யார் அறிவார் எங்கள் பெருந்துயரை?

By என்.சுவாமிநாதன்

கவிஞர், இலக்கியவாதி, ‘உயிர்மை’ பதிப்பகம் மற்றும் மாத இதழின் ஆசிரியர், திமுகவின் செய்தித் தொடர்பாளர், சமூகச் செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் மனுஷ்ய புத்திரன். சக்கர நாற்காலியில் வீற்றிருக்கும் தன்னம்பிக்கை மனிதர்!

உடலளவில் பிறர் உதவி தேவைப்படும் இடத்தில் இருந்தாலும் தொய்வின்றி சமூகப் பணி செய்து பிறர் பயனுற வாழும் மனுஷ்ய புத்திரனுக்குள், பெரும் சங்கடம் ஒன்றும் இருக்கிறது. அதுவும் பொது நோக்கத்துக்கானதுதான். மாற்றுத்திறனாளிகளின் சுதந்திரப் பயணத்துக்கான உரிமைக் குரல் அது!

கன்னியாகுமரியில் நடைபெற்றுவரும் ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்திருந்தார் மனுஷ்ய புத்திரன். சிம்பு, கெளதம் கார்த்திக் என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கும் அந்தப் படத்தில் சமூக ஆர்வலராக நடிக்கும் மனுஷ்ய புத்திரன், கன்னியாகுமரியில் தங்கும் விடுதியில், தான் எதிர்கொண்ட சிரமங்களை தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். அது மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைக்குரலாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து, மனுஷ்ய புத்திரனிடம் பேசினோம். “சினிமா படப்பிடிப்பிற்காக வந்திருந்தேன். கன்னியாகுமரியில் இருப்பதிலேயே மிகப் பெரிய விடுதியில் நான் தங்குவதற்கு படக்குழுவினர் அறை போட்டிருந்தனர். இருந்தும், அங்கே மாற்றுத்திறனாளி செல்வதற்கு ஏற்ற சாய்வுதளம் இல்லை. விடுதியில் இருந்த கழிப்பறைக்குள் சக்கர நாற்காலியே நுழையாது. இதெல்லாம் சேர்ந்து எவ்வளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்? இயல்பான ஒரு வாழ்க்கை வாழ்வதிலேயே எவ்வளவு சிரமங்களை ஒரு மாற்றுத்திறனாளி அனுபவிக்க வேண்டி இருக்கிறது. இது எத்தனைத் துயரமான விஷயம்!

இது கன்னியாகுமரியில் மட்டுமே இருக்கும் பிரச்சினை அல்ல. தமிழகத்தில் இருக்கும் அனைத்து விடுதிகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பவர்களுக்கும், கட்டுமான நிபுணர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் என ஒரு பிரிவினர் இருப்பதே கண்ணில் படுவதில்லை போலும். அதனால்தான் அதற்கு ஏற்ப கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படுவதில்லை. அனைத்துப் பொது இடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சாய்வுதளம் அமைக்க வேண்டும். சக்கர நாற்காலியில் வருவோருக்கும் பயணத்தை எளிதாக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற விதி இருக்கிறது.

கரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின்போது நானும் பெருந்தொற்றுக்கு உள்ளானேன். திருச்சியில் ஒரு பெரிய மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். ஆனால் அங்கே இருந்த குறுகலான கழிப்பறையில் எனது சக்கர நாற்காலி நுழையவே இல்லை. மருத்துவமனையிலேயே இதுதான் மாற்றுத்திறனாளிகளின் நிலை என்றால், மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்!

நடைமேடையும், சக்கர நாற்காலியும்

நம் அண்டை மாநிலமான கேரளத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் இருக்கும் பட்டாம்பி என்ற ஊருக்கு ஒருமுறை போயிருந்தேன். பட்டாம்பி மிகவும் சின்ன நகரம்தான். ஆனாலும் அங்குள்ள விடுதியில் இரு அறைகளை மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்கள் தங்குவதற்கு ஏதுவாக வடிவமைத்திருந்தனர். இதேபோல்தான் ஒட்டுமொத்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அந்த நிலை இங்கே இல்லை” என்று ஆதங்கத்துடன் சொன்னார் மனுஷ்ய புத்திரன்.

‘கால்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுபெற்ற அபிலாஷ், சக்கர நாற்காலியில் வலம் வரும் மாற்றுத்திறனாளி. அவர் அடிக்கடி தன் முகநூல் பக்கத்தில், தான் செல்ல இருக்கும் பகுதியைக் குறிப்பிட்டு, “என்னை என் சக்கர நாற்காலியில் வளாகத்தில் இருந்து உள்ளே அழைத்துச்செல்ல அந்தப் பகுதியில் யாரேனும் உதவ முடியுமா?” என பதிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அண்மையில்கூட பிரபல நடிகை சுதா சந்திரன், விமான நிலையத்தில் அதிகாரிகள் தனது செயற்கைக் கால்களை கழற்றச் சொல்லி சோதனை செய்வதாகக் கலங்கிய கண்களோடு காணொலி வெளியிட்டிருந்தார். இதையெல்லாம் சுட்டிக்காட்டி, “இந்தியாவில் இன்னமும்கூட மாற்றுத்திறனாளிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறதா?” என மனுஷ்ய புத்திரனிடம் கேட்டோம்.

“ஆம். சந்தேகமில்லாமல்” என்றவர், மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“வெளிநாடுகளுக்குப் பலமுறை போயிருக்கிறேன். அங்கெல்லாம் சக்கர நாற்காலியிலேயே ஒரு மாற்றுத்திறனாளி தனியாக வீட்டைவிட்டு வெளியே வந்து கால் டாக்ஸி பிடித்து, ரயில் நிலையம் சென்று அங்கிருந்து ரயிலைப் பிடித்து வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிவிட முடியும். வெளிநாடுகளில் கால் டாக்ஸியில்கூட சாய்வுதளம் அமைத்திருப்பார்கள். இங்கே நம் இந்தியாவில் ரயிலில் இருக்கும் கழிப்பிடத்துக்கு சக்கர நாற்காலியில் சென்றுவிட முடியுமா?

இதைவிடக் கொடுமையான விஷயங்கள் விமான நிலையத்தில் நடக்கின்றன. ஒரு மாற்றுத்திறனாளி அவரது சக்கர நாற்காலியில் விமானத்தில் சென்றுவிட முடியாது. அவர் பயன்படுத்தும் சக்கர நாற்காலியை லக்கேஜ் உடன்தான் போட்டு அனுப்ப முடியும். விமான நிலையத்திலேயே ஒரு சக்கர நாற்காலி தருவார்கள். அது மிகவும் சிறியதாக இருக்கும். அது பல மாற்றுத்திறனாளிகளின் உடலுக்கு ஏற்றதாகக்கூட இருக்காது. முன்பெல்லாம் மாற்றுத்திறனாளிகளை விமான நிலையத்தின் நுழைவுவாயிலில் இருந்து ஹைட்ராலிக் வண்டியில் அழைத்துப் போவார்கள். அதில் இருக்கும் ஏரோப்ரிட்ஜ் விமானத்துக்குள் மாற்றுத்திறனாளியைத் தூக்கிவிடும். இது ஒரு லிஃப்ட் போல் செயல்படும். ஆனால் இப்போதெல்லாம் 4 பேர் சேர்ந்து மனித உடல் உழைப்பின் மூலம் விமானத்துக்குள் தூக்கிவிடுகின்றனர். இதில் ஒருவர் அசைந்தால்கூட சக்கர நாற்காலியோடு நாமும் கீழே விழ வேண்டியதுதான்.

ரயில் பயணத்தை நினைத்துப் பாருங்கள். ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே ஒரு அடி இடைவெளி இருக்கும். சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத்திறனாளி எப்படி ரயில் பெட்டியில் ஏற முடியும்? அதுவும் சின்னச் சின்ன நகரங்களில் ரயில் நிற்பதே இரண்டோ, மூன்றோ நிமிடங்கள்தான். அதற்குள் இது சாத்தியமா? சாய்வுதளம் இல்லாவிட்டாலும் ரயிலில் ‘மாற்றுத்திறனாளிகள் பெட்டி’ என ஒன்றை இணைத்துள்ளனர். அதுவே பெருந்தவறுதான். அதில் மாற்றுத்திறனாளியும், அவரோடு வரும் ஒருவருமே பயணிக்க முடியும். அவரது குடும்பத்தினர் உடன் பயணிக்க முடியாது. அதுவே ஒரு மாற்றுத்திறனாளி தன் குடும்பத்தோடு பயணிக்கும் உரிமையைப் பறிக்கிறது. அனைவரும் அனைத்து இடங்களுக்கும் சென்றுவருவதைப் போலத்தான் மாற்றுத்திறனாளிகளுக்கும் வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். தமிழக அரசு இப்போது மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் புதிய பேருந்துகளை வாங்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க விஷயம்.

சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் கூடுதலாக ஒருவரை துணைக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் தூக்கிவிடவும், ஏற்றிவிடவும் 4 பேரை உடன் அழைத்துச் செல்வதெல்லாம் எப்போதும், எல்லோருக்கும் சாத்தியமா? இந்த சங்கடங்களையெல்லாம் மத்திய - மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். அரசுகள் செவிசாய்க்கும் என நம்புகிறேன்” என்றார் மனுஷ்ய புத்திரன்.

மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் இந்தத் துயரங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும். அரசு இயந்திரங்கள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் விவாதித்து இதற்குத் தீர்வுகாண வேண்டியது அவசியமானது மட்டுமல்ல... அவசரமானதும்கூட!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE