வருங்கால வைப்பு நிதியில் தமிழ்த்தொண்டு!

By என்.சுவாமிநாதன்

தங்கள் அன்றாடப் பணிகளுக்கு மத்தியில் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்யும் பலரையும் பார்த்திருப்போம். ஆனால், தமிழுக்கு ஆற்றும் தொண்டையே தன் அன்றாடப் பணியாக்கி வாழ்ந்துவருகிறார் புலவர் சுயம்புலிங்கம். அந்த அளவுக்குத் தமிழ்ப் பற்றாளரான இவர், எம்.ஏ ஆங்கிலம் பயின்றவர்.

இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுயம்புலிங்கத்துக்கு, இப்போது 71 வயது. ஆனாலும் விடாத தமிழ்ப் பாசத்தால், தமிழ் பரப்பும் துண்டுப் பிரசுரங்களோடு நாகர்கோவிலைச் சுற்றிவருகிறார்.

புலவர் சுயம்புலிங்கம்

‘காமதேனு’ மின்னிதழுக்காக நேரில் சந்திப்பதற்காகப் புலவரை அலைபேசியில் அழைத்தேன். “திருச்சிலுவை கல்லூரி பக்கத்தில் சந்தைத் தெரு எனக் கேட்டு வாருங்கள்” என தனது வீட்டுக்கு வழி சொன்னார். ஆனால், ஹோலிகிராஸ் காலேஜ், மார்க்கெட் ரோடு என அன்றாடப் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளினூடேயே பயணப்பட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடிந்தது. புலவர் சுயம்புலிங்கத்திடம் இதைச் சொன்னதுமே, “தமிழே ஏதோ அந்நிய மொழி மாதிரி இப்போது ஆகிவிட்டது. பிறமொழிச் சொல் கலப்பால் என் தமிழுக்கு எவ்வளவு இழுக்கு பார்த்தீர்களா?” என கொஞ்சம் சஞ்சலப்பட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்.

“குமரி மாவட்டத்தின் மேலசூரங்குடி கிராமம் என் பூர்விகம். என் தந்தை குருநாதன் மார்த்தாண்ட நாடாருக்கு நல்ல தமிழ்ப் புலமை உண்டு. ஜோதிடத்திலும் ஆழ்ந்த ஞானமும் இருந்தது. அவருக்கு மலையாளமும் ஆங்கிலமும் நன்றாகத் தெரியும். அப்போதே அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனாலும் விவசாய ஆர்வத்தால் அதையே முழுநேரமாகச் செய்துவந்தார். குமரியின் தந்தை என போற்றப்படும் மார்ஷல் நேசமணி, சிதம்பரநாதன் நாடார் ஆகியோரோடு அப்பாவுக்கு நல்ல தொடர்பு இருந்தது. 3 ஆணும், 3 பெண்ணுமாக நாங்கள் 6 பிள்ளைகள். அப்பாவிடம் இருந்து நிரம்ப தமிழ் கற்றுக்கொண்டதால் கல்வி ரீதியாக ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்தேன். எம்.ஏ ஆங்கிலம் முடித்துவிட்டு அறநிலையத் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன்” என்கிறார் சுயம்புலிங்கம்.

தமிழ் மீது கொண்ட அன்பால், அறநிலையத் துறை பணியில் இருக்கும்போதே எம்.ஏ தமிழ் இலக்கியமும் படித்தார் சுயம்புலிங்கம். கம்பராமயணம் தான் இவரைத் தமிழ்ப் பற்றாளர் ஆக்கியிருக்கிறது. தொடர்ந்து தமிழுக்காக இவர் செய்த சேவைகள் ஆச்சரியமூட்டுபவை. அதுகுறித்தும் நம்மிடம் பேசத் தொடங்கினார் சுயம்புலிங்கம்.

“அறநிலையத் துறை பணியாளராக நெல்லையில் பணிசெய்தபோது, திருநெல்வேலி மாவட்ட கவிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்தேன். அப்போது, தேவநேயப் பாவாணருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விரும்பினேன். அப்போது ஒரு கவிஞரே, ‘தேவநேயப் பாவாணர் யார்?’ எனக் கேட்டுவிட்டார். அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. மறுநாளே கவிஞர்கள் சங்கத்தின் அங்கத்தினர்களைத் திரட்டி தேவநேயப் பாவாணருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தலாம் எனச் சொன்னேன். உடனே, அதற்குரிய நிதி ஆதாரம் சங்கத்தில் இல்லையே எனச் சொன்னார்கள். அதனால் நானே சொந்த செலவிலேனும் நடத்திவிடுவது என முடிவெடுத்தேன்.

இப்போது இருப்பதைப் போல அப்போதெல்லாம் நினைத்தவுடன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் எடுத்துவிட முடியாது. அதுவும் முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே அதிலிருந்து பணம் எடுக்க முடியும். எனக்கு உடல்நலமில்லை எனக் காரணம் சொல்லி 50 ஆயிரம் ரூபாய் பணம் பெற்று தேயநேயப் பாவாணருக்கு விழா எடுத்தேன். 10 நாட்கள் விழா நடத்தினேன். அனைத்துப் பள்ளி - கல்லூரி மாணவர்களையும் அழைத்து போட்டிகள் நடத்தினேன்” என புலவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு, “பி.எஃப் பணத்தை எடுத்துத் தமிழுக்குச் செலவு செய்தால் உங்கள் வீட்டில் பிரச்சினை வராதா?” என்று கேட்டேன்.

மெலிதாகப் புன்னகைத்த சுயம்புலிங்கம், “இறைவன் கொடுத்த பணி அய்யா இது. தமிழுக்குச் செய்வது தாய்க்குச் செய்வதற்கு சமம். நம் தாய்த் தமிழுக்குச் செய்வது நம் கடமை அல்லவா? இதற்குக் கணக்கு, வழக்குப் பார்க்கக் கூடாது. இன்னொன்று என் மனைவியும் ஓய்வுபெற்ற முதுநிலைப் பள்ளி ஆசிரியை. அவருக்கும் ஓய்வூதியம் வருகிறது. இதனால் குடும்ப வருமானத்திற்குப் பொருளாதாரம் பலமாகவே இருக்கிறது. அதுவும் இப்படி செயல்படும் துணிச்சலைத் தந்தது” என்கிறார்.

ஓய்வுக்குப் பின்னர் முழுநேர தமிழ்ப் பணியைக் கையில் எடுத்துக்கொண்ட சுயம்புலிங்கம், தமிழ், தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளின்போது தன் நம்பிக்கைக்குரிய சிலரைத் திரட்டிக்கொண்டு போராடவும் தயங்கியது இல்லை. இலங்கைத் தமிழர் விவகாரம் தொடங்கி, ஆந்திராவில் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்வரை பல பிரச்சினைகளுக்காகவும் போராட்டம் நடத்தியுள்ளார். நாகர்கோவில் மாநகர வீதிகளுக்குத் தமிழில் பெயர் சூட்டக் கோருவது, கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்கக்கோரும் சட்டத்தை அமலாக்கக் கோருவது, தேவநேயப் பாவாணருக்கு நினைவில்லம் அமைக்கக் கோரிக்கை என ஒவ்வொரு திங்களும் ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் ஆர்ப்பாட்டம், மனு கொடுத்தல் எனவும் சுற்றிச்சுழல்கிறார் சுயம்புலிங்கம்.

மறுபுறம் தமிழ் இலக்கியச் செயல்பாடுகளையும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் என இலக்கியம் சார்ந்த உரைகளும், அதுதொடர்பிலான விவாதங்களும் இவரது தமிழ் நல மன்றத்தில் சூடிபிடிக்கும். இதுபோக மாணவ, மாணவிகளுக்குத் தமிழைப் பிழையின்றி எழுதவும் இலவசமாகப் பயிற்சி வகுப்பு எடுத்துவருகிறார் சுயம்புலிங்கம்.

இத்தனை இருந்தாலும் புலவர் மனதில் ஆழமான சில வேதனைகளும் உண்டு. அதைப் பற்றியும் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

“ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே தவிர, அறிவு கிடையாது. அது ஒரு இணைப்பு மொழி அவ்வளவுதான். ஆனால் இன்று, பெற்றோர் தங்கள் குழந்தைகள் தமிழில் பேசுவதையே கவுரவக் குறைச்சலாக நினைத்துக்கொள்கிறார்கள். தமிழின் அருமை, பெருமைகள் அவர்களுக்குத் தெரியவில்லை. வீட்டுக்குள்ளேயே தமிழைப் பேசாத தமிழர்களும் உருவாகி வருகிறார்கள். ‘மம்மி’, ‘டாடி’யில் இருக்கும் மகிழ்ச்சி அவர்களுக்கு அப்பா, அம்மா என அழைப்பதில் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் படித்த பிள்ளைகள் தவறு செய்யாத பிள்ளைகளாகத்தான் உருவாகுவார்கள். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றும் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறேன். என் வாழ்நாளுக்குள் அனைத்துத் தமிழர்களின் உள்ளத்திலேனும் தமிழின் ஆட்சியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்றார் சுயம்புலிங்கம்.

தமிழன்னையின் காவலர்களாக, புலவர் சுயம்புலிங்கம் போன்ற பலரும் ஆங்காங்கே இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் என்றென்றும் இருக்கும். தமிழ் இருக்கும் காலம்வரை இப்படியான தமிழ்த் தொண்டர்களும் உருவாகிக்கொண்டே இருப்பார்கள். அதுதானே நம் தமிழின் பெருமை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE