வதந்திகளை, தங்கம் வென்று வீழ்த்திய மல்யுத்த வீராங்கனை!

By எஸ்.சுமன்

தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள, உத்தர பிரதேசம் மாநிலம் கோண்டா நகருக்கு வந்திருந்தார் நிஷா தாஹியா. போட்டிக்காக மும்முரமாக இருந்தவரை அந்தச் செய்தி கலைத்துப்போட்டது. அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பரவிய செய்திதான் அது.

தொடர்ந்து ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள், சமூக ஊடக பகிர்வுகள் அவரது நேரத்தையும், அமைதியையும் குலைத்துப் போட்டன. ’தான் கொலையான’ தகவலைவிட, அதற்கான காரணம் என்ற பெயரில் வெளியான வதந்திகளால், நிஷா தாஹியா மனதளவில் சோர்ந்துபோனார்.

உலக சாம்பியன் நிஷா தாஹியா

நிஷா தாஹியா என்ற மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்களில் பரவிய செய்தி ஒருவகையில் உண்மைதான். ஆனால், அந்த அப்பாவி நிஷா வேறு பெண். அப்போதுதான் மல்யுத்தம் பயில வந்த, வளரும் வீராங்கனை. இந்த நிஷாவோ உலக சாம்பியன். செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்று அண்மையில்தான் இந்தியா திரும்பியிருந்தார். இருவருக்கும் ஒரே பெயர் என்பதால், ஊரறிந்த உலக சாம்பியன் நிஷா தாஹியா இறந்ததாகச் செய்திகளும், வதந்திகளும் சேர்ந்து பரவின.

ஒரு கட்டத்தில் செய்திகள் திருத்திக்கொள்ள, வதந்திகள் மட்டும் அடங்காது வலம்வந்தன. அவற்றுக்கு ஒரேயொரு எதிர்வினையாற்றினார் நிஷா தாஹியா. ’அன்புடையீர். நான் உயிரோடுதான் இருக்கிறேன். சாகவில்லை’ என்று ஒரு வீடியோவை உலகுக்கு பகிர்ந்த கையோடு, செல்போனை அணைத்து வைத்தார். தொடர்ந்து, மல்யுத்த போட்டிக்கான பயிற்சிகளில் மும்முரமானார். அதன் பலனாய் நேற்று நடந்த சீனியர் பிரிவிலான தேசிய மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார்.

அந்த வகையில் இன்று(நவ.12) மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார் நிஷா தாஹியா. ’கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தனக்கு மிகவும் வேதனை தந்ததாகவும், தங்கம் வென்றதன் மூலம் அந்த சோதனையை கடந்து விட்டதாகவும்’ கூறியிருக்கிறார் நிஷா தாஹியா.

இதற்கிடையே அறிமுக மல்யுத்த வீராங்கானையான நிஷா தாஹியாவையும், அவரது சகோதரனையும் சுட்டுக்கொன்ற, மல்யுத்த பயிற்சியாளர் பவண் பராக் உள்ளிட்ட சிலரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE