நிவாரண முகாமில் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்வித்த காவலர்கள்!

By ரஜினி

சென்னை, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் கனமழை வெள்ளம் காரணமாக அப்பகுதி மக்களை, வேறொரு இடத்தில் பத்திரமாக தங்கவைக்க அரசு ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நிவாரண முகாம்களை ஏற்படுத்தி, பாதிப்புக்குள்ளான மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

துரைப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமை பார்வையிட்டு, அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து தேவையான உதவிகளைச் செய்து வந்தனர்.

இந்நிலையில், முகாமில் தங்கியுள்ள ஒரு வயது பெண் குழந்தை மோனிகாவுக்கு இன்று(நவ.10) பிறந்தநாள் என்பதை அறிந்த காவலர்கள், குழந்தை மோனிகாவுக்கு புத்தாடை, பலூன், கேக் போன்ற பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு முகாமுக்குச் சென்று அங்கிருந்தவர்களோடு சேர்ந்து, மோனிகாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீட்டைவிட்டு, பல்வேறு இன்னல்களுடன் முகாமில் தங்கியிருந்த நிலையில் துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ், தலைமைக் காவலர் நவரத்தினம், முதல்நிலைக் காவலர் சூரியச்சந்திரன், முத்துகிருஷ்ணன், தலைமைப் பெண் காவலர் பாரதி ஆகியோர் இன்முகத்துடன் குழந்தை மோனிகாவின் பிறந்தநாளைக் கொண்டாடியது, முகாமில் தங்கியிருந்தவர்களை நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE