கவனமா படுக்கலனா குழந்தைய கொடி சுத்திக்கும்!? : அவ(ள்) நம்பிக்கைகள்- 8

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"ஒவ்வொரு முறையும் கர்ப்பிணி எழுந்திரிச்சு உக்காந்துதான் திரும்பிப் படுக்கணும்... இல்லேன்னா கொடி சுத்திக்கும்..."

"கர்ப்பிணி குப்புறப் படுத்தா குழந்தையும் குப்புறப் படுத்துக்கும்."

உண்மை :

இதுபோல, கர்ப்பகாலத்தில் படுக்கும் முறைகள் பற்றி பல நம்பிக்கைகள் எப்போதுமே உலவி வருகின்றன. உண்மையில், நிம்மதியாகத் தூங்குவதற்கு ஏதுவான நிலை எதுவோ, அதை கர்ப்பிணிப் பெண்ணே முடிவு செய்து கொள்ளலாம். இப்படித்தான் படுக்க வேண்டும், இப்படித்தான் எழ வேண்டும் என்று கர்ப்பிணிப் பெண்ணைக் கட்டாயப்படுத்துவதில் பலன் எதுவும் கிடையாது.

கர்ப்பகாலத்தில் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால், அதற்கேற்றவாறு படுக்கை விரிப்புகளையும், தலையணையையும் அமைத்துக் கொள்வது தாய்க்கு மிகவும் அவசியம். உதாரணத்துக்கு, வயிறு அல்லது முதுகுப் பகுதியில் ஒரு தலையணையை வைத்துக் கொள்வதும், காலுக்கு ஒரு தலையணை வைத்துக் கொள்வதும் இடுப்பு வலி, கால் வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது.

அதேபோல, இடது பக்கமாகத் திரும்பிப் படுப்பது கர்ப்பிணிகளுக்கு சவுகரியமாக இருப்பதுடன், குழந்தைக்கும் சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது.

குழந்தை குப்புறப் படுப்பது என்று சொல்லப்படுவது பிட்டம் கீழிருக்கும் நிலை (Breech Presentation) ஆகும். இது தாயின் கருப்பை அமைப்பு மற்றும் பனிக்குட நீரின் அளவைச் சார்ந்ததேயன்றி, நிச்சயமாகத் தாய் படுக்கும் முறை சாந்தது அல்ல.

அதேபோல, குழந்தையின் தொப்புள் கொடியின் நீளம் பொதுவாக 50 செ.மீ. வரை இருக்கும். சிலருக்கு இது அளவில் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கவும் வாய்ப்பிருப்பதால், அப்படியிருப்பவர்களுக்கு எஞ்சி இருக்கும் நீளம் பனிக்குட நீரில் நீந்திக் கொண்டிருக்கும் குழந்தையின் ஏதாவது ஒரு பாகத்தில் தொப்புள் கொடி இயல்பாகவே சுற்றிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆக, கொடியின் நீளம்தான் காரணமே தவிர, கொடி சுற்றிப் பிறப்பதற்கும், தாயின் படுக்கும் முறைக்கும் நிச்சயமாய் தொடர்பு எதுவும் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE