இந்த ஆண்டும் விவசாயம்..?

By கரு.முத்து

தொடங்கியதிலிருந்தே வெளுத்துவாங்கும் வடகிழக்குப் பருவமழை, இந்த ஆண்டும் விவசாயத்தை என்னசெய்யப் போகிறதோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள் விவசாயிகள். கடந்த சில ஆண்டுகளாகவே காலநிலை மாற்றத்தால் கடும் வறட்சியும், வெகுகனமழையும் மாறிமாறி உலகை அச்சுறுத்துகின்றன. இந்தியாவிலும் தலைநகர் டெல்லி தொடங்கி, உத்தராகண்ட், கேரளா, தமிழகம் என்று பல மாநிலங்கள் கடும் மழைப்பொழிவால் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஆரம்பத்தில் மிகக்குறைவாக இருந்த வடகிழக்குப் பருவமழை, பருவம் தவறி டிசம்பர் இறுதியிலும், ஜனவரி முதல்பாதியிலும் கனமழையாக கொட்டியது. அதனால், டெல்டாவில் அறுவடைக்குத் தயாராகயிருந்த சம்பா பயிர்கள் முற்றிலும் நாசமாயின. விவசாயிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தார்கள். அதனால், ஏக்கர் ஒன்றுக்கு எட்டாயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுத்தது எடப்பாடி அரசு. அதைத் தொடர்ந்து, விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர்க்காப்பீடு மூலம் இழப்பீடும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் கடந்தஆண்டு மழையால் பாதிப்படைந்தும், பெரும்பாலான விவசாயிகள் நஷ்டமில்லாமல் நிம்மதியடைந்தனர்.

தத்தளிக்கும் இளம்பயிர்கள்

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்தே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை என பல்வேறு மாவட்டங்களில் மிகஅதிகமாக பெய்துவருகிறது. ஒரேநாளில் 31 செ.மீ மழையை சந்தித்தது நாகப்பட்டினம். வேதாரண்யம், காரைக்கால் உட்பட பல ஊர்களில் 29 செ.மீ அளவுக்கு மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரும் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1,45,000 ஏக்கர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கியிருப்பதாக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதில், பெருமளவு இளம் நாற்றுகள் என்பதால் மழைநின்று தண்ணீர் வடிந்தாலும் தேறுவது கடினம் என்று விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். குறுவை சாகுபடியில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களும், சம்பா, தாளடிக்கான நாற்றங்கால்களும் மழையால் அழிந்துள்ளன. இப்போதே இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகும், அதன்விளைவாக தொடர்மழையும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டும் விவசாயம் அவ்வளவுதானா? என்ற கவலையில் இருக்கின்றனர்.

மூழ்கிய பயிர்கள்

சென்னையை நான்கைந்து நாட்களாக சுற்றிவந்து ஆய்வுசெய்து நிவாரணப்பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களுக்கு வரவிருப்பதாக வரும்செய்திகள் அவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கின்றன. அவரது வருகைக்குப்பின், தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு அரசால் உரிய இழப்பீடுகள் வழங்கப்படலாம் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

முதல்வர் வருகைக்கு முன்பாகவே, மழை வெள்ளத்தால் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோரைக் கொண்ட 5 பேர் கொண்ட குழுவையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அந்தக் குழுவினர் 12-ம் தேதியன்றே, தங்கள் ஆய்வை தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடங்குகின்றனர். ஆய்வின்முடிவில் அவர்கள் தரும் அறிக்கையின்படி, டெல்டா விவசாயிகளுக்கு தேவையானவற்றை தமிழக அரசு செய்யும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் விவசாயிகள், பயிர்க் காப்பீடு செய்ய உரிய அவகாசம் பெற்றுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏரிபோல வயல்களில் தண்ணீர்

சம்பா, தாளடி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசிநாளாக நவ-15 அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், அதற்குள் பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என்று அரசின் வேளாண் துறையும் ஒரு வாரத்துக்கு முன்பே அறிவுறுத்தியிருந்தது. ஆனாலும் விவசாயிகள் பலர் இன்னும் பயிர்க்காப்பீடு செய்யவில்லை; செய்யமுடியவில்லை என்பதுதான் காரணம்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வீ.இளங்கீரன் கூறும்போது, ’’சம்பா, தாளடி விவசாய வேலைகள் நாற்றங்கால், உழவு, நடவு, உரமிடுதல், களையெடுப்பு என்று நவம்பர் வரைக்குமே இடைவிடாமல் நடக்கும். இந்த ஆண்டு அக்டோபர் இறுதியிலிருந்தே டெல்டாவில் மழை தொடங்கி இடைவிடாமல் வெளுத்து வாங்கியதால், விவசாய வேலைகள் தடைபட்டன. விவசாயிகளும் வெளியில் கிளம்பமுடியாமல் தவித்தனர். அவர்கள் வெளியில் கிளம்பினால்தான் பயிர்க்காப்பீட்டுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்.

இளங்கீரன்

கிராம நிர்வாகஅலுவலரின் அடங்கல் சான்று, கணினி சிட்டா, புகைப்படம், ஆதார் நகல் என்று எல்லாவற்றையும் தயார் செய்து இ சேவை மையங்களுக்கு சென்று இணையவழி மூலமாக பயிர்க் காப்பீடு செய்யவேண்டும். இத்தனை வேலைகளையும் செய்வதற்கு மழை விடவே இல்லை. அதனால், இன்னும் 25 சதவீதம் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யவில்லை.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவப் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அதேநேரத்தில் கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடைசி நாள் டிசம்பர் 15 என்று அறிவிக்கப் பட்டுள்ளது. டெல்டாவிலும் அதேநாள்வரை பயிர்க்காப்பீடு செய்ய அவகாசத்தை நீட்டித்துத் தரவேண்டும். கடந்த ஆட்சியில், பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 18 வரையிலும் அவகாசம் தரப்பட்ட முன்னுதாரனம் உள்ளது. அதேபோல, இந்த ஆண்டும் ஒன்றிய அரசிடம் அனுமதிபெற்று டிசம்பர் 15 வரையிலும் அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதுவும் வயல் தான்

தமிழக அரசின் சார்பாக, பயிர்க் காப்பீடு செய்ய ஏதுவாக நவ.13 (சனி), 14 (ஞாயிறு) நாட்களிலும் இ-சேவை மையங்கள் செயல்படும் என்றும், கால நீட்டிப்பு மத்திய அரசுதான் தரமுடியும் என்பதால் மேலும் 15 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்துத்தரவேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் இக்கட்டான நிலைமையை உணர்ந்து கொள்வதுடன், அவர்களின் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்திசெய்து கொடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE