வசம்பு தேய்த்தால் பேச்சு சீக்கிரம் வருமா!? : அவ(ள்) நம்பிக்கைகள்-23

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

”வசம்பு தேய்த்தால் குழந்தைக்குப் பேச்சு வசப்படும்...”

உண்மை :

"தாயில்லாப் பிள்ளையையும் சீராட்டி வளர்க்குமாம் வசம்பு..." என்பது வழக்கு மொழி.

இனிப்பும், காரமும், லேசான துவர்ப்பும் கொண்ட வசம்பு உண்மையில் வயிற்று அழற்சி, செரிமானமின்மை, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு அருமருந்து என்பதுடன் விஷமுறிவுத் தன்மையும் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. என்றாலும், இதன் இயற்கை மருத்துவ குணங்கள் அனைத்தும் வளர்ந்த குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மட்டும்தான்.

குழந்தை பிறந்த 15 நாட்களுக்குப் பிறகு, வசம்பை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் நனைத்து, விளக்கு நெருப்பில் சுட்டு கருப்பாக்கி, தாய்ப்பாலில் குழைத்தும், உரை மருந்தாகவும் கொடுக்கும் வழக்கம் கிராமங்களில் இருக்கிறது. அதேபோல் வசம்பைப் பொடியாக்கி கையில் காப்பு போலவும் கட்டுவதுண்டு.

பிறந்த குழந்தைக்கு உள்ள ஒரே ஒரு இயற்கை உணவும் மருந்தும், தாய்ப்பால் மட்டுமே. அதற்கு மாற்று என்பதே இல்லை. வசம்பு சேர்த்த உணவை அளிப்பதோ, வளையல்களை அணிவிப்பதோ குழந்தையின் பிஞ்சு உடலையும் மென்மையான தோலையும் பாதித்து, நோய்த்தொற்றை ஏற்படுத்தத்தான் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

கூடவே, வசம்புப் பொடியைத் தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் குழந்தைக்குப் பேச்சு சீக்கிரம் வரும் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில், பேசும் திறன் என்பது குழந்தை வளர, வளர நிகழும் இயற்கை நிகழ்வு. அதை ஊக்கப்படுத்த மருந்துகள் கிடையாது என்பதே உண்மை. கூடவே, நீங்கள் கொடுக்கும் இவ்வகை மருந்துகள் அளவு மிகும்போது அது குழந்தையின் நலத்தை நிச்சயம் பாதிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
தொப்புள் கொடியை தாயத்தில் கோத்து குழந்தைக்கு கட்டணும்! : அவ(ள்) நம்பிக்கைகள்-22

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE