விதவைகளே வாருங்கள், பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் உங்கள் குழந்தையைப் பெற்றெடுங்கள்!

By கீதா இளங்கோவன்

“விதவைகளே, இங்கு வாருங்கள், உங்கள் குழந்தையை பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் பெற்றெடுங்கள். இந்த மையத்தில் குழந்தையை விட்டுச் செல்வதோ அல்லது எடுத்து செல்வதோ முழுக்க உங்கள் விருப்பம். நீங்கள் விட்டுச்சென்றால் இந்த மையம் உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்” - இது மகாத்மா ஜோதிபா பூலே 1863-ல் தொடங்கிய சிசுக்கொலை தடுப்பு மையத்தை விளம்பரப்படுத்த, புனே நகரில் விநியோகிக்கப்பட்ட நோட்டீஸில் இருந்த வாசகங்கள்.

பெண்கள் மேல் அளப்பரிய பரிவும், கருணையும் கொண்டவராலேயே இவ்வாறு கூறமுடியும். செய்ய முடியும். மகாத்மா ஜோதிபா பூலேயின் நினைவு நாள் இன்று.

கணவனை இழந்த பெண்ணை விதவை என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என்றாலும், 1860-களின் காலகட்டத்தை நினைவுகூரவும், பொதுவாக அனைவரின் புரிதலுக்காகவும் இங்கே பயன்படுத்துகிறேன். ஜோதிபா பூலே சிசுக்கொலை தடுப்பு மையத்தை துவக்கியதற்கு ஒரு பின்னணி உண்டு.

அது 1863-ல் புனே நகரில் நடந்த கொடுமையான ஒரு சம்பவம். ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த காசிபாய் என்ற விதவைப் பெண், கர்ப்பமுற்றார். கருவைக் கலைப்பதற்கு அவர் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. குழந்தை பிறந்தது. அந்தப் பெண்மணி, ஊரின் அவச்சொல்லுக்கு பயந்து, சிசுவைக் கொன்று, கிணற்றில் வீசிவிட்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் ஜோதிபா பூலேவை பெரிதும் பாதித்தது.

நிற்க. அந்தக் காலத்தில் விதவைகளின் கொடுமையான நிலையைப் பற்றி அறிந்து கொண்டால் தான், ஜோதிபா ஆற்றிய பணிகளின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும்.

அந்தக் காலத்தில், கணவனை இழந்த பெண்களை மொட்டையடித்து, வீட்டின் பின்புறமாக தனிமைப்படுத்தி, நல்ல உணவோ, உடையோ தராமல் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிடாமல் ஒதுக்கிவைத்தனர். இதனால் பல பெண்கள் குடும்பத்தால் கைவிடப்பட்டு, வறுமையில் வாடி, எந்த ஆதரவுமின்றி தானே உழைத்துப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்னர். `பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் பெரியார், இந்தியாவில் விதவைகளின் எண்ணிக்கை பற்றி ஒரு புள்ளிவிவரம் தருகிறார் : ‘1921 மக்கள் தொகை கணக்குப்படி, ஒரு வயதுள்ள விதவைகள் - 597, 1 முதல் 2 வயதுள்ள விதவைகள் - 494, 2 முதல் 3 வயதுள்ள விதவைகள் - 1,257, 3 முதல் 4 வயதுள்ள விதவைகள் 2,837, 4 - 5 வயதுள்ள விதவைகள் - 6,707, 5 - 10 வயதுள்ள விதவைகள் - 85,937, 10 - 15 வயதுள்ள விதவைகள் - 2,32,147, 15 - 20 வயதுள்ள விதவைகள் - 3,96,172, 20 - 25 வயதுள்ள விதவைகள் - 7,42,820, 25 - 30 வயதுள்ள விதவைகள் - 11,63,720 - ஆக மொத்த விதவைகளின் எண்ணிக்கை 26,31,788’ தலைசுற்றுகிறதா ? ஆம், அந்தக் காலத்தில் ஒரு வயதுக் குழந்தை முதல் விதவைகளாக இருந்துள்ளனர். ஜாதியையும், மதத்தையும் கட்டிக்காக்க சமுதாயத்தில் பரவலாக நடைபெற்ற குழந்தைத் திருமணமுறைதான் இதற்குக் காரணம். விதவை மறுமணமும் அனுமதிக்கப்படவில்லை. விளைவு, ஏராளமான பெண்குழந்தைகளின் வாழ்க்கை பலியானது.

ஒரு கணக்கு போட்டுப் பார்ப்போம். 1921-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகை சுமார் இரண்டரைக் கோடி. இதில் பெண்கள் சரிபாதி என்று வைத்துக் கொள்வோம். விதவைகளின் மொத்த எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம். அதாவது, அன்று ஐந்தில் ஒரு பெண் இந்தியாவில் விதவையாக இருந்திருக்கிறார். இது 1921-ம் ஆண்டு கணக்கு. அதற்கு சுமார் 58 வருடங்களுக்கு முன்பு, 1863-ல் மகாத்மா ஜோதிபா பூலே இந்த மையம் ஆரம்பிக்கும் போது விதவைகளின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு அதிமாக இருந்திருக்கும்.

ஏராளமான பெண்கள் பருவமடைவதற்கு முன்பே விதவையானவர்கள் என்பது மிகக்கொடுமை. இல்லற இன்பம் என்றால் என்னவென்றே அறியாமல் வாழ்ந்து மடிந்தனர். இயற்கையான உணர்வால் உந்தப்பட்டு, பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பெண்களும் கர்ப்பமுற்றுவிடுவோமோ என்று பயந்துபயந்து வாழவேண்டிய நிலைமை. இந்தச் சூழலில்தான், தனது நீண்டகால நண்பர் சதாசிவ பலால் கோவந்தே, தனது இணையர் சாவித்திரிபாய் ஆகியோருடன் சேர்ந்து, ஜோதிபா பூலே, சிசுக்கொலை தடுப்பு மையம் ஆரம்பித்தார். விதவை மறுமணத்தை ஊக்குவித்தார். பல பெண்கள் இந்த மையத்தில் தஞ்சம் புகுந்து குழந்தை பெற்றுக் கொண்டனர். ஜாதிக்கட்டுப்பாடுகள் நிறைந்த சமுதாயத்தில் அவரின் மையத்திற்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் எதிர்கொண்டு, 1880 வரை இந்த மையத்தை அவர் நடத்தியது மிகப் பெரிய சாதனை.

ஜோதிபா, தனது இணையர் சாவித்திரிபாய் பூலேவுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்து இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளிக்கூடத்தை 1848-ல் புனேவில் விஸ்ரம்பக் வாடா என்ற இடத்தில் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்ட இன மக்களின் நலனுக்கான பணிகள், ஜாதி, மத மறுப்புக்காக ஆரம்பித்த சத்யசோடக் சமாஜ் என்று இவர் ஆற்றிய மகத்தான பணிகள் எண்ணிலடங்காதவை.

பெண்ணின் இயற்கையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஜாதிகளும், மதங்களும் உருவாக்கிய `ஒழுக்க’ கண்ணாடியால் அவர்களை இன்றைக்கும் மதிப்பிடும் நிலையில், 150 ஆண்டுகளுக்கு முந்தைய பிற்போக்கான சமூகத்தில், எந்த முன்முடிவும் இல்லாமல் அவர்களை சக மனுசிகளாக மதித்த, அரவணைத்த, கல்வியறிவு புகட்டிய மகாத்மா ஜோதிபா பூலேக்கு ஒவ்வொரு பெண்ணும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE