குங்குமப்பூ சாப்பிட்டா செக்க செவேலென குழந்தை பிறக்குமா ? :அவ(ள்) நம்பிக்கைகள்-6

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"கர்ப்பகாலத்தில், இரும்புச் சத்து மாத்திரைகள், பேரீச்சை, நாவல்பழம் ஆகியன சாப்பிட்டால் குழந்தையின் நிறத்தைக் குறைத்துவிடும்?”

உண்மை :

இதுவும் "பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்" கதைதான். பொதுவாக இரும்புச் சத்து மாத்திரைகள் அல்லது டானிக் உட்கொள்பவர்களுக்கு இந்தக் கேள்வி இயல்பாக எழுகிறது.

ஏனென்றால், இந்த டானிக் நல்ல கருப்பு நிறத்தில் இருப்பதுடன், அதைச் சாப்பிடும்போது, நாக்கு கருப்பு நிறமாக மாறுவதுடன், அவர்கள் மலத்தின் நிறமும் கருப்பாக வெளியேறுகிறது. அதனாலேயே, பிறக்கும் குழந்தைக்கும் அதன் நிறம் சென்றடைந்து விடுமோ என்ற கலக்கமும் கருவுற்ற தாய்மார்களுக்கிடையே காணப்படுகிறது.

நாவல்பழம் மற்றும் பேரீச்சைக்கும் இதே கேள்விகள்தான். உண்மையில், மருந்தல்ல மரபணு சார்ந்தது குழந்தையின் நிறம் என்பதே அறிவியல் பூர்வமான பதிலாகும்.

மேலும், குழந்தையின் ஆரோக்கியம்தான் இங்கு முக்கியமே தவிர, அந்தக் குழந்தையின் தோலின் நிறம் எதுவாயினும் அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.!

நம்பிக்கை :

"குங்குமப்பூ பாலில் போட்டுக் குடித்தால் குழந்தைக்கு நல்லது. மேலும் அது நல்ல சிவப்பாகப் பிறக்கும்..?”

உண்மை :

குங்குமப்பூ சாப்பிட்டா, குழந்தைக்கு நல்லதோ கெட்டதோ தெரியாது. ஆனால், அது நிச்சயம் அந்த குங்குமப்பூ கடைக்காரருக்கு நல்லது. குழந்தையின் நிறத்தை குங்குமப்பூ சிவப்பாக மாற்றுமா என்றால், சென்ற கேள்விக்கான பதிலைத்தான் இதற்கும் சொல்லவேண்டும்.

குங்குமப்பூ ஒரு உணவு நிறமி மட்டுமே. அது குழந்தையின் நிறத்தை எக்காலத்திலும் மாற்றாது. என்றாலும் குங்குமப்பூவில் உள்ள செரடோனின் பாலுடன் சேர்த்துப் பருகப்படும்போது அது தாயின் மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல உறக்கத்தையும் தருவிக்கிறது என்பது மற்றொரு உண்மை. கர்ப்பகாலத்தில் தாயின் ஆரோக்கியமும் சேயின் ஆரோக்கியமும் வெவ்வேறில்லை என்பதால், கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை உணவில் சேர்ப்பது தவறில்லை. என்றாலும், இறக்குமதி செய்யப்படுவதால் காணப்படும் குங்குமப்பூவின் அதிக விலை, எளிதில் நடக்கும் குங்குமப்பூ கலப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, நமது மண்ணின் நெல்லி, கொய்யா மற்றும் வாழை இன்னும் ஏற்புடையவை.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
இரண்டு உயிர்கள் என்பதால் இரண்டு மடங்கு சாப்பிடணுமா? :அவ(ள்) நம்பிக்கைகள்-5

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE