லென்ஸ் சிமிட்டும் நேரம்- 19

By வனிலா பாலாஜி

கர்நாடக மாநிலத்தின், மைசூரு நகரின் அருகில் அமைந்துள்ள பறவைகளின் சரணாலயம் ரங்கனத்திட்டு. இதை கர்நாடகத்தின் ‘பக்‌ஷி காசி’ எனவும் அழைக்கின்றனர். காவிரி ஆற்றில் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளாக அமைந்துள்ள பாறைகளின் மீதும் அங்கிருக்கும் மரங்களின் மீதும் பல வகையான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் குளிர் காலத்தில் கூடுகட்டுகின்றன. இத்தீவுகள், 1945 - 1948 காலகட்டத்தில் மைசூரு மன்னராக இருந்த கண்டீரவா நரசிம்மராஜ உடையார், காவிரி நதிநீரை சேமிக்கக் கட்டிய அணையால் உருவானதாகச் சொல்கிறார்கள்.

காலப்போக்கில் இந்தத் தீவுகள் பல வகையான பறவைகளின் புகலிடமாக மாறி இருக்கின்றன. பிரபல பறவையியலாளர் சலீம் அலி தான் 1940-ல், மைசூரு மஹாராஜாவிடம் பேசி இந்தக் குட்டித் தீவுகளை பறவைகளுக்கான பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வைத்திருக்கிறார். இப்போது இந்த இடம் கர்நாடக வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களே இதை முறையாகப் பராமரித்து வருகிறார்கள்.

இனப்பெருக்கத்துக்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, விதவிதமான பறவை இனங்கள் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வந்து குவிகின்றன. கூழைக்கிடா எனும் பறவை இனம் இந்தத் தீவுகளைத் தங்களின் நிரந்தர வசிப்பிடமாகவே குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கின்றன.

குளிர் காலத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு திரள்கின்றன. அவற்றில் சைபீரியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வரும் பறவைகளும் உண்டு. இந்தப் பகுதியில் சதுப்புநில முதலைகளையும் காண முடியும்.

வனத் துறையினர், சுற்றுலாப் பயணிகளுக்காக படகு சவாரியை ஏற்பாடு செய்திருக்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, பறவைகளை மிக அருகில் சென்று ரசிக்க முடியும். படகைச் செலுத்துபவர்கள், பறவைகளைத் தொந்தரவு செய்யாமல் படகோட்டும் வித்தையை நன்கு கற்றுவைத்துள்ளனர். பறவை ஆர்வலர்களுக்கென்றே சிறப்புப் படகு சவாரியும் உள்ளது. அதன் வழியே பயணித்தால் நதியில் சற்று அதிக நேரம் அழைத்துச் செல்வதுடன், பறவைகளின் பெயர்களையும் நமக்கு விளக்கமாக எடுத்துச் சொல்வார்கள்.

இம்முறை நாங்கள் அங்கு சென்றிருந்தபோது சீசன் இல்லாத காரணத்தால், சில பறவைகளை மட்டுமே காணமுடிந்தது. மறுபடியும் ஜனவரியில் செல்லலாம் என தீர்மானித்திருக்கிறோம். ஆனாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றிருந்த சமயம் பல அழகிய பறவைகளின் படங்களை எடுத்து வந்தேன். அதையே உங்களிடம் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE