தாக்‌ஷாயணி வேலாயுதன்: அரசியலமைப்பு நிர்ணய சபையை அலங்கரித்த பட்டியலினப் பெண்மணி!

By கீதா இளங்கோவன்

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் இன்று.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த ஒரே பட்டியலினத்துப் பெண்மணியான தாக் ஷாயணி வேலாயுதன் அவர்களைப் பற்றி, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? பொதுவாகப் பெண்களின் பங்களிப்பை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பை பொதுச்சமூகம் பொருட்படுத்துவதில்லை, நினைவுகூர்வதுமில்லை. இதை மாற்ற வேண்டும். நமது முன்னோடிப் பெண்களின் வாழ்க்கையை, போராட்டங்களை, பணிகளை, அளப்பரிய பங்களிப்பைத் தொடர்ந்து பேசுவோம்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இருந்த 299 உறுப்பினர்களில் 15 பேர் பெண்கள். இதில் ஒருவர்தான் தாக்‌ஷாயணி வேலாயுதன். 1912-ல், எர்ணாகுளம் முலவுகாட்டில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்ட புலையர் இனத்தைச் சேர்ந்தவர். இவரது வாழ்க்கை, ஒரு பெண்ணாகவும், பட்டியலினத்தவராகவும் பல போராட்டங்கள் நிறைந்தது. அன்றைய காலகட்டத்தில், ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களுக்கு தங்கள் மார்பகங்களை மறைத்து மேலாடை அணிய அனுமதி மறுக்கப்பட்ட கொடுமை நிலவியது. அதை உடைத்து, தாக்‌ஷாயணி தான் முதல் முறையாக மேலாடை அணிந்து பள்ளி சென்றவர்.

இந்த இனத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியாவிலேயே படித்து அறிவியல் பட்டதாரியான முதல் பட்டியலினத்துப் பெண்ணும் இவரே. எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் வேதியியல் பட்டப்படிப்புக்காக சேர்ந்த போது, அந்தப் படிப்பில் சேர்ந்த ஒரே பெண் தாக்‌ஷாயணி மட்டுமே. பிறகு, மெட்ராஸில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். 1940-ல் வார்தா ஆசிரமத்தில், ராமன் வேலாயுதனை மணந்து கொண்டார். காந்தி, கஸ்தூர்பா மற்றும் தொழுநோயாளி ஒருவரின் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்தது என்று தாக்‌ஷாயணியின் மகள் மீரா குறிப்பிடுகிறார்.

தாக்‌ஷாயணி, 1945-ல் கொச்சி சட்டப்பேரவை கவுன்சிலின் உறுப்பினராகி, 1946-ல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினரானார். இந்த சபையின் பல விவாதங்களில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

“அரசியலமைப்பு நிர்ணய சபையானது, அரசியலமைப்புச் சட்டத்தை மட்டும் உருவாக்கக்கூடாது, மக்களுக்கு புதிய வாழ்க்கை மாதிரியை ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்பு சட்டத்திற்கு பல மாதிரிகள் உள்ளன. எனவே, அதனை உருவாக்குவது எளிது. ஆனால், புதிய அடித்தளத்தில் மக்களுக்கு புத்துயிரூட்ட தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட வேண்டும். பலவகையான பாதுகாப்புக் கூறுகள் எங்களுக்குத் தேவையில்லை. அறவுணர்வுடன் கூடிய பாதுகாப்பே எங்களுக்கு உண்மையான பாதுகாப்பை அளிக்கும். சமுதாய ஊனங்களை உடனடியாக நீக்குவதே எங்களுக்குத் தேவை. எங்களுக்கான சுதந்திரத்தை, ஆங்கிலேய அரசிடமிருந்து மாத்திரமல்ல, இந்தியர்களிடமிருந்தும்தான் பெற வேண்டும்” என்று, 1946 டிசம்பர் 19-ல் தாக் ஷாயணி முழங்கிய உரை, மிக காத்திரமானது. அடிப்படையில் காந்தியவாதியாக இருந்தாலும், பட்டியலினத்தவர் தொடர்பாக அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்ற பல விவாதங்களில், தாக்‌ஷாயணி டாக்டர் அம்பேத்கருக்கு உறுதுணையாக நின்று, அவருடன் இணைந்து செயல்பட்டார்.

ஒடுக்கப்பட்ட இனத்து இளையோர் கலைச்சங்கத்தின் தலைவராகவும், 1946-49-ல் மெட்ராஸில் ‘தி காமன் மேன்’ இதழின் நிர்வாக ஆசிரியராகவும் இருந்துள்ளார் தாக் ஷாயணி. பிறகு ‘மகிளா ஜக்ரிதி பரிஷத்’ அமைப்பை நிறுவி, அதன் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 1978-ல், தனது 66-வது வயதில் உடல் நலன் குன்றி காலமானார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே வைத்திருந்த தாக் ஷாயணி என்ற பெயரை இவருக்கு சூட்டிய பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, வாழ்க்கை முழுவதும் ஜாதிப்பாகுபாட்டுக்கு எதிராகவும், பட்டியலின மக்களின் கல்விக்காகவும் பாடுபட்டார்.

கேரள சட்டப்பேரவையின் முதல் பட்டியலின பெண் உறுப்பினரான இவரை கவுரவிக்கும் வகையில், கேரள அரசு தாக் ஷாயணி வேலாயுதன் விருதை நிறுவியுள்ளது. ‘கேரள மாநிலத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பணியில் சிறந்து விளங்கும் பெண்ணுக்கு, இந்த விருது அளிக்கப்படும்’ என்று 2019-ல் அம்மாநில நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் இசாக், சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் இடம்பெற்ற பிற பெண்கள் ஹன்சா ஜிவ்ராஜ் மேதா, அம்ரித் கவுர், அம்மு சுவாமிநாதன், பேகம் ஐசஸ் ரசூல், துர்காபாய் தேஷ்முக், கம்லா சவுத்ரி, லீலா ராய், மாலதி சவுத்ரி, பூர்ணிமா பானர்ஜி, ரேணுகா ராய், சரோஜினி நாயுடு, சுசேதா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், அன்னி மாஸ்கரனே ஆகியோர்.

கட்டுரையாளர்: சமூக செயல்பாட்டாளர் - ஆவண பட இயக்குநர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE