லென்ஸ் சிமிட்டும் நேரம் - 16

By வனிலா பாலாஜி

போட்டோகிராஃபியில் பேரார்வம் கொண்டவர்கள், வாழ்நாளில் ஒரு முறையேனும் செல்ல விரும்பும் ஊர் வாராணசி. ஆம், நானும் அப்படியான பல வண்ணக் கனவுகளை எண்ணத்தில் தேக்கிவைத்துக் கொண்டுதான் இருந்தேன்.

2016-ல், புகைப்படக்கார நண்பர்கள் சிலர் வாராணசி செல்லவிருப்பதாக சக நண்பர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். “விருப்பமிருந்தால் நீங்களும் எங்களுடன் சேர்ந்து கொள்ளலாம்” என எனக்கு ஆஃபரும் கொடுத்தார். பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் என்பதால், “யோசித்துச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டேன். பாலாஜி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமே என அவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். “இப்படி ஒரு வாய்ப்பு அமைவது அரிது. உனக்கு விருப்பமாக இருந்தால் யோசிக்காதே... கிளம்பிவிடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அப்போதே, எனது நண்பரை அழைத்து நானும் வருவதாக உறுதிப்படுத்தினேன். நண்பர்கள் சிலர் சென்னையிலிருந்தும், சிலர் பெங்களூருவில் இருந்தும் புறப்படுவதாக ஏற்பாடு. வாராணசியில் தங்குவதற்கு அறைகளை இங்கிருந்தே முன்பதிவு செய்திருந்தோம். 4 நாட்கள் அங்கு தங்குவதாக ஏற்பாடு. நாங்கள் சென்றிருந்த நேரம் கங்கையில் நீர்வரத்து சற்று அதிகமாகவே இருந்தது. அண்மையில் மழை பொழிந்திருந்ததால் நீரும் கலங்கலாகவே இருந்தது. வாராணசி முழுவதுமாகச் சேர்த்து கங்கையில் மொத்தம் 88 படித்துறைகள். காலையில் எழுந்ததும் படங்கள் எடுப்பதற்காகவே படித்துறைகளைத் தேடிப் பயணித்தோம். 4 நாட்களில் சுமார் 50 கி.மீ தூரம் இப்படி நடந்திருப்போம்.

ஒவ்வொரு படித்துறையிலும் பல தரப்பட்ட மக்களையும் அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகளையும் பார்த்தவாறே படங்கள் எடுத்துக் கடந்தோம். கங்கையில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் படகு சவாரியும், கங்கை ஆரத்தியும் நடக்கவில்லை. அடுத்த பயணத்தில் கண்டிப்பாக அதையும் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டோம். மண் குடுவை டீயையும், வாராணசி ஸ்பெஷல் லஸ்ஸியையும் சுவைத்தவாறே நடந்தோம்.

வாராணசியில் குஸ்தி பள்ளிகளும் இருப்பதை முன்கூட்டியே நண்பர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆகவே அங்கும் ஓர் விசிட் செய்து படங்களைக் க்ளிக்கிக் கொண்டோம்.

நண்பர்கள் புடைசூழ சென்றிருந்ததால், முன்பின் தெரியாத ஊருக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படவில்லை. மொழி புரியாத ஊராக இருந்தாலும், அந்த மக்களிடம் நாங்கள் படித்துக் கொண்டதும் பார்த்துத் தெரிந்து கொண்டதும் ஏராளம். மொத்தத்தில் அந்தப் பயணம் எங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE