வெல்க இன்பநிதி!

By சானா

அன்று, பறக்கும் பைக் செம்ம ஜாலியாக இருந்தது. “வெல்க பாச்சா. வெல்க பாச்சாவின் பச்சா. வெல்க பாச்சாவின் பச்சாவின் பச்சா!” என்று வெங்கய்ய நாயுடுவை வெறுப்பேற்றிய திமுக எம்.பி கணக்காக ரவுசு விட்டுக்கொண்டிருந்தது. “நல்லா கன்டென்ட் குடுக்கிறடா டேய். விட்டா ‘பேட்டிக்குப் போட்டி’யா நீயே களமிறங்கிடுவே போல” எனக் கலாய்த்த பாச்சா, கருமேகத்துக்குப் பின்னே மறைந்திருந்த உதயசூரியனை(!) பார்த்துக்கொண்டே, உதயநிதி வீட்டை நோக்கிப் பறக்கத் தொடங்கினான்.

காலையிலேயே கணினி முன் அமர்ந்து காணொலிச் சந்திப்பைத் தொடங்கியிருந்தார் கலைஞர் பேரன். ‘காலை எழுந்தவுடன் தவிப்பு’ என்கிற ரீதியில், வாக்கிங் போவது முதல் தொகுதிக்குப் போவது வரை எல்லாவற்றுக்கும் முதல் வேலையாக உதயநிதிக்கு ஒரு வணக்கத்தை வைத்தே வண்டியேறிக்கொண்டிருந்தனர் மூத்த அமைச்சர்கள். அதைப் பார்த்து முகமகிழ்ந்து கண்ணைச் சுருக்கிச் சிரித்துக்கொண்டிருந்தார் முதல்வரின் தனயன்.

“நீங்க எம்எல்ஏவா இருக்கும்போதே சீனியர் மினிஸ்டர்களெல்லாம் சின்சியரா வணக்கம் வைக்கிறாங்க. மினிஸ்டராகிட்டீங்கன்னா எதிர்க்கட்சிக்காரங்களும் வணக்கம் வைக்கணும்னு சொல்வீங்களோ?” என்று கேட்டபடியே, உள்ளே நுழைந்தான் பாச்சா. அப்போது கிச்சனிலிருந்து கேபினெட்... மன்னிக்கவும் டீ பிஸ்கட் வந்தது. அதைச் சுவைத்தபடியே சூடான கேள்விகளைக் கேட்கத் தயாரானான் பாச்சா.

“எப்படியோ மினிஸ்ட்ரியில இடம் கிடைக்க செட்-அப் பண்ணி... ஐ மீன் உங்க செட் ஆளுங்களை வச்சு உங்களுக்குப் பேச்சை ஆரம்பிச்சு வச்சிட்டீங்க போல” என்று கேட்டதும், உள்ளுக்குள் எழுந்த உற்சாக அலையைக் கட்டுப்படுத்தியபடி, “அதெல்லாம் எனக்குத் தெரியாதுப்பா. என் தொகுதியில நான் பார்க்கிற துரித வேலைகளை வெச்சு, தொகுதிக்கு வெளியே தகுதி உள்ளவனா என்னை என் ஆளுங்க... ஐ மீன் தமிழக மக்கள் பார்க்கிறாங்க. அதனால, அப்படியெல்லாம் பேசுறாங்க. மத்தபடி, அப்பா சொன்னா பார்க்கலாம்” என்றார் உதயநிதி.

“உங்க அத்தை கனிமொழி ‘அப்பா சொன்னாரென’ன்னு கவிதை எழுதினாங்க. ஆனா, அப்பாகிட்ட அம்மா சொன்னாரென... சொல்லி உதயநிதி அமைச்சர் பதவி வாங்குவார்னுதானே மக்கள்... ஐ மீன் உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க. பார்லிமென்ட்லேயே உங்க பேரை ஒலிக்க வச்சுட்டீங்க... அப்புறமும் ஏன் பதுங்குறீங்க?” என்று பாச்சா கேட்டதும், “அதை வேற ஏன் தம்பி ஞாபகப்படுத்துறீங்க?” என அவஸ்தை முகம் காட்டினார் உதயநிதி.

படா விடாக்கண்டனான பாச்சா, “சொல்லுங்க சார். மிரட்டலா, கடைசியா ஒரு படம் பண்ணிட்டு மினிஸ்டர் ஆகிடுவீங்கன்னு தினுசு தினுசா நியூஸு வருதே. நெருப்பில்லாம புகையுமா?” என்றான்.

அப்போது பார்த்து, ‘வெல்க இன்பநிதி’ என எழுதப்பட்ட டி-ஷர்ட்டுகள் அணிந்த கால்பந்து வீரர்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்து ஒரு லுக் விட, திடுக்கிட்டுப்போன பாச்சா, தற்காபந்தை(!) உத்தேசித்துத் தபதபவென ஓடித் தப்பினான்.

அடுத்து செல்லூர் ராஜூ.

மிமிக்ரி யூனியன் முதல் டப்பிங் யூனியன் வரை போன் செய்து, தன்னைப் போலவே பேசும் திறன் கொண்ட திமுக ஆதரவாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா என விசாரித்துக்கொண்டிருந்தார் தெர்மாகோல் புகழ் முன்னாள் அமைச்சர்.

“அப்படீன்னா அதை நீங்க பேசலைன்னு இன்னும் ஸ்ட்ராங்கா எஸ்டாப்ளிஷ் பண்றீங்களா... சீரியஸா சொல்லுங்க சீனியர்! சின்னம்மாவுக்கு ஆதரவா நீங்க சென்டிமென்ட் டயலாக் பேசலை?” என்று சீண்டிய பாச்சாவைப் பார்த்து சிரித்த செல்லூரார், “இதையெல்லாம் இது பண்ணிட்டு அதை யாரோ எதுக்கோ அனுப்பியிருக்காங்க தம்பி. அதுக்கெல்லாம் விளக்கம் சொல்லி அடுத்தப் பிரச்சினைக்கு... அதாவது, அடுத்த வேலைக்குப் போய்ட்டோம்யா... ” என்றார்.

“முன்னாடியெல்லாம் சின்னம்மாகிட்ட பேசுனவங்களோட ஆடியோ மட்டும் வந்துட்டு இருந்துச்சு. இப்பல்லாம் சின்னம்மாவுக்கு ஆதரவாப் பேசி சிக்குறவங்க ஆடியோவா வருதே... அடுத்து ரிலீஸ் ஓடிடியில வருமா?” என்றான் பாச்சா.

“அதை நீ மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மாண்புமிகு சின்னம்மா அவர்கள் கிட்டதான் கேட்கணும். அவங்களை நாங்க கொஞ்சமும் மதிக்கலை(!). கழகத்துக்குள்ள கலகத்தை ஏற்படுத்துற வேலைகளைப் பார்க்கிறவங்களைப் பத்தி நான் கவலைப்படலை. தலைமைகிட்ட எடுத்துச் சொல்லியாச்சு” என்றார்.

“அவங்க கவலைப்பட்டுக்கட்டும்னு நினைக்கிறீங்களா... அவங்களுக்குக் கவலைக்கா பஞ்சம்?” என்று சொன்ன பாச்சா, “மிமிக்ரி வாய்ஸ் மேட்டர் பத்தி ‘ஜீரோ க்ரைம்’ல கம்ப்ளெய்ன்ட் பண்ணப்போறதா சொல்லிருக்கீங்களே... அது ஜெர்மனி உளவுத் துறையா?” என்று கேட்டதும், “வாய் தவறிப் பேசுறதை வச்சே வாரம் முழுக்க வார ஆரம்பிச்சீங்கன்னா நான் என்னப்பா பண்ணுவேன்?” என்று சிடுசிடுப்பை மறைத்துச் சிரித்தார் செல்லூரார்.

“வாட்ஸ்அப் கால்ல தெளிவாத்தானே சார் பேசிருக்கீங்க... ஐ மீன் பேசியிருக்காங்க” என்று சொல்லிவிட்டு அகன்றான் பாச்சா.

அடுத்தவர், அண்ணாமலை.

திமுக அரசு திட்டமிடும் திட்டங்களை வைத்துத் திராவிட இயக்கங்களைத் திகட்டத் திகட்ட திட்டுவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார் அண்ணாமலை.

“அதெல்லாம் சரிதான் சார். ஆனாக்கா, ‘கோவையில தொழில் பூங்கா தொடங்க செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்’னு கொந்தளிச்சிருக்கீங்க... மதுரையில எய்ம்ஸ் கட்ட நட்ட செங்கல்லை எடுத்துட்டு வந்ததா பேசுன உதயநிதி மேல ஆக்‌ஷன் எடுக்க ஏன் எய்ம் பண்ண மாட்டுறீங்க?” என்று கேட்டான் பாச்சா.

“அதெல்லாம் தலைமைகள் தருணம் பார்த்து முடிவெடுப்பாங்க தம்பி... ஐ மீன் அண்ணா” என்றார் மலை.

“எதுக்கெடுத்தாலும் எங்ககிட்ட பவர் இருக்கு பவர் இருக்குன்னு சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல இருக்கிறதை வெச்சு செம கெத்து காட்டிட்டு இருக்கீங்க. அப்படின்னா, ஸ்டேட் லெவல்ல லோட்டஸ் பார்ட்டிக்கு ஸ்ட்ரெங்க்த் இல்லையா?” என்றான் பாச்சா.

“ஏன் இல்லாம? அதனாலதானே... கூட்டணிக்குள்ளே இருந்துக்கிட்டே தாமரையோட தைரியமும் தன்னம்பிக்கையும் தனக்கும் வேணும்னு அதிமுககாரங்களே எங்க கட்சியில வர்றாங்க...” என்ற அண்ணாமலையிடம், “இதெல்லாம் தர்மமான்னு இரட்டை இலை கட்சியோட இரட்டைத் தலைமை ஏக தர்மசங்கடத்துல இருக்காங்களே...” என்று கேட்டான் பாச்சா.

“அதான் பாஜக - அதிமுக இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும், கூட்டணி தர்மத்தின்படி செயல்படுறோம்னு அடிக்கடி சொல்றோமே?” என்றார் அண்ணாமலை.

“இந்த தர்மத்துக்கு இனிஷியல் ‘அ’வா அண்ணாமலை சார்?” என்று கேட்டுவிட்டுப் பேட்டியை முடித்தான் பாச்சா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE