வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்னுடைய இருப்புக்கான அர்த்தம் என்ன? போன்ற தத்துவார்த்த கேள்விகள் எனக்குள் எழுந்தன. அவர்களது பாடல் இறந்தவர்களுக்கானது மட்டுமல்ல உயிர்வாழும் நம் ஆன்மாவையும் மீட்டக்கூடியது என்பது புலப்பட்டது. அவர்களில் 11 பேரின் முகங்களை ஓவியமாகப் பறை இசைக்கருவியில் லேசர் தொழில்நுட்பம் கொண்டு தைல வண்ண ஓவியமாகத் திட்டினேன். கோவாவில் 2018-ல் நடைபெற்ற சரண்டிபிட்டி கலை விழாவில் அவை காட்சிப்படுத்தப்பட்டன.

அன்மாவுடன் உரையாடும் ஒப்பாரி இசை

இது தவிர அந்த கலை விழாவில் இருட்டு அறையில் வீற்றிருக்கும் ஒற்றை நாற்காலி முன் தொங்கும் விளக்கு சுற்றிலும், ஒலிக்கும் ஒப்பாரி இசை என்ற வடிவத்தையும் படைத்தேன். கோவா கண்காட்சியில் எனது படைப்புகளைக் கண்டு கேரளா கொச்சி கோட்டை கடற்கரையில் ஓராண்டு தங்கி அடுத்தகட்ட படைப்புகளை உருவாக்கும் வாய்ப்பு தேடி வந்தது. கொச்சியைச் சுற்றித்திரிந்தபோது வண்ணாந்துரை பகுதியில் நான்கு தலைமுறைக்கு முன்பாக தமிழகத்திலிருந்து கேளராவுக்கு புலம்பெயர்ந்த சலவை தொழிலாளர்களையும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களையும் கண்டடைந்தேன். இவர்களைப் போல் பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்களின் மூட்டை தூக்கும் தொழிலாளர்களையும், கடற்கரை பகுதியைச் சுத்தம் செய்யும் தூய்மைப்பணியாளர்களையும் சந்தித்தேன்.

கொச்சி கண்காட்சி

தமிழ் சலவைத் தொழிலாளர்களின் கதை

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போதும் அத்தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. அங்கு அவர்களுக்கென வசதியான குடியிருப்பு பகுதிகளைக் கேரள அரசாங்கம் ஏற்பாடு செய்து தந்துள்ளது. தங்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் அதைக் கோரும் தொழிலாளர் சங்கமும் அங்கு வலுவாக உள்ளது. சுற்றுலாத் தலம் என்பதால் நல்ல வருமானமும் கிடைத்துவருகிறது. இவற்றை மனத்தில் நிறுத்தி அங்கு வாழும் சலவை தொழிலாளர்களான தமிழர்களின் வாழ்க்கையை வண்ணமயமாகக் காட்சிப்படுத்த மூங்கில் மரத்தில் ஓவியம் தீட்டி அவற்றுடன் பல வண்ண துணிகளைக் கட்டினேன். பிளைவுட் பலகையை இஸ்திரிப் பெட்டி வடிவில் நறுக்கி அதன் மேல் சலவை தொழிலாளர்களின் முகத்தை ஓவியமாகத் தீட்டி அவற்றை வெள்ளை வேட்டியில் அச்சடித்துக் காட்சிப்படுத்தினேன். இவற்றை கண்ட வைஷ்ணவி ராமநாதன் என்னுடைய இரண்டு ஓவியங்களை தென்கொரியா இந்தியாவுடன் இணைந்து நடத்தும் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தக் கேட்டுக்கொண்டார். கரோனா காலம் என்பதால் தென்கொரியாவில் நடைபெற வேண்டிய விழா ஆன்லைனில் நடத்தப்பட்டுவருகிறது” என்கிறார் சரண்ராஜ்.

கரடிப்பட்டி அம்பேத்கர் நூலகம்

அண்ணல் அம்பேத்கர் எனும் புத்தகன்

அண்ணல் அம்பேத்கர் எனும் புத்தகன்!

தனக்கு கிடைத்த படிப்பினையும் அனுபவமும் தனது கிராமத்துக்குக் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கிடைக்க கடந்த ஏப்ரல் 14 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் கரடிப்பட்டியில் அம்பேத்கர் நூலகத்தைத் சரண் ராஜ் திறந்துவைத்தார். அந்த நூலகத்துக்குத் தொடக்கப்புள்ளி 2018-ல் ’இந்து தமிழ்’ நாளிதழில் அம்பேத்கரின் புத்தக சேகரிப்பு குறித்து வெளிவந்த கட்டுரைதான் என்கிறார். அந்த கட்டுரையின் தாக்கம் சரண் ராஜ் வடித்த நெஞ்சமெல்லாம் நூல்களால் இழைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையிலும் பிரதிபலிக்கிறது. உழைப்பாளர்களின் வாழ்க்கையை உன்னத கலையாக மாற்றும் கலைஞர் சரண் ராஜ் மென்மேலும் தன் படைப்பின் வழி புதிய திறப்புகளை ஏற்படுத்தட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE