பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

கோவை

ரயில் நிலையம் அருகில் டாக்ஸி ஓட்டுநருடன் ஒருவர்...

“கணுவாய்க்குப் போகணும். வர்றீங்களா?”

“வரலாம், ஆனா, கிலோமீட்டருக்கு அஞ்சு ரூபா அதிகமா தரணும்...”

“ஏம்பா, அதான் பெட்ரோல், டீசலுக்கு வரியைக் குறைச்சிட்டாங்களே? ஏத்தும்போது மட்டும் ஏத்துறீங்க, இறக்கும்போது இரக்கம் காட்டமாட்டீங்களா?”

“கவர்மென்ட் எப்பவுமே இரக்கம் காட்டுனாத்தான் நாங்களும் இரக்கம் காட்டமுடியும். இல்லைன்னா வண்டி மாதிரி நாங்களும் இறக்கத்துக்குப் போகவேண்டியதுதான்!”

- பா.சக்திவேல்,

கோவை

திருச்சி

ஹெட்போஸ்ட் ஆபீஸ் சிக்னலில் காத்திருக்கும் இருவர்...

“என்னண்ணே... அவசரமாப் போயிக்கிட்டிருக்கீங்க போல?”

‘‘பெட்ரோல் போடுறதுக்கு பங்க்குக்குப் போயிக்கிட்டிருக்கேன் தம்பி...”

‘‘அதுக்கு ஏன் இப்படிப் பறக்குறீங்க... பங்க் எங்கே ஓடிப்போயிடப் போவுது?”

“பங்க் அதே இடத்துலதான் இருக்கும். ஆனா... பெட்ரோல் விலை நிக்குமா? நொடிக்கு நொடி ஏறிக்கிட்டேல்ல இருக்குது...’’

“அதுக்காண்டி சிக்னலைத் தாண்டி ஓடிடாதீங்க. இன்ஜினை ஆஃப் பண்ணுங்க.”

- க.விஜயபாஸ்கர்,

திருச்சி

திருப்பூர்

தேநீர்க் கடையில்...

“சிலிண்டர் விலை தாறுமாறா ஏறிட்டிருக்கு... அடுத்த கஸ்டமர் வர்ற வரைக்கும் ஸ்டவ்வை அணைச்சு வச்சா கேஸ் மிச்சமாகுமே மாஸ்டர்?!”

“முக்குல இருக்கிற டீக்கடைக்கு பைக்கைத் தூக்கிட்டு வர்ற நீயெல்லாம் எரிபொருள் சிக்கனத்தைப் பத்திப் பேசற பாரு. நேரம்யா!”

- சாரதி,

திருப்பூர்

தஞ்சாவூர்

காலை நேர வாக்கிங்கில் இருவர்...

“என்னய்யா... கக்கத்துலே குடையோட வந்துட்டே?”

“கனமழை எப்ப வேணும்னாலும் வரும்னு சொல்லிருக்காங்களே... வா காபி சாப்பிடலாம்!”

“அவங்க என்ன சொல்றது... காபி வாங்கித்தர்றேன்னு சொல்ற... மழை கன்ஃபார்ம்டு. வடையும் சொன்னீன்னா புயலே வந்துடும்.”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

தஞ்சாவூர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE