லென்ஸ் சிமிட்டும் நேரம் - 18

By வனிலா பாலாஜி

ஹம்பி, கர்நாடக மாநிலத்தின் ஹோஸ்பெட் நகரின் அருகில், துங்கபத்திரா நதிக்கரையின் தெற்கே அமைந்துள்ள ஓர் சிறு கிராமம். சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல புராதனச் சின்னங்களை தனக்குள் உள்ளடக்கி வைத்திருக்கும் இடம்.

ஒரு காலத்தில் விஜயநகரப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கிய ஹம்பியில், இப்போது அவர்கள் விட்டுச் சென்ற பல கோயில்களும் மாளிகைகளும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. விஜயநகர மன்னர்களையும், அந்த மக்களின் கலாச்சாரத்தையும் நமக்கு நினைவூட்டும் அடையாளச் சான்றாக நிற்கிறது ஹம்பி.

ஹம்பி செல்வதென்றாலே மனதுக்குள் ஒரு குதூகலம். ஏனென்று தெரியவில்லை. அங்குள்ள கோயில் வளாகங்களையும் மாளிகைகளையும் காணும்போது, மனம் கிருஷ்ணதேவராயரின் காலத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மினோல்டா கேமரா வைத்திருந்த நேரம், 2005-ம் வருடம் என நினைக்கிறேன். அப்போது தான் முதல் முறையாகக் ஹம்பியைக் காணச் சென்றோம்.

அதன் பிறகு 3 முறை சென்றாகிவிட்டது. இன்னமும் சலிக்காத இடமாகவே இருக்கிறது ஹம்பி. எனது ஹம்பி பயணங்களில் நான் எடுத்தப் படங்களை இங்கே உங்களுக்காகப் பகிர்ந்திருக்கிறேன்.

மூன்று முறை எனது குடும்பத்துடன் ஹம்பிக்குப் பயணமான நான், 4-வது முறை நண்பர்களுக்காகச் சென்றேன். மூத்த மகன் மதிக்கு வரலாற்றில் சற்று ஆர்வம் என்பதால், அவனையும் என் நண்பர்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டேன். இந்தப் பயணத்தில், என் மனதுக்குப் பிடித்தமான ஒரு படத்தை என்னால் எடுக்க முடிந்தது. அன்றும் வழக்கம்போல விருபாக் ஷா கோயில், பட்டாபிராமர் கோயில், கடை வீதிகள் எனச் சுற்றிக் கொண்டிருந்தோம். மாலைச் சூரியன் மேற்கை நோக்கி பயணித்த தருணத்தில், விட்டலா கோயிலைப் பார்த்துவிட்டு அடுத்த இடத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம்.

அப்போது வண்டியிலிருந்து பின்னோக்கி திரும்பிப் பார்க்கையில், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இருவர் அழகான கோயில் கோபுர பின்னணியில் நடந்துவந்து கொண்டிருந்தனர். ஒரே படத்தில், நமது நாட்டு கோபுரமும், வெளிநாட்டவரும் அருகருகே அமைந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஹம்பியில் பட்டாபிராமர் கோயில் வளாகம் எனது மனதுக்கு மிக நெருக்கமான இடம். ஏனென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ எனக்குள் ஓர் ஈர்ப்பு.

இந்தக் கோயில் கி.பி 1540-ல், அச்சுதராயன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இதன் கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்லதோர் உதாரணம். இது, சோழர்களின் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது, கமலாபுரம் தொல்பொருள் அருங்காட்சியகத்துக்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால், விருபாக் ஷா, விட்டலா கோயில்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏனோ இங்கு அதிகம் வருவதில்லை.

விட்டலா கோயிலைப் போலவே பிரம்மாண்டமாய் தான் இருக்கிறது பட்டாபிராமர் கோயிலும். விட்டலா கோயில் அளவுக்கு அழகிய வேலைப்பாடுகள் இல்லாவிட்டாலும் அழகில் கொஞ்சமும் குறைசொல்லமுடியாத அளவுக்கு இருக்கிறது பட்டாபிராமர் கோயில்.

இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரம்மாண்டத்தை கூட்டுகின்றன. கோயில் முழுக்கச் சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கருவறைக்குச் சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் படையெடுப்பின் போது அங்கிருந்த சிலை சூறையாடப்பட்டிருக்க வேண்டும்.

இந்தக் கோயில் கோபுரத்தின் அடிப்பாகத்தை கற்களாலும், மேல் பாகத்தை செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தால் சற்றே களையிழந்து போயிருந்தது. அதையும் கற்களால் கட்டியிருந்தால் இன்றும் அழகும் எழிலும் குறையாமல் அப்படியே இருந்திருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE