நெய்யாறு இடதுகரை கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

By என்.சுவாமிநாதன்

தமிழகம், கேரளம் என இருமாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்துகொள்ளும் வகையில் கட்டப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, பெருவெள்ளத்தில் சேதமான கால்வாயின் பக்கச்சுவர்களை பலம் வாய்ந்ததாக கட்டவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகம், கேரளம் இடையே இந்தக் கால்வாயின் வழியே தண்ணீர் பங்கீடுகள் நடைபெறாததால், இந்தக் கால்வாயின் நீர்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பின்பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

தமிழகம்_கேரளத்துக்கு தண்ணீர்..

கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கள்ளிக்காடு அருகில் திட்டமிடப்பட்டதே, நெய்யாறு அணை. 1952-ம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி 1958-ல் முடிந்தன. இந்த அணையின் வலதுகரை சானலின் மூலம் கேரள மாநிலம் நெய்யாற்றங்கரை, பாறசாலை வட்டத்திலுள்ள சுமார் 10,000 ஏக்கர் நிலங்களும், இடதுகரை சானலின் மூலம் குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்திலிருக்கும் சுமார் 10,000 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்றன.

அதே நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகள் மற்றும் ரிசர்வ் வனப்பகுதிகளான ஆறுகாணி, பத்துகாணி, கற்றுவா போன்ற பகுதிகளில் சேரும் தண்ணீர்தான் கருப்பையாறு வழியாக கேரள மாநிலம் நெய்யாறு அணைக்கு செல்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தாலுகா, கேரளாவின் பாறசாலை, நெய்யாற்றங்கரை ஆகிய வட்டங்களில் நடக்கும் விவசாயத்துக்குப் பயன்படும் வகையில், 1963-ல் இருமாநிலங்கள் சார்பிலும் இந்தக் கால்வாய்கள் வெட்டப்பட்டு, இருதரப்புப் புரிந்துணர்வின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நெய்யாறு இடதுகரை கால்வாயை, களியக்காவிளை அருகில் உள்ள தமிழகத்தின் சுந்தரிமுக்குப் பகுதியில் அன்றைய தமிழக முதல்வர் காமராஜர், கேரள முதல்வர் சங்கரின் முன்னிலையில் திறந்துவைத்தார். அப்போது, இதற்கான செலவை தமிழகமும் பங்கிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நெய்யாறு கால்வாயின் சேதமான பகுதிகள்

தண்ணீருக்குப் பணம் கேட்கும் கேரளம்..

இதற்கு முன்பு, 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, விளவங்கோடு வட்டத்திலுள்ள 9,200 ஏக்கர் நிலம் கேரளத்தில் இருந்து பிரிந்துவந்து, புதிதாக உருவாக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தோடு சேர்க்கப்பட்டது. மாநில மறுகட்டமைப்புச் சட்டத்தின்படி, நெய்யாறு பாசனத்திட்டம் கட்டமைக்கப்பட்டிருப்பதால், தமிழகத்துக்கும் உரிமையுண்டு என்பதே தமிழக அரசின் வாதம். இந்நிலையில் புதிய குமரி மாவட்டம் உருவாக்கத்தைத் தொடர்ந்து, 1957-ம் ஆண்டு, நெய்யாறு பாசனத்திட்டத்தின் செலவுகளை தமிழக அரசும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என கேரள அரசு கோரிக்கை வைத்தது. 1965-ம் ஆண்டு தமிழக அரசு எவ்வளவு பணம் தரவேண்டும் எனவும் தன்னிசையாகவே கேரள அரசு அறிவித்தது.

பேரப் பேச்சு நடத்தி முறைப்படி ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்று தமிழகம் 1971-ம் ஆண்டு மீண்டும் கோரிக்கை வைத்தது. இது தொடர்பாக தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், நெய்யாறு 2 மாநிலங்களுக்கும் பொதுவான ஆறு அல்ல என்பதால், ஒப்பந்தம் போடுவது இயலாது என்று கேரள அரசு புதிய குண்டை தூக்கிப் போட்டது. இத்தனைக்கும் நடுவில் ஒவ்வொரு முறையும் குமரி மாவட்டத்துக்கு நெய்யாறு அணையில் இருந்து போராடித்தான் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் கேரள மாநில நீர் ஆதாரங்களில் இருந்து, பிற மாநிலங்கள் தண்ணீர் திருடுவதாக சொல்லி, கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து நெய்யாறு அணையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த தண்ணீரை நிறுத்தியது கேரள அரசு.

அதன் தொடர்ச்சியாக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தண்ணீரின் விலை நிர்ணயிக்கப்பட்டப் பிறகே தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியும் என்று 2007-ம் ஆண்டு கேரள அரசு அறிவித்தது. ஆனால், தமிழக பொதுப்பணித் துறையோ நெய்யாறு இரு மாநிலங்களுக்கும் உரிமைப்பட்டது. அதனால், பணம் கொடுத்து தண்ணீர்பெற வேண்டிய அவசியம் இல்லை. நெய்யாறு தமிழகத்தின் உரிமை என வாதிட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கும், தமிழகம், கேரளத்துக்கு இடையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீர்வரத்து இல்லாததால், இந்தக் கால்வாயை தமிழகப் பொதுப்பணித் துறையினர் கண்டுகொள்ளவில்லை. இந்தக் கால்வாயின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் ஆக்கிரமிப்பின்பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயி சவுந்தரராஜன், "இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்பட வேண்டும். அதேபோல் அண்மையில் குமரியில் பெய்த பெருமழையில் நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் பக்கச்சுவர்கள் பல இடங்களில் உடைந்து போயுள்ளது. இதையும் உடனே சீர்செய்ய வேண்டும். இந்தக் கால்வாயின் வழியே கேரளத்தில் இருந்து தண்ணீர்தான் வரவில்லையே என இதற்கு நிதி ஒதுக்க மெத்தனம் காட்டினால், அடுத்தடுத்து பெருமழை ஏற்படும் காலங்களில் களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொள்ளும் அபாயம் இருக்கிறது. வழக்கு ஒருபக்கம் நிலுவையில் இருந்தாலும் ஆண்டு முழுவதும் பெருமழை, வெள்ளத்தால் சிக்கலை சந்திக்கும் கேரளம், நெய்யாறு கால்வாயின் ஊடே தமிழகத்தின் விளவங்கோடு தாலுகாவிற்கு தண்ணீர் கொடுக்க முன்வரலாம். அதற்கு இங்கு இருக்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்’’என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE