விவசாயிகளுக்கு வேதனையூட்டும் பெட்ரோலிய தொழிற்சாலை அறிவிப்பு : நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

By கரு.முத்து

அமைதிப்பூங்காவாக இருக்கும் காவிரி டெல்டாவை, போராட்டக்களமாக மாற்றும் வகையில் அமைந்திருக்கிறது தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அறிக்கை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தொடங்கி, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயச் சங்கத்தினர், சுற்றுச்சூழல் அமைப்பினர்வரை இந்த அறிவிப்புக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

எண்ணெய் கிணறு

‘நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய தொகுப்பை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்’ என்பதுதான் அந்த அறிக்கை. இதற்காக ரூ.50 லட்சம் நிதியும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்த அறிவிப்பால், பாதுகாப்பான சூழலிலிருந்த தங்களை பாதுகாப்பற்ற நிலைக்கு திமுக அரசு ஆளாக்கியிருப்பதாகக் கருதுகிறார்கள் விவசாயிகள். தங்களை அச்சுறுத்திவந்த, டெல்டாவை பாலைவனமாக்கும் எண்ணெய் , எரிவாயு நிறுவனங்களின் ஆதிக்கத்திலிருந்து தங்கள் மண் பாதுகாக்கப்பட்டு விட்டது என்ற மகிழ்ச்சியிலிருந்த விவசாயிகளின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல உணர்கிறார்கள் விவசாயிகள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம் சார்பில், பூமிக்கடியிலிருந்து பல ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கப்பட்டு வருகிறது. மீத்தேன் மற்றும் ஷேல் எரிவாயு எடுக்கவும் மத்திய அரசு அனுமதி கொடுத்திருந்தது. அதனால் ஆறுகளும், வாய்க்கால்களும் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் வயல்களில் தற்போது எண்ணெய் குழாய்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. எண்ணெய் கிணறுகளால் நிலத்தடி நீர்வளமும், சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டு டெல்டா விவசாயமே கேள்விக்குறியானது.

சென்னை பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை

இதனால் காவிரி டெல்டாவை பாதுகாக்க, அதை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று டெல்டா விவசாயிகள் வெகுகாலமாக போராடிவந்தனர். நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் மாதக்கணக்கில் விவசாயிகள் நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தினார்கள். அதன்விளைவாக கடந்த 2020-ம் ஆண்டு, அப்போதைய அதிமுக அரசு விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று, டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியது.

இதன் பிறகு தங்கள் பகுதியில் புதிய எண்ணெய் கிணறுகளோ, அது சம்பந்தமான தொழிற்சாலைகளோ வராது என்ற நம்பிக்கையில் இருந்தனர் விவசாயிகள். ஆனால், தற்போதைய தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அவர்களது நம்பிக்கையை சீர்குலைப்பதாக இருக்கிறது.

இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவு 4, உட்பிரிவு 2(b)-ன்கீழ் ’உட்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம் குழாய்கள், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாட்டுக்கான திட்டங்களை இச்சட்டம் கட்டுப்படுத்தாது’ என்று கூறப்பட்டுள்ளது. அதைச் சுட்டிக்காட்டி டெல்டாவில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் வருவதை இந்தச் சட்டம் எப்படி தடுக்கவிருக்கிறது என்று திமுகவின் தங்கம் தென்னரசு அப்போது அரசை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அப்போது இப்பிரிவை சுட்டிக்காட்டி சந்தேகம் எழுப்பிய திமுக, இப்போது ஆளும் கட்சியாக வந்தவுடன் அதே பிரிவைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது. எரிசக்தி போன்ற அத்தியாவசிய திட்டங்கள் இச்சட்டத்தால் கட்டுப்படுத்தப்படாது என்பதால், பெட்ரோலிய தொழிற்சாலைகளையும் கட்டுப்படுத்தாது என்ற அந்தப் பிரிவைக்காட்டி சில அதிகாரிகள் விளக்கம் தருகிறார்கள்.

‘’நாகப்பட்டினம் நரிமணம் பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்க, ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்காக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்காமலே சுமார் 600 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது ஆலையைச் சுற்றிலும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் அமைக்கத் திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. இதுவும் அமைந்தால் இப்பகுதி நிச்சயமாக பெட்ரோலிய ரசாயன மண்டலமாகவே ஆகிவிடும். அதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதன் பயன் கிடைக்காமல் போய்விடும்.

தங்க. கதிரவன்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே, 2016 முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொள்கை ரீதியாக மறுத்துவிட்டது. அதற்குப் பிறகு, எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு 2020-ல் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தையும் கொண்டு வந்து, முழுதாக டெல்டாவை பாதுகாத்தது. அப்படி அதிமுக பார்த்து, பார்த்துப் பாதுகாத்த டெல்டாவை சீரழிக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது.

விவசாயிகளைப் பாதுகாக்க அதிமுக அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால், அதில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, விவசாயத்தை அழிக்க முயல்கிறது திமுக அரசு. ‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளார். அதன்படி அந்தச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளை அமைக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்கிறார், அதிமுகவின் நாகப்பட்டினம் நகரச் செயலாளர், வழக்கறிஞர் தங்க.கதிரவன்.

பி.ஆர்.பாண்டியன்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், ‘’தமிழக அரசின் இந்தப் போக்கு மிகவும் மோசமானது. மீத்தேன் திட்டத்துக்குக் கையெழுத்துப் போட்டதே இதே திமுக அரசுதான். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றுதான் கையெழுத்துப் போட்டோம் என்று பிறகு அதற்கு விளக்கம் சொன்னார் ஸ்டாலின். அதற்குப் பிறகு பல ஆண்டு காலம் விவசாயிகள் பசி, தூக்கம் மறந்து போராடியதன் விளைவாக, ’2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்’ அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது. கடந்தமுறை ஆட்சியில் செய்த அதே வரலாற்றுப் பிழையை, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் திமுக செய்கிறது.

உண்மையான மனசுத்தியோடு முதல்வர் ஸ்டாலின் இதை அணுகவேண்டும். வேளாண் மண்டல சட்டத்தின் பிரிவு 22(2)-ல் 2-வது அட்டவணையில், தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. அப்படியும் சட்டத்தில் இடமில்லை என்றாலும் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்து, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த முன்வரவேண்டும். இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் விவசாயிகள் மிகத்தீவிரமான போராட்டத்தில் களம் இறங்குவோம்” என்கிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ‘கண்ணை இமை காப்பதுபோல் விவசாயிகளுக்கு என்றும் பாதுகாப்பாக இருப்போம்’ என்று உறுதியளித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். விரைந்து செயல்பட்டு அதை நிரூபிக்க வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறது என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE