ஒரே மாதத்தில் ரூ. 3 லட்சம் கோடி செலவில் திருமணங்கள்!

By காமதேனு டீம்

இந்தியாவில் ஒரு ஆடம்பர திருமணத்துக்கு 2 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய்வரை செலவழித்தல் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், கரோனா பெருந்தொற்று காலத்தால் எத்தனையோ பாதகங்கள் விளைந்தாலும் சிக்கனமாகத் திருமண விழாக்களை நடத்தும் பழக்கம் பரவலானது.

பெரிய மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோரை அழைத்து, லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவழித்துதான் ஆடம்பரமாக திருமணம் நடத்தியாக வேண்டும் என்பதில்லை. உற்றார் சூழ எளிமையாக அவரவர் வீடுகளிலேயே, திருமண நிகழ்வு அழகு பெறும் என்பதை உலகுக்கு கரோனா காலம் கற்பித்தது.

ஆனால், மீண்டும் பழைய ஆடம்பரத் திருமணக் கொண்டாட்டங்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டதாக, அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி) வெளியிட்ட தரவுசுட்டிக்காட்டுகிறது. வரும் நவ. 14 முதல் டிச. 13 வரை, நாடு முழுதும் 25 லட்சம் திருமண விழாக்கள் நிச்சயிக்கபட்டுள்ளனவாம். இவற்றில், ரூ.3 லட்சம் கோடி செலவழிக்கப்படவிருப்பதாக சிஏஐடி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தக் கால வரையறைக்குள், நாட்டின் தலைநகரம் டெல்லியில் மட்டும் ஒன்றரை லட்சம் திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.50 ஆயிரம் கோடி செலவழிக்கப்படவிருக்கிறது. இதற்கென பெரிய மண்டபங்கள், ஹோட்டல்கள், திறந்தவெளி புல்வெளி கொண்ட விழா அரங்குகள், பண்ணை வீடுகள் உள்ளிட்ட திருமண விழாக்கள் சார்ந்த இடங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

டெல்லி, ராஜஸ்தான் மாநிலங்களில் திருமண நிகழ்வுகளில் 200 விருந்தினர்கள்வரை பங்கேற்க தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2 அரங்குகளில் 50 சதவீதம் பேர் பங்குபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவது கவனத்துக்குரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE