கர்ப்பமான பள்ளி மாணவிகள் கல்வியைத் தொடரலாம்!

By சந்தனார்

தான்சானியாவில், கர்ப்பமான பள்ளி மாணவிகள் பள்ளிக்குத் திரும்ப விதிக்கப்பட்டிருந்த தடை ரத்துசெய்யப்பட்டிருப்பது, சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில், பள்ளி மாணவிகள் பாலியல் சுரண்டல்களுக்குள்ளாவது தொடர்ந்து நடந்துவரும் அவலம். மாணவிகளை வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், மாணவிகளுக்கு ஏதேனும் பொருட்களை வாங்கித்தந்து அவர்களைப் பாலியல் வல்லுறவு செய்வதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. ஒருபுறம் வறுமை, மறுபுறம் பாலியல் துன்புறுத்தல்கள் என அவதிப்படும் பள்ளி மாணவிகளில் சிலர் இதில் கர்ப்பமடைந்துவிடுவதுண்டு. அந்தச் சூழலில் பள்ளிகளும் அவர்களது கல்வியைத் தொடர அனுமதி மறுத்துவிடுகின்றன. பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கர்ப்பமான மாணவிகள் மட்டுமல்ல, கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்படும் மாணவிகளும் கர்ப்பமடைந்த பின்னர் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டனர். தான்சானியாவில் கடந்த ஆண்டு மட்டும் 5,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தக் காரணங்களால் தங்கள் கல்வியை இழந்தனர் என உலக வங்கியும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தான்சானியாவில் மட்டுமல்ல. ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் இதுபோன்ற தடைகள் அமலில் இருக்கின்றன. சியரா லியோன், எகுவடோரியல் கினி ஆகிய நாடுகள் மட்டும் இந்தத் தடையை விலக்கியிருந்தன. எனினும், கடந்த ஆண்டு சியரா லியோன் அந்தத் தடையை மீண்டும் அமல்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தான்சானியா இந்த முடிவை எடுத்திருப்பது புரட்சிகரமான விஷயமாகவே கருதப்படுகிறது.

மாணவிகள் விவரமறியாத வயதில், சில ஆண்களின் வக்கிரங்களால் பாதிக்கப்படும் சூழலில், அந்தச் சிறுமிகள் தங்கள் கல்வியையும் தொடர அனுமதிக்கப்படாதது நியாயமற்றது என்பதால், ‘சேஞ்ச் தான்சானியா’ எனும் அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து தான்சானியா அரசை வலியுறுத்திவந்தனர்.

இந்நிலையில், நவம்பர் 24-ல், தான்சானியா கல்வித் துறை அமைச்சர் ஜாய்ஸ் டாலிசாக்கோ, “பள்ளியிலிலிருந்து இடைநின்ற மாணவ மாணவிகள் அனைவரும் மீண்டும் பள்ளி திரும்ப தடையாக இருந்த அனைத்து முட்டுக்கட்டைகளும் நீக்கப்படுகின்றன. கர்ப்பமானதால் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவிகள் உட்பட” என்று அறிவித்தார்.

இதுகுறித்து, கத்தார் ஊடகமான ‘அல் ஜஸீரா’விடம் பேசிய தான்சானியா கல்வித் துறைச் செயலர் லியனார்டோ ஆக்விலாப்போ, “இதுகுறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டது. சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் தென்படுகிறது. சமூகவலைதளங்களில் இதுகுறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடந்த நிலையில், இந்த மனமாற்றம் உருவாகியிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உண்மையில், இது சாத்தியமானதன் பின்னணியில் ஆட்சிமாற்றமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. தான்சானியாவின் முந்தைய அதிபர் ஜான் மகுஃபுலி பழமைவாதச் சிந்தனை கொண்டவர். “தாய்மார்களுக்கு எனது அரசு கல்வி புகட்டாது” என்று கூறியவர். “மாணவிகள் இலவசமாகக் கல்வி கற்க நான் பணம் தருகிறேன். மாணவி கர்ப்பமடைகிறாள். பிரசவத்துக்குப் பின்னர் மீண்டும் பள்ளிக்கு வருகிறாள். இதையெல்லாம் எனது அரசு அனுமதிக்காது” என்று கடுமை காட்டியவர்.

‘சேஞ்ச் தான்சானியா’ அமைப்பினர் இவ்விஷயத்தில் எடுத்த முயற்சிகளை அவரது அரசு கடுமையாக விமர்சித்தது. இது பள்ளி மாணவிகள் மத்தியில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் சதி என்றும், வெளிநாடுகளின் சமூக விழுமியங்களைத் தான்சானியாவில் புகுத்தும் முயற்சி என்றும் ஆட்சியாளர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவந்தனர்.

தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹஸான்

கடந்த மார்ச் மாதம் ஜான் மகுஃபுலி மறைந்ததைத் தொடர்ந்து, சாமியா சுலுஹு ஹஸான், தான்சானியாவின் முதல் பெண் அதிபராகப் பதவியேற்றார். அதன் பின்னர் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் மனமாற்றம், இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்திருக்கிறது. பள்ளிகளில் பாலியல் கல்வி கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஊட்டுவதன் மூலம் சமூக அவலங்களைக் களையலாம் என்றும் கல்வியாளர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். நல்லது நடக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE