‘ஜெய் பீம்’ போல இன்னொரு படம் வரவேண்டுமா?

By முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

ஜெய் பீம் திரைப்படத்தின் வெற்றி, அதைப்போல மேலும் பல படங்கள் எடுக்கப்படுவதற்குத் தூண்டுகோலாக அமையக்கூடும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டியிருக்கிறார். ஜெய் பீம் போல மேலும் பல திரைப்படங்கள் வருவதை ஊக்குவிப்பது அல்ல, அப்படியான படங்கள் வராதபடி தமிழ்நாட்டின் நிலையை மாற்றுவதே முதலமைச்சரின் கடமை.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 லட்சம் பேர் மட்டுமே இருக்கும் பழங்குடியினரின் வாழ்க்கையை, தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரே வருடத்தில் மாற்றி அமைத்துவிட முடியும். அதற்காகத் தனியே நிதி ஒதுக்க வேண்டிய தேவைகூடக் கிடையாது. அவர்களுக்கென பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி ஒழுங்காக செலவிடப்படுவதை உறுதி செய்தாலே போதும்.

இந்த ஆண்டு (2021-22) பட்ஜெட்டில், பழங்குடியினர் துணைத் திட்டத்தின்கீழ் அவர்களுக்கான திட்டங்களுக்கென்று ரூ.1,306.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை சரியாகச் செலவிட்டால், நிச்சயமாக அவர்களுடைய குடியிருப்பு பிரச்சினைகளைப் பெருமளவு தீர்த்து விடமுடியும். ஒதுக்கீடு செய்யப்படும் தொகை சரியாக செலவிடப்படுவதில்லை என்பதே, இதில் இருக்கும் முக்கியமான பிரச்சினை.

கடந்த ஆண்டு பழங்குடியின மக்களுடைய குடியிருப்புகளுக்கு இணைப்புச் சாலைகள், தெருவிளக்குகள், சோலார் விளக்குகள், குடிநீர் முதலான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதற்கென்று, ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், ரூ.160.39 கோடி 2020-21-ல் செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டுக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நிறைவு செய்யப்பட்ட பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்தால், அவற்றின் நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

தற்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்களை சீராய்வு செய்து, அவற்றை மாற்றி அமைக்க வேண்டும். தமிழக அரசு செயல்படுத்தும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் வளர்ச்சி திட்டத்தின்கீழ் (CTDP), அவர்களுக்கு செங்கல் சூளை வைத்துக் கொடுப்பதற்கென்று ரூ.82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. செங்கல் சூளை வேலையிலிருந்து பழங்குடியினரை மீட்டெடுப்பது மிக முக்கியமான கடமையாகும். அதற்குப் பதிலாக, அவர்களை அதேவேலையில் ஈடுபடுத்துவது அவர்களை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டுவராது.

இந்தியாவில், பள்ளிக் கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாட்டை நாம் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். 2011 சென்சஸ்படி தமிழ்நாட்டில் கல்வி கற்றோர் விகிதம் 80.09%. ஆனால், பழங்குடியினரின் கல்வி விகிதம் 54.34% மட்டும்தான். பழங்குடியினருக்கென 318 ரெசிடென்ஷியல் பள்ளிகளைத் தமிழ்நாடு அரசு நடத்துகிறது. அதில் 22 மேல்நிலைப் பள்ளிகள். அவற்றில் 7,554 மாணவர்கள் படிக்கின்றனர். அந்தப் பள்ளிகளில் படிப்பவர்களில் எத்தனைபேர் மருத்துவப் படிப்புக்குப் போயிருக்கின்றனர் என ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். பழங்குடியினர் பள்ளிகள் அனைத்தையும் எல்லா கட்டமைப்பு வசதிகளும் கொண்ட, ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாத சிறப்புப் பள்ளிகளாக மாற்றியமைப்பது மாநில அரசால் முடியாதா?

பழங்குடியினப் பிள்ளைகளில் பள்ளியில் சேராதவர்கள், இடை நின்றவர்கள் ஒருவர்கூட இல்லை என்ற நிலையை ஏற்படுத்த மாநில அரசால் முடியாதா? பழங்குடியினப் பிள்ளைகளில் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்யும் அனைவரும் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி பெறுவதைத் தமிழ்நாடு அரசால் உறுதிசெய்ய முடியாதா? சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் அனைவருக்கும் வீடு கட்டித்தருவதும், அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அளித்து அவர்களில் தகுதியானவர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றுவதும் தமிழ்நாடு அரசால் முடியாதா?

பழங்குடியினர் மீது தமிழ்நாடு முழுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு ஒரு கமிஷனை அமைத்து, 6 மாதங்களில் அப்பாவிகளைக் கண்டறிந்து அந்த வழக்குகளை வாபஸ்பெறத் தமிழ்நாடு அரசால் முடியாதா? தமிழ்நாடு அரசால் இதுவும் முடியும், இன்னும் அதிகமாகச் செய்வதற்கும் முடியும்.

இந்த ஆட்சி எளிய மக்களுக்கான ஆட்சி என்பதை, நமது முதலமைச்சர் தனது செயல்கள்மூலம் உணர்த்தி வருகிறார். அதிகாரிகள் அதைப் புரிந்துகொண்டு, சற்றே இன்னோவேட்டீவாக திட்டங்களை உருவாக்கினாலே போதும்; ‘ஜெய் பீம்’ போல இன்னொரு படம் எடுக்கவேண்டிய தேவை இருக்காது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE