பாலமேடு ஜல்லிக்கட்டுத் திடலில் பாய்ந்த திடீர் ஆறு

By கே.எஸ்.கிருத்திக்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது என்றாலும் அது ஊருக்குள் நெரிசலான இடத்தில் நடைபெறுவதால், பரந்துவிரிந்த நீளமான திடலில் நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்கே அதிகமான பார்வையாளர்கள் வருவது வழக்கம். ஆனால், அந்த இடம் வெறும் திடல் அல்ல, மஞ்சமலை ஆறு என்பது உள்ளூர்வாசிகள் மட்டுமே அறிந்த செய்தி.

அழகர்கோயில் மலையின் ஒரு பகுதியான மஞ்சமலையில், அய்யனார் கோயில் இருக்கும் பகுதியிலிருந்து ஓடையாகப் புறப்படும் ஆறுதான் மஞ்சமலை ஆறு. மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் வருகிற காட்டாறு. கடந்த 12 ஆண்டுகளாக இந்த ஆற்றில் தண்ணீர் ஓடி யாரும் பார்த்ததில்லை.

ஆற்றில் பாய்ந்த காட்டாற்று வெள்ளம்

இந்த ஆண்டு தொடர்மழை காரணமாக, ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கடந்த நவ.26 இரவு ஆற்றில் ஒரு மணி நேரம் மட்டும் தண்ணீர் ஓடியது. நேற்று முன்தினம் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக, காலை 5 மணி முதல் 9 மணி வரையில் இந்த ஆற்றில் இருகரைகளையும் தொட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று அதிகாலையிலும் அந்த ஆற்றில் தண்ணீர் பாய்ந்தது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர், “இது ஆறு என்பதே எங்களுக்கு இப்போதுதான் தெரியும், இதில் தண்ணீர் ஓடுவதை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறோம்” என்றனர். பெரியவர்களோ, “மஞ்சமலை ஆற்றில் தண்ணீர் ஓடினால் அந்த ஆண்டு செழிப்புதான்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE