அதிகம் தண்ணீர் குடித்தால் பனிக்குட நீர் அதிகமாகுமா?: அவ(ள்) நம்பிக்கைகள் -12

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"ஏற்கெனவே தண்ணி உடம்பு. இதுல கால்ல வீக்கம் வேற... தண்ணி நிறைய குடிக்காதே...பிரஷர் அதிகமாயிடும்..!"

உண்மை :

காலில் வீக்கம் என்றாலே பிரஷர் அதிகம் என்று பொருளல்ல.

பொதுவாக, 7-வது மாதத்துக்குப் பிறகு, வளரும் குழந்தை மற்றும் பெரிதாகும் கருப்பை ஆகிய இரண்டும் சேர்த்து உண்டாக்கும் அழுத்தத்தால், கால்களில் வீக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். Physiological edema எனப்படும் இந்தக் கால் வீக்கத்துக்கும், ரத்த அழுத்தத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இது தவிர, தண்ணீர் அதிகம் பருகுவதால் வீக்கம் அதிகரிக்காது என்பதும் உண்மை. என்றாலும் இந்த நேரத்தில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மற்றும் பிரஷர் அளவைப் பரிசோதனை செய்வது அவசியமான ஒன்றாகும்.

நம்பிக்கை :

"தண்ணீர் அதிகம் பருகுவதால், பனிக்குட நீர் அதிகரிக்கும்..?”

உண்மை :

தண்ணீரைக் குடிக்காதே, காலில் வீக்கம், பிரஷர் கூடிவிடும் என்று அறிவுரை கூறுபவர்களே, பனிக்குட நீர் அளவு சற்று குறையும்போது தண்ணீரை அதிகம் பருகச் சொல்வதும் நடக்கும்.

உண்மையில், தேவையான அளவிலான தண்ணீரைக் குடிப்பது தாயின் உடல்நிலைக்கு மிகவும் நல்லதுதான். அதேபோல, தாய் குடிக்கும் நீர் அவரது பனிக்குட நீரின் அளவை நிச்சயம் மாற்றாது. அதேசமயம், தொப்புள் கொடியின் ரத்த ஓட்டம், பனிக்குட நீரை நிச்சயமாக மாற்றியமைக்கும் என்பதால், தகுந்த மருத்துவச் சிகிச்சை இங்குத் தேவைப்படுகிறது என்று புரிந்துகொள்ளுங்கள்.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
ரெட் வைன் தாய்க்கும் சேய்க்கும் நல்லது!? : அவ(ள்) நம்பிக்கைகள்-11

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE