சென்னையில் ஆண் குழந்தை விற்பனை: தாய் உட்பட 4 பேர் கைது!

By ரஜினி

சென்னை, புழல் காவாங்கரை கேஎஸ் நகரைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி யாஸ்மின் (28). கடந்த 27-ம் தேதி மதியம், புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து தன்னிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார் யாஸ்மின்.

11 வருடங்களுக்கு முன்பு யாஸ்மினுக்கும் மோகனுக்கும் திருமணம் நடந்து, 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். யாஸ்மின் மீண்டும் கர்ப்பமானபோது ஏற்பட்ட பிரச்சினையால் மோகன் பிரிந்து சென்றுவிட்டார்.

வறுமை காரணமாக, வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க திட்டமிட்டு, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஜெயகீதா என்பவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார் யாஸ்மின். 5 மாதக் கருவைக் கலைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும், குழந்தையைப் பெற்று குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் குழந்தையை நல்ல முறையில் வளர்ப்பார்கள், பணமும் கிடைக்கும் என்று ஜெயகீதா யோசனை சொல்லி இருக்கிறார். இதை யாஸ்மினும் ஏற்றுக்கொண்டார். கடந்த 21-ம் தேதி வண்ணாரப்பேட்டை மருத்துவமனையில் யாஸ்மினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஜெயகீதா

25-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன யாஸ்மின், குழந்தையுடன் புரசைவாக்கத்துக்கு வந்தார். அங்கு காத்திருந்த ஜெயகீதாவும் அவரது தோழி தனமும் அங்கிருந்த ஒரு தம்பதியிடம் யாஸ்மினின் குழந்தையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களும் குழந்தையை வாங்கிக்கொண்டு ரூ.2.50 லட்சத்தை யாஸ்மினிடம் கொடுத்து, வெற்றுத்தாளில் கையெழுத்தும் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

பணத்துடன் யாஸ்மின் ஆட்டோவில் புளியந்தோப்பு ஆட்டுத் தொட்டி அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத சிலர் ஆட்டோ ஓட்டுநரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார் யாஸ்மின்.

இதையடுத்து போலீஸார் ஜெயகீதாவைப் பிடித்து விசாரித்ததில், ஜெயகீதா தனது தோழிகளான தனம், லதா, ஆரோக்கியமேரி, ஆகியோருடன் சேர்ந்து குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையை வாங்கி விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. ஏற்கெனவே யாஸ்மின் கருமுட்டைகளை பணத்துக்காக விற்றதாக தெரிவித்த ஜெயகீதா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலக உதவியாளர் சிவக்குமாருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால், யாஸ்மினின் குழந்தையை அவர்களுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு பேரம் பேசி விற்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

தனம்

மேலும், குழந்தையை ரூ.2.50 லட்ச ரூபாய்க்கு விற்று, அதில் ரூ.1.70 லட்சத்தை யாஸ்மினுக்கு கொடுத்துவிட்டு, கமிஷன் தொகை ரூ.80 ஆயிரத்தை ஜெயகீதா, மேரி, தனம் 3 பேரும் பிரித்து எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, யாஸ்மின் பணத்தை யாரோ திருடிச் சென்றதாகச் சொன்னதால் தன்னிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தைக் கொடுத்ததாக ஜெயகீதா போலீஸிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வழிப்பறி நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லததால், யாஸ்மினிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது, யாஸ்மின் பணத்தைப் பதுக்கி வைத்துக்கொண்டு வழிப்பறி நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, மூலக்கொத்தளத்தில் சிவக்குமாரின் வீட்டிலிருந்த குழந்தையை மீட்ட போலீஸார், யாஸ்மின் வீட்டிலிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர். குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்த யாஸ்மின், இடைத்தரகர் தனம், ஜெயகீதா, குழந்தையை வாங்கிய சிவக்குமார், ஆட்டோ டிரைவர் சையது தஸ்தகீர், ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து குழந்தை விற்பனை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு யாஸ்மின், ஜெயகீதா, தனம், சிவக்குமார் ஆகிய நால்வரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட லதாவையும் ஆரோக்கியமேரியையும் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE