‘பச்ச உடம்புக்காரி’ என்று கரிசனப் போர்வை போர்த்தி முடக்காதீர்!

By கீதா இளங்கோவன்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஜூலி அன்னே ஜெண்டர் நேற்று அதிகாலையில், பிரசவ வலியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றது ஊடகங்களில் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

‘அதிகாலை 2 மணி. எனக்கு வலி தீவிரமாக இல்லை. மருத்துவமனையும் அருகில் இருந்ததால், நானும் என் கணவரும் சைக்கிளிலேயே சென்று விடுவோம் என்று தீர்மானித்தோம். பிரசவத்திற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும் என்று முன்னதாகத் திட்டமிடவில்லை. மருத்துவமனை போய், ஒரு மணி நேரத்தில் ஆரோக்கியமாக, அற்புதமாக எங்கள் பெண் குழந்தை பிறந்தாள்’ என்று தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஜூலி. இது தொடர்பாக எழுந்த எண்ணவோட்டங்களைப் பகிர நினைக்கிறேன்.

ஜூலி அன்னே ஜெண்டரின் செயல் இந்தியப் பெண்களுக்கும், தமிழ்நாட்டுப் பெண்களுக்கும் புதிதல்ல. சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேண்டுமானால் செல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், கிராமங்களில், நிறைமாத கர்ப்பிணியாக காட்டுவேலை செய்யும் பெண்கள், பிரசவ வலியெடுத்தவுடன் வீட்டுக்கோ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ நடந்து சென்று குழந்தை பெற்றிருக்கிறார்கள். நகரத்தில் வசிக்கும் என் தோழியின் தாய், பிரசவ வலியெடுத்த பின், தன் கணவருக்கு டீ போட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்த வீட்டு அக்காவுடன் பக்கத்து தெரு மருத்துவமனைக்கு நடந்து சென்றுபோய் பிரசவித்த கதையைச் சொல்லியிருக்கிறார். இதுபோல பல கதைகள் எளியபெண்களிடம் உண்டு.

சைக்கிளில் ஜூலி அன்னே ஜெண்டர்...

இது ஒருபுறம் இருக்க, அரசியல்வாதிகளாக இருந்த நமது முன்னோடிப் பெண்களும், கர்ப்பிணியாக இருந்தபோதே பல்வேறு போராட்டங்களிலும், கூட்டங்களிலும் பங்கேற்றிருக்கிறார்கள். குலக்கல்வித் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியாக பங்கெடுத்தவர் தமிழ்நாட்டின் முதல் பட்டியலினப்பெண் அமைச்சராகவும், பிறகு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த சத்தியவாணி முத்து அம்மையார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கிருந்து பிரசவத்துக்கு நேரடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண்கள் தமது அரசியல் வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் பிரித்துப் பார்ப்பதில்லை. கர்ப்பிணியாக இருப்பது ஒருபுறம் இருக்க, அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் முனைப்புடன் பங்கேற்கிறார்கள். வலிவரும் போது பிரசவிக்கச் செல்கிறார்கள். ஆனால், பெண்கள் தயாராக இருக்கும் அளவுக்கு இந்திய அரசியல் அரங்கங்களும், உயர்மட்ட அவைகளும், சட்டப்பேரவைகளும், உள்ளாட்சி மன்றங்களும், பஞ்சாயத்து அலுவலகங்களும் தயாராக இருக்கின்றனவா ? அதாவது, கர்ப்பிணிகளாக இருப்பவர்களுக்கும், பாலூட்டும் தாயாக இருக்கும் பெண் உறுப்பினர்களுக்கும், தலைவிகளுக்கும் தேவையான வசதியுடன் அவை இருக்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட வசதிகள் பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் அனைத்து மன்றங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை.

தவிர, கர்ப்பிணிகளாக, பாலூட்டும் தாய்மார்களாக இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளாகவும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் இருப்பதை இயல்பாக ஏற்கும் மனநிலை நமது சமுதாயத்துக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பெண் போகத் தயாராக இருந்தாலும், “பச்ச உடம்புக்காரி இப்படி அலையணுமா” என்று ‘கரிசனப்’ போர்வையில் வீட்டுக்குள் முடக்கி விடுகிறார்கள்.

முதலாவது பத்தியில் குறிப்பிட்ட அதே நியூசிலாந்துக்குச் செல்வோம். அந்நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். ஜெசிந்தா, பிரதமராக பதவியேற்றபின், பிரசவத்துக்காக 6 வார விடுமுறை எடுத்துக்கொண்டு, குழந்தையுடன் பணிக்குத் திரும்பினார். அவர் ஐ.நா சபை கூட்டத்துக்காக (2018), நியூயார்க்குக்கு 6 நாள் அரசுமுறைப் பயணமாக செல்லவேண்டியிருந்தது. அங்கு நடைபெற்ற 73-வது ஐ.நா சபைக் கூட்டத்தில் தனது 3 மாதக் குழந்தையுடன், பாலூட்டும் தாயாக கலந்துகொண்டார். அவர், நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டு அமர்வில் உரையாற்ற வேண்டும். கூட்டத்தில் தன்னுடன் இருந்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தவர், உரைக்கான நேரம் வந்தபோது தன் இணையரிடம் குழந்தையை விட்டுவிட்டு மேடைக்குச் சென்று பேசினார். ஒரு நாட்டின் பிரதமர் தனது குழந்தையுடன் ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டது இதுதான் முதல் முறை.

அங்கு அரசுசார்ந்த பிற நிகழ்ச்சிகளில் இணையருடன் பங்கேற்பது மரபு. ஆனால், தனது இணையர் கிளார்க் கேபோர்டு குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால், ஜெசிந்தா தனியாகத்தான் கலந்து கொண்டார். அவரின் பிரச்சினையை உணர்ந்த நியூசிலாந்து அரசு, பிரதமரோ, அமைச்சர்களோ வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லும்போது, அவர்களின் குழந்தையை கவனித்துக் கொள்ள காப்பாளர் ஒருவரையும் அரசு செலவில் அழைத்துச் செல்லலாம் என்று விதிகளில் திருத்தம் கொண்டுவந்தது.

நமது நாட்டில், அரசியலில் நிறைய இளம்பெண்கள் பங்கேற்க வருகிறார்கள். கவுன்சிலர்களாக, உள்ளாட்சித் தலைவிகளாக, மேயராக, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சர்களாக வெற்றிகரமாக பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக, அவர்கள் செயலாற்றும் மன்றங்களில், மகப்பேறு தொடர்பான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். நியூசிலாந்தைப் போல சட்டவிதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, பாலூட்டும் தாயை, கர்ப்பிணியை நம் தலைவியாக பொது அரங்கில் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு நமக்கு வேண்டும். அப்போதுதான் துடிப்புமிக்க இளம்பெண்களை பெருமளவில் அரசியலுக்கும், சமூக வாழ்க்கைக்கும் ஈர்க்கமுடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE