இசைவலம்: பிழை தீர்க்க ஒரு பாட்டு!

By ரவிகுமார் சிவி

கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து எண்ணற்ற பக்தர்கள், அய்யப்பனின் சபரிமலை சந்நிதானத்துக்குப் போகத்தொடங்கும் மாதம் இது. அய்யப்பனை மனம் குளிர பூஜிக்கும் பக்தர்கள் இறுதியாகப் பூஜையை முடிப்பதற்கு முன், ‘அறிந்தும் அறியாது செய்த பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் பகவானே...’ என்று வசனமாகப் படிப்பார்கள். உண்மையில் இது ஒரு பாடல்.

செய்த பிழை பொறுத்து சிறியேனை ஆட்கொண்டு

சிந்தையில் வருவாயே குளத்தூரில் அய்யனே…

வைதாலும் அவர் வாழ அருள் செய்யும் மணிகண்டா…

வாயார வாழ்த்தி உன்னை வணங்குவோர்க்கு என்ன செய்யாய்…’

எனும் இந்தப் பாட்டுக்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார் வீரமணிதாசன். அதோடு இந்தக் காணொலியில் பாலகன் அய்யப்பனோடு அளவளாவும் பக்தனாகவும் தோன்றுகிறார். வீரமணிதாசனின் குரலில் உருக்கமும் பக்தியும் போட்டி போடுகின்றன.

ஸ்ரீ குருமண்டலம் அகஸ்தியர் ஆஸ்ரமம் தயாரித்திருக்கும் இந்தக் காணொலியில் இடம்பெற்றிருக்கும் பாடல், காலம்காலமாகப் பாரம்பரியமாகப் பாடப்பட்டு வரும் ஒன்று. கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்த மணிதாசர் என்பவரே இந்தப் பாடலை எழுதியதாகக் கருதப்படுகிறது.

பிழைகளைப் பொறுத்தருள பகவானிடம் இறைஞ்சும் பாடல் காட்சியைக் காண:

https://www.youtube.com/watch?v=TOfA80eSyHk

குமரி உருவம்... குழந்தை உள்ளம்!

அழகு, குறும்பு, திறமை ஒருங்கே அமையப்பெற்ற பாடகி ஷிவாங்கி. ‘குமரி உருவம்... குழந்தை உள்ளம்’ எனும் வர்ணனைக்கு கனகச்சிதமாகப் பொருந்திப்போகிறார் ஷிவாங்கி! அவருக்காகவே, குறும்பு கொப்பளிக்க ஓர் இசைப் பாடலைத் தயாரித்திருக்கிறது மீடியா மசான்ஸ் மியூசிக். ஹெச்.கே. ரவூஃபா எழுதியிருக்கும் பாடலுக்கு கார்த்திக் தேவராஜ் இசையமைத்திருக்கிறார். வீட்டில் வளரிளம் பருவத்தினர் படும் பாடுகளையும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வெளியுலகத்தையும் நமது கண்களுக்குக் குளிர்ச்சியாக தரிசனப்படுத்துகிறது இந்தப் பாடல்.

எங்க பப்பரப்பா நடைய ஃபேஷன்னு சொல்வோமே

கொஞ்சம் கிழிஞ்சலான உடைய ஸ்டைலாக்குவோமே’ எனும் வரிகளில் இளசுகளின் தன்னம்பிக்கையும் வெளிப்படுகிறது. பாடலின் இடையில் ஒலிக்கும் கே.ஜே.அய்யனாரின் சொல்லிசை இந்தப் பாடலுக்கு வலு சேர்க்கிறது. பாடலின் இறுதியில் `ஒத்த அடி' பீட்டில் நடக்கும் ஓர் இசைத் திருவிழாவில் நீங்களும் பங்கெடுக்கலாம். அத்தனை அதகளம் அது!

https://www.youtube.com/watch?v=iaYCDvE9Q50

உருக்கிப்போட்ட தங்கம்

எண்சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்பதுபோல் எவ்வளவு பெரிய பாடலாக இருந்தாலும் சரி, அதைச் சிறப்பான பாடலாக ஆக்குவதில் பெரும்பங்கு வகிப்பது, பாடலின் தொடக்கமான பல்லவி வரிகள்தான்! பல்லவி வரிகளுக்காக, பல்வலியில் அவதிப்படுவது போல் பல பாடலாசிரியர்கள் சிரமப்படுவார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது ஒரு பாடலுக்குத் தொடக்கமாக அமையும் பல்லவி. இந்த வாரப் பாடல் தேடலுக்கான இணையத் துழாவலில் இந்தப் பாடலின் வரிகள், வீடு போய்ச்சேரும்வரை துணையாக இருந்தன. அதுவும் பாடலுக்கான பல்லவியிலேயே மனம் சிக்கித் தவித்தது. அபிமான நாயகியோடு மனத் திரையில் டூயட் பாடவைத்தது.

சுருக்குப் பையில உருக்கிப்போட்ட தங்கம்

நீ சுக்கு மிளகு திப்பிலி அங்கம்

கருக்கையிலே நீ நடந்தா வெளுக்கும்

உன் காலில் குலுங்கும் கொலுசுகூட கானமாக ஒலிக்கும்...’ இதுதான் பாடலின் பல்லவி வரிகள்!

கிராமியத் தெம்மாங்குப் பாடலுக்குப் பெரிதும் துணையாக நிற்கும் ‘தகிட தகிட' எனத் தொடங்கும் துரித தாளத்தில், சித்தார்த் எழுதிய பாடலை இசையமைத்துப் பாடியிருக்கிறார் சிம்மம் குமார். கிராமியப் பாடல் என்றாலே அப்படி இப்படித்தான் இருக்கும் என்று நினைப்பவர்களின் எண்ணத்தை, இந்தப் பாடல் மாற்றுகிறது. கிராமிய மணம் கமழும் நிலப்பரப்புகளைக் காட்சிப்படுத்தியிருக்கும் இந்தப் பாடலில், குரல்கள் மட்டும்தான் ஒலிக்கின்றன. எனினும், அதுவே பாடலுக்கு சுவாரசியம் சேர்க்கிறது.

ரெண்டு முட்டை போடுது எங்க வீட்டுக் கோழி

நேரம் மாறி கூவுது எதிர் வீட்டு சேவல்...’ என்பதை இயல்பாக சொல்லி தன்னுடைய விருப்பத்தை நாயகிக்குத் தெரிவிக்கிறான் நாயகன். நாயகனின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத தவிப்பை, ‘அப்படியா’, ‘ஓஹோ...’, ‘ஆசையைப் பாரு' போன்ற சின்னச் சின்ன வார்த்தைகளில் உணர்த்தும் பெண் குரலோடு பாடல் முடிகிறது. ‘ச்சே... இவ்வளவு சொல்லியுமா பொண்ணு மனசு ஏத்துக்கலே...’ எனும் ஏக்கம் பாடலைக் கேட்கும் நமக்கும் ஏற்படுகிறது!


https://www.youtube.com/watch?v=ChbK2VVnlfM

மக்களில் ஒருவன் மகேசன்

மிதமான இசை. பெரிதாக அலங்காரமில்லாத வார்த்தைகள். உருக்கமான குரல். எளிய பக்தர்களின் வேண்டுதல் இப்படித்தானே இருக்கும்? இதற்கு நியாயம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது, ‘சோஜுகடா சூஜு மல்லிகே மாதேவா...' எனத் தொடங்கும் இந்தக் கன்னடப் பாடல்.

அன்றாடம் நான் கொய்த மல்லிகை, தாமரைப் பூக்களாலும் துளசி இலை, வில்வ இலைகளையும் உனக்குச் சூட்டிப் பூஜை செய்வேன். என்றும் எங்களைக் காப்பாய்... உன் குழந்தைகளைக் காப்பாய் எந்தையே...’ என்று நம்பிக்கையுடன் கூடிய வேண்டுதலாய் விரிகிறது இந்த பக்திப் பாடல்.

‘தி இன்ஜினீயர்ஸ் பிக்' யூடியூபுக்காக அனன்யா பட் பாடியிருக்கும் இந்தப் பாடலைக் கேட்டால், மகாதேஸ்வர மலையிலிருந்து அந்த மகாதேவரே இறங்கிவந்துவிடுவாரோ என்று பக்தர்கள் நினைப்பார்கள். அனன்யாவின் குரலில் அவ்வளவு உருக்கம்.

அதே உருக்கம், ஜி.வி.பிரகாஷின் இசையில், ‘ஊரவிட்டு வேர விட்டு தூரம் போகிறோம்... வேறு யாரோ ஆகறோம் பூமியே... நாதியத்து நியாயம் கேட்டு காயம் தாங்குறோம்' எனும் `நகரோடி' பாடலைக் கேட்கும்போதும் ஏற்படுகிறது. அறிவு எழுதிய அந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ், அறிவு ஆகியோருடன் சேர்ந்து அனன்யாவும் பாடியிருக்கிறார். மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை... மக்களுக்குப் பாடும் பாட்டே மகேசனுக்குப் பாடும் பாட்டு என்பது புரிகிறதா?

https://www.youtube.com/watch?v=Pb4k0PXXymU

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE