கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி கணவர், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மேல்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் பைனான்ஸில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இன்று தனது வீட்டில் துவைத்த துணியை இரும்பு கம்பியில் ராமு காயவைக்க முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்ட ராமுவின் மனைவி சரளா ராமுவை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இந்த தாக்குதலில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனிடையே, விபத்து தொடர்பாக வடபொன்பரப்பி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராமு, சரளா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
» குரூப் 4 தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு @ அரியலூர்
» புதிய பேருந்துநிலைய மேற்கூரை விழுந்து கணவன் மனைவி உட்பட 3 காயம் @ கும்பகோணம்