கவிதாசரண்: எழுத்தே ஓர் இயக்கமாய்...

By புதியமாதவி

கவிதாசரணின் இயற்பெயர் என்ன?

கவிதாசரணின் பிறந்த நாள் எப்போது?

கவிதாசரணின் மனைவி பெயர் என்ன?

கவிதாசரணின் குலம் கோத்திரம்?

கவிதாசரணின் ‘அலர் எனும் மகா உன்னதம்’

‘சங்கரநேர்த்தி’ இரண்டும் அவர் சுயசரிதையா?

சமூகவாழ்வில் கடந்த காலத்தை திரும்பிப் பார்த்த கற்பிதமா?

எது இல்லாவிட்டாலும் தமிழனுக்குச் சாதி இருக்குமே?

இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே பதில் கவிதாசரண்!

ஆம், ‘கவிதாசரண்’ இதழ் பக்கங்களில் இதை எல்லாம் தேடினாலும் கிடைக்காது.

தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் முனைப்பு காட்டும் எழுத்துலகில், தன் அடையாளம் தொலைத்தலை வாழ்க்கையாக்கி வாழ்ந்துகாட்டியவர் கவிதாசரண். எல்லா மனிதர்களுக்கும் பெயருண்டு. பெயரின் அடையாளத்தையும் தொலைத்து தன்னை கவிதாசரண் என்றும் தன் மனைவியை திருமதி கவிதாசரண் என்று மட்டுமே பேசும்படியாக வாழ்ந்தவர். இருவரின் இயற்பெயரும் சமூகவெளியில் இல்லை. அடையாளம் தொலைத்தல் என்பதில் இச்சமூகம் எந்தெந்த அடையாளங்களைத் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடிக்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும் உடைத்து நொறுக்கியவர்.

அடையாளம் தொலைத்த வாழ்க்கைக்காக அவர் கொடுத்த விலை அதிகம். இழப்புகள், அவச்சொற்கள், ஏமாற்றங்கள் எண்ணற்றவை. அத்தனையும் தொலைத்துதான் கவிதாசரண் என்ற மனிதர் சமூக வாழ்வில் மனிதனுக்கான புதிய பாதையை உருவாக்கினார்.

ஒரு கணித ஆசிரியராக ஆரம்பித்த வாழ்க்கை அவருடையது. 1992-ல் ‘கவிதாசரண்- தமிழில் படைப்பிலக்கிய மாத இதழ்’ என்ற வாசகத்துடன் சிற்றிதழ் உலகில் நுழைந்தார்.

‘என்னைத் தமிழ் அன்னை பெற்றாள்

ஏடெடுத்து வாழ்ந்திருப்பேன்

தன்னுயிரைத் தோற்றபின்னே

என் குழியில் பூத்திருப்பேன்’

என்ற கவிதைவரிகளுடன் முதல் பக்கம். உள்ளே சுந்தர ராமசாமியின் சொந்தமுகம், மெளனியைப் பற்றிய மதிப்பீடுகள், வல்லிக்கண்ணன் கட்டுரை, சில கவிதைகள் என்று சிற்றிதழுக்குரிய அம்சங்களுடன் வெளிவந்துகொண்டிருந்தது.

1994 முதல் 'கவிதாசரண்' என் வாசிப்புக்கு வந்தது. 1994 இதழ் 30-ல் இதழாசிரியர் வெளியிட்டிருந்த ஒரு முக்கிய வேண்டுகோள் என் கவனம் பெற்றது. அதில், “எங்களுக்கு உதவியாய், எங்களோடு தங்கி வளர்ந்து, அச்சகப் பணிகளைக் கற்று, பின்னர் அச்சகப் பொறுப்பேற்றுத் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளும் வகையில், தற்போது ஆதரவில்லாத, சைவ உணவுப் பழக்கமுள்ள, நம்பகமான சிறுவன் ஒருவனை ஏற்க விரும்புகிறோம். இதழ் வாசகர்கள், படைப்பாளர்கள் இவ்வகையில் முதலில் கடிதம் மூலம் தொடர்புகொண்டு உதவ வேண்டுகிறோம்.”

இந்த வரிகளில் அவர் குறிப்பிட்டிருக்கும், ‘சைவ உணவுப் பழக்கமுள்ள’ என்ற நிபந்தனை என்னைத் தொந்தரவு செய்தது. கணினியோ கைப்பேசியோ இல்லாத காலமது. கடிதம் எழுதினேன். உணவுப் பழக்கம், தமிழ்ச் சாதி சமூகத்துடனான தொடர்பு ஆகிய விஷயங்களைக் குறிப்பிட்டு, எழுத்தில் புரட்சிகள் பேசுபவருக்கும் அசைவ உணவு சாப்பிடுபவர் மீது ஏன் ஒவ்வாமை ஏற்படுகிறது என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தேன். என் கடிதத்தை அடுத்த இதழில் வெளியிட்டிருந்தார். அவர், தன் ஒரே மகனை மூளைக் காய்ச்சலில் இழந்துவிட்டார் என்பதும், அவரும் அவர் மனைவியும் தேர்ந்தெடுத்திருக்கும் இதழே ஓரியக்கமான வாழ்க்கை பற்றியும் அறியும் வாய்ப்பு கிட்டியது.

அன்று முதல், ‘கவிதாசர’ணின் எழுத்து இயக்கப் பயணத்தில் கால்டுவெல் பதிப்பின் உச்சம் தொட்ட நாள்வரை உரையாடியும் முரண்பட்டும் வாழ்ந்த தோழமை உள்ளம் கவிதாசரண்.

படைப்பிலக்கிய இதழாக வந்துகொண்டிருந்த ‘கவிதாசரண்’, இந்திய அரசியலின் அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு தன் ஒட்டுமொத்த பார்வையையும் சமூக அரசியலை மையமாக்கி விரிந்தது. இந்திய அரசியல் வரலாற்றையே அயோத்தி பாபர் மசூதி இடிப்புக்கு முன், பின் அதாவது அ.மு, அ.பி என்று பார்க்க வேண்டிய அவசியத்தை முன்னிறுத்தியது. அதன் போக்கில் தமிழக அரசியலில் திராவிட அரசியலை முன்னிறுத்தியும் கடுமையாக விமர்சனம் செய்யும் போர்வாளாக மாறியது. கவிதாசரணின் கருத்தியல் நேர்மை தனித்துவமானது. தன் இழப்புகளை அவர் அறிந்தே களத்தில் களமாடினார்.

“எனக்கென்று ஓர் இதழை ஏற்று நடத்துவது என்பது இலேசுப்பட்ட காரியம் இல்லை. என்னை அது தின்னக்கூடாத சந்தர்ப்பங்களில் எல்லாம் தின்று தீர்த்தது. என் வயிற்றுக்கான வருவாயை அப்படியே வாரிச் சுருட்டிக்கொண்டது” என்றார். உண்மைதான்.

சாதி கெட்டு சாதித்த தமிழன் கவிதாசரண். தன் மனைவியின் சாதி என்ன என்பதறியாமல்தான் அவர் கடைசிவரை வாழ்ந்தார் என்பது நம்ப முடியாத செய்திதான். ஆனால் அதுதான் அவர். அவர் மனைவி உடல் நலமின்றி இருந்த நாட்களில் மனைவியின் உறவினர்கள் வந்தார்கள் என்றும், அப்போதும் தனக்கு அவர்களின் சாதி தெரியாது என்றும் என்னிடம் சொன்னார். மனைவியின் இறப்புக்கு அவர்கள் வந்திருந்தபோதுதான், தன்னோடு இத்தனை ஆண்டுகளும் வாழ்ந்த திருமதி கவிதாசரணின் சாதியை அவர் அறிந்துகொண்டார். அன்பான வாழ்க்கைக்கும் அதில் கடந்துவரும் இன்ப துன்பங்களுக்கும் எதிலும் சாதி ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்திக்கொண்டே இருந்தார். திருமதி கவிதாசரண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த சில ஆண்டுகள், தன் மனைவியை ஒரு குழந்தையைப் போல அவர் கவனித்துக்கொண்டார்.

யாரையாவது உதவிக்கு வைத்துக்கொள்ளும்படி என் போன்றவர்கள் வேண்டுகோள் வைத்தபோதும், “எனக்கு அவள், அவளுக்கு நான், இதுவும் சுகமான சுமையாகத்தான் இருக்கிறது” என்று வாழ்க்கையின் அர்த்தங்களை உணர்த்தினார். அது மட்டுமல்ல, திருமதி கவிதாசரண் என்ற பெண்மணி கவிதாசரணின் இதழோடும் எழுத்தோடும் ஊடும்பாவுமாக நிரம்பி உரையாடல் நடத்தியவர் என்பதும் அந்த இணையரின் சிறப்பு.

கவிதாசரணின் அரசியல், சிற்றிதழ் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகப் பரப்பிலும் மிகவும் முக்கியமானது. தன் சமகாலத்தின் அரசியலை மிகவும் நேர்மையாகவும் கூர்மையாகவும் முன்வைத்தவர். அவரின் அரசியல் கட்டுரைகள் அசாதாரணமானவை. கவித்துவமிக்க மொழி நடையும்கூட.

‘பாலையாய் ஒரு மருதம் / பாறையாய் ஒரு சிகரம்’ என்று அவர் திமுக அரசியலை, அதிலும் குறிப்பாக, கலைஞரின் அரசியலை விமர்சனம் செய்த கட்டுரை திராவிட அரசியல் விமர்சனத்தில் ஆகச்சிறந்த பக்கங்கள்.

“நான் ஒருமுறை பெரியாரியவாதி ஒருவரைப் பார்த்து ‘திராவிடர் இயக்கமும் திராவிடக் கட்சியும் சாதிக்கு அப்பாற்பட்டவைதானே?’ என்று கேட்டேன். ‘ஆனால் சாதி நமக்கு அப்பாற்பட்டதாய் இல்லை. அதனால்தான் இயக்கத்தை சாதிக்கு அப்பாற்பட்டதாகக் கற்பித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அவர் பதில் சொன்னார்” என்று பதிவுசெய்திருக்கிறார் கவிதாசரண். இதைவிட தமிழக சாதி அரசியலை எப்படிச் சொல்ல முடியும்?! கலைஞரின் நிறை குறைகளை, தமிழ்ச்சாதி மனம் எவ்வாறு அணுகியது, கட்சியிலும் வெளியிலும், என்பதையெல்லாம் கவிதாசரண் அளவுக்கு எழுதியவர்கள் யாருமில்லை.

கவிதாசரண் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னொரு பங்களிப்பு, கால்டுவெல் ஒப்பிலக்கிணத்தின் மறுபதிப்பு. தான் குடியிருந்த வீட்டை அடமானத்துக்கு எழுதிக்கொடுத்துதான், அந்த மாபெரும் செயலை ஒரு தனிமனிதனாகச் செய்தார் கவிதாசரண். திராவிட அரசியல் வரலாற்றில் கால்டுவெல்லின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால், திராவிடக் கட்சிகள் ஆண்ட தமிழகத்தில்தான் கால்டுவெல்லின் இன்னொரு முகம் இருட்டடிக்கப்பட்டது. அந்த இருட்டடிப்புக்கான காரணம் அறிவுலகின் ‘தமிழ்ச் சாதி ஆணவம்’ என்பதை அறிந்தபின் கவிதாசரண் கொதித்தெழுந்தார்.

கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ முதல் பதிப்பு (1856), கால்டுவெல் சில விரிவாக்கங்களுடன் வெளியிட்ட 2-ம் பதிப்பு (1875). 3-ம் பதிப்பு (1913). 2-ம் பதிப்பில் குறிப்பிட்டிருந்த சில பக்கங்கள் இந்த 3-ம் பதிப்பில் விடுபட்டிருந்தன. விடுபட்ட பக்கங்களுக்குக் காரணமென்ன என்பதை 3-ம் பதிப்பில் சொல்லவில்லை. (அதன் பின்வந்த எந்தப் பதிப்பும் சொல்லவுமில்லை!) அந்தப் பகுதிகளின் பெயர் சொல்லுவதைக்கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டனர். அதில் மிகவும் முக்கியமானது:

‘தென்னிந்தியாவைச் சேர்ந்த பறையர்களும் திராவிடர்களா?” என்ற ராபர்ட் கால்டுவெல்லின் கட்டுரை. அந்தக் கட்டுரையின் கடைசி வாக்கியம், “I have added an Excures on ‘Sundara Pandia’ and I have endeavoured to answer the question, ‘Are the Paraiyas and Tudas Dravidians?’ and have adjoined some remarks ‘on the Dravidian physical type’ and ‘on the religion of the ancient Dravidian Tribes.”

மூன்றாம் பதிப்பைக் கொண்டுவந்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சனையே என்று அறிந்த கவிதாசரண், கால்டுவெல் வெளியிட்ட 2-ம் பதிப்பை அப்படியே மறுபதிப்பு செய்தார். காரணம் இது ஒரு வரலாற்று இருட்டடிப்பு மட்டுமல்ல, பட்டியலினச் சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட நூற்றாண்டுகாலத் துரோகம். ஒருவகையில் எழுத்தியலில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை என்று சீறினார் கவிதாசரண். (கவிதாசரண் பிறப்பால் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதையும் சேர்த்து வாசித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. வேறு இதை எப்படித்தான் எழுதி தொலைக்கட்டும்?)

‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஓர் அறக்கட்டளை நிறுவ வேண்டும்’ என்பதே, கவிதாசரணின் கடைசி ஆசையும் அவர் கண்ட கனவும். அதை எழுத்தாளர்களுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கனவுத் திட்டங்களை அறிவித்திருக்கும் இன்றைய திமுக அரசு… கவிதாசரண் என்ற எழுத்துலகின் இக்கனவை நிறைவேற்றுமா?

“நாங்கள் உங்களிடம் யாசிக்க வரவில்லை. வாசிப்பும் யோசிப்பும்கூட வாழ்வின் ஆகப்பெரும் முயற்சிகள் என்பதை உங்களுக்கு உறுத்தலில்லாமல் முன்வைக்கவே விரும்பி வந்திருக்கிறோம். எங்களைவிட எங்கள் கருத்துகள் முக்கியம். எங்கள் கூக்குரல் அதனினும் முக்கியம். கவிதாசரணை வாசிக்கலாமா? எங்கள் நூல்களை வாசியுங்கள். பேசுங்கள், உங்கள் பேச்சு இந்திய மக்களை அதிர வைக்கும் கூக்குரலாகவேகூட முழங்கட்டும்” என்று எழுதியவர் கவிதாசரண்.

கவிதாசரணின் கால்டுவெல் பதிப்பு அவருக்கு ஏற்படுத்திய மன உளைச்சல், பொருளாதார இழப்பு, அடமானம் வைத்த வீட்டை விற்று இடம்பெயர்ந்த வாழ்க்கை… திருச்சி மலை அடிவாரத்தில் காவிரி வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது தன்னைக் கரைத்துக்கொண்டு... விடைபெற்றுவிட்டார்.

பின்குறிப்பு:

கவிதாசரண் பிறந்த ஊர் திருச்சி.

இயற்பெயர்: மு. சண்முகம்.

பிறந்த தேதி: 21.10.1935

மறைவு: 28-11-2021

மனைவி பெயர்: நாகலெட்சுமி

‘கவிதாசரண்’ முதல் இதழ்: அக்டோபர் 1991

கடைசி இதழ்: மார்ச் 2009.

- புதியமாதவி, எழுத்தாளர், 'பச்சைக்குதிரை', ‘அவள்களின் நாட்குறிப்புகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: mallikasankaran@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE