நிழற்சாலை

By காமதேனு

காலத்துளி

விழவைக்க

மனமில்லையெனினும்

சிறிது சிறிதாக

சறுக்குகிறது

மழைத்துளியினை

இலை.

கடைசித் திரியில்

உருகி வழிய வேண்டி

அழுது நிற்கிறது

வெளிச்சம் கம்மிய

மெழுகு.


கழன்றுவிழக்

காத்திருக்கும்

ஆயுளற்ற ஒற்றைச்

சருகிற்காக

அசைவற்றிருக்கிறது

மரம்.


இவற்றோடு

சறுக்குமர விளையாட்டில்

துளிக்காலத்தினை

நிறுத்திப்பிடித்து

இறங்குகிறாள்

மகள்!


- ரகுநாத் வ

துணை

ஓடுடைத்த பின்னும்

அவித்தோ வறுத்தோ

தோலை ஊதிஊதித் தள்ளிவிட்டு

ஒவ்வொன்றாய் மெல்லுகையில்

சட்டென்று வந்துவிடுகிறது

ஒரு சொத்தைப் பருப்பு


பிடிசாபம் என்கிறாய்

படி ஐந்து ரூபாய்க்கு கடலை

அளந்தவளை நினைத்து


அளக்கும்போதே சொத்தை தெரிந்துவிட்டால்

அப்புறம் என்ன இருக்கு

நான் தோற்குமிடமும் இதுதான்

என்கிறாள் கடலைக்காரியிடம் அங்காளி


இவளுக்கு அவளும்

அவளுக்கு இவளும் துணை!


- உமா மோகன்

சிறைக்கு வெளியில் நீளும் சிறகு

கூண்டுக்குள் விதவிதமான

நிறங்களில்

பறவைகளை வளர்த்து வருவதாய்

பெருமைபட்டுக்கொள்கிறீர்கள்

சிறைப்படுத்துதலுக்கும்

அதுவேதான் பெயர்


விருட்சத்தின் கிளைகளில் அமரும்

அதன் இயல்பினை

அறிந்து வைத்திருக்கிறீர்கள்

அதனால் தான் கூண்டினுள்

குறுக்கும் நெடுக்குமாய்

கம்பிகளைப் பொருத்தியுள்ளீர்கள்


கூண்டிற்குள்ளேயே

அங்குமிங்குமாய் அடிக்கடி

அவை சிறகடித்துப் பார்த்துக்கொள்வதென்பது

சுதந்திரத்தின் மீதிருக்கும்

ஏதோவொரு குருட்டு நம்பிக்கையில்தான்


நீங்கள் இரையோ நீரோ

வைக்கும்போது

உங்களின் விரல்களைக் கடிக்கும்

அவற்றின் கோபம்

உங்களிடமிருந்து

வானத்தையும் வனத்தையும்

கேட்பதாகக்கூட இருக்கலாம்!

- மகேஷ் சிபி

சமையல் பெருஞ்சிறை

அம்மாவின் கைமணம்

அன்பூற்றி வார்க்கப்பட்ட தோசைகள்

அனுபவத்தின் அடுக்களைப் பக்குவம்

பசியாற்றுவதன் உன்னதம்

எனத் தேனில் தோய்ந்த வசனங்களால்

ஆனது சமையல் பெருஞ்சிறை

உணவறை வாசனைக்குள்

ஒளிந்துகிடக்கின்றன

அம்மாவின் வீணை ஆசையும்

சுருதி விலகிய வாழ்வின் தேடலும்!

- கி.சரஸ்வதி

தரிசனம்


விடாமல் கொட்டுகிற மழையில்

தனது வசிப்பிடத்துக்குள் ஒதுங்கிய

நாய்க்குட்டிகளை விரட்டாமல்

இருக்கிற இடத்தில்

கூனிக்குறுகி அமர்ந்து

மகிழும் அந்த

மேம்பாலவாசியை

நினைத்துப்பாருங்கள்

மூடிய நமது

சாளரங்களைத் தாண்டி

தெளிவாய் தெரியும்

கடவுளின்

விஸ்வரூப தரிசனம்!

-கோவை நா.கி.பிரசாத்

காத்திருக்கும் கடவுள்

மாறி மாறி விழும்

மைய சிக்னல்களை

கவனித்து

அடுத்தடுத்து

சிகப்பு சிக்னலை

நோக்கி ஓடி ஓடி

நிற்கும் வாகனத்தாரிடம்

வெள்ளரி விற்கும் சிறுமி

அந்த நாற்புறச் சாலை

கடிகாரத்தை

நொடி முள்ளாக

சுழற்றுகிறாள்.

சாலை விதியை

நொந்து நிற்பவர்களின்

தேவையும்

கருணையும்

அவளது களைப்பைத் துடைத்து

புன்னகை மலர்த்திவிட்டுச் செல்கிறது.

இருப்பின் பாரம்

குறையக் குறைய

அவள் மனம்

பறக்கத் தொடங்கிவிடுகிறது.

இருப்பை நிரப்பி வர

அவள் பறந்தோடிப் போகும்

வேளைகளில்

சமிக்ஞைகள் அவளை

மாறி மாறித் தேட

தொடங்கிவிடுகின்றன

அர்த்தமற்று

வாகன ஓட்டிகளைக் காக்கவைப்பதாய்

தம்மை நொந்தபடி!


-வீ.விஷ்ணுகுமார்

தவணைக் கனவு


திணிக்கும் துணிகளால்

வயிறு உப்பித் தவிக்கும் அலமாரி

பலமுறை கால்களை மாற்றியதால்

நடுவில் வளைந்து

நக்கல் பண்ணும் கட்டில்

காயில் மாற்றி மாற்றி களைத்துப்போனதால்

மெதுவாய் சுழலும் மின்விசிறி

சில மாதங்களாகவே

சிம்னி விளக்காய் சிணுங்கும்

எரிவாயு அடுப்பு

இனியும் ஆகாதென சொல்லப்பட்டு

கறுப்பு வெள்ளை

புள்ளி காட்டும் கலர் டிவி

எல்லாமே

தவணைகளில்

வந்துசேர்ந்து நொந்துபோனவை.

குளிக்கும்போது கறுத்துவிடுமென

கழற்றிவைத்த

கழுத்துச் சங்கிலியை மாற்றி

குண்டுமணித் தங்கமாவது

வாங்கித் தரவேணும் அவளுக்கு

அடுத்த தவணையில்.

- காசாவயல் கண்ணன்

பசியின் வெளிச்சம்

இரவின் தார்ச்சாலையில்

கறுப்புப் பூனையொன்று

நடந்துபோகிறது

இரவு கறுப்பாக இருக்கிறது

தார்ச்சாலை

கறுப்பாக இருக்கிறது

பூனையும் கறுப்புதான்

எல்லாம் கறுப்பாக இருக்கும்

பேரிருளில்

பூனை நடந்துபோகிறது

பசியின் வெளிச்சத்தில்...

-சௌவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE