அதெல்லாம் ஒங்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?

By ரிஷபன்

அம்மிணி எதிர்ல வந்து நின்னு, "ஒங்க போனைக் கொடுங்க"ன்னு கேட்டதும் எனக்கு பக்னு ஆயிருச்சு.

குரலைச் சாதாரணமா வச்சுக்கிட்டு, “ஏம்மா”ன்னு கேட்டேன். “காரணம் சொன்னாத்தான் தருவீங்களோ”ன்னு பறிச்சுக்கிட்டாங்க.

ஆட்டோ குமார்னு தேடி கால் பண்ணாங்க. எதிர்முனைல குரல் கேட்டதும் அம்மிணி முகத்துல தீ கொழுந்துவிட்டு எரிஞ்சுது.

போனைக் கொடுத்து, “வரச் சொல்லுங்க இப்பவே”ன்னாங்க. எங்கே போகன்னு கேட்டா அதுக்கும் பாட்டு விழும்னு, “குமார் கொஞ்சம் வெளியே போகணும் வரியா”னு சொன்னேன்.

போனை வச்சுட்டு, “வரேன்னாரு... ஆமா எதுக்கு என் போன்ல கூப்பிடணும்”னு புரியாம கேட்டேன்.

அம்மிணி ஆவேசமாயிட்டாங்க. “என் நம்பரைப் பார்த்தாலே எடுக்க மாட்டேங்கிறான். அதான்.”

“இப்போ எங்கே போகணும்”னு பவ்வியமா கேட்டேன். “கூட வரப் போறீங்கதானே. அப்ப தெரிஞ்சுக்குங்க”ன்னு, குமார் மேலே இருந்த கடுப்புல கொஞ்சத்தை எனக்கும் ஷேர் செஞ்சாங்க.

ஆட்டோ வந்திருச்சு. விநோதமா ஒரு ஹாரன் வச்சுருக்கார். ஹொய்ங் ஹொய்ங்னு அதை ரெண்டு தடவை அடிப்பாரு. “குமார் வந்தாச்சு. வா”ன்னு கூப்பிட்டா, அஞ்சு நிமிசம் லேட் செஞ்சு கிளம்பினாங்க.

குமார் கில்லாடி. அம்மிணியைப் பார்த்ததுமே பளிச்சுனு சிரிச்சாரு. “சாரிம்மா. ஒங்க கால் வந்தப்போ போன் எங்கூட்டு அம்மிணி கையில இருந்துச்சு. அதான்”னு குலையடிச்சார்.

அம்மிணி பாதி கூல் ஆயிட்டாங்க. அம்மிணி ஒக்கார்ந்து எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்ததும் ஆட்டோவை ஸ்டார்ட் செஞ்சாரு.

“எங்கே போவணும்னு கேக்கலியே”ன்னு முந்திரிக் கொட்டையா நான் கேட்டுத் தொலைச்சேன். குமார் மையமா சிரிச்சாரு. “எங்கே போகணும்னாலும் என் ஆட்டோ ரெடி”ன்னு.

ஆட்டோக்காரருக்கு இருக்கிற புத்திசாலித்தனம் எனக்கு இல்லியேங்கிற மாதிரி, அம்மிணி ஒரு லுக்கு விட்டாங்க. “ரெண்டு மூணு எடம் போவணும். முதல்லே இவரு தங்கச்சி வீட்டுக்கு போவோம்.”

குமார்தான் எங்க ஆஸ்தான ஆட்டோக்காரர். நாங்க விசிட் செய்யிற எல்லா வீடும் அத்துப்படி.

குமாரோட போன் பாடுச்சு. இடது கையில வச்சு பேச ஆரம்பிச்சு அப்புறம் கழுத்துல சொருகிக்கிட்டாரு. “உம்... ஆங்... உம்”னு சொல்லிகிட்டே, ரெண்டு கார் ஒரு குட்டி யானை நாலு டூவீலருக்கு நடுவுல அசால்ட்டா விட்டாரு.

அம்மிணி நல்லா ஆங்கமா ஒக்கார்ந்து வந்ததால, இதை எல்லாம் கண்டுக்கல. எனக்கு பாதி உசுரு வெளியே இருந்ததால, போனை எப்போ வைப்பார்னு நடுங்கிக்கிட்டே பார்த்தேன்.

அது முடிஞ்சதும் அடுத்த கால். “அரை மணில வரேம்மா”ன்னு யாரோ ஒரு சவாரிக்கு சொன்னாரு.

உடனே அடுத்த அழைப்பு. இப்போ குமார் குரல்ல ஒரு எரிச்சல். “சவாரில இருக்கேன்னு தெரியும்ல. வைடி போனை”ன்னு சவுண்டு விட்டாரு.

“என்னன்னு கேக்கலாம்ல”ன்னு நான் சொல்லித் தொலைச்சுட்டேன். குமார் திரும்பி என்னைப் பார்த்து பேசிக்கிட்டே ஆட்டோ ஓட்டுனாரு.

“சனியன். காலைலயே ராவடிய ஆரம்பிச்சுருச்சு. சவாரிக்கு போனாத்தானே நாலு காசு பாக்கலாம். எப்ப பாரு துட்டைக் கொடுன்னா எவன் கையில துட்டு இருக்கு”ன்னு குமுறினாரு.

ஏன் வாயை விட்டோம்னு பயம் வந்துருச்சு. குமார், அவரு அம்மிணியைத் தைரியமா திட்டுனதைக் கேட்டு ஆச்சரியமா இருந்தாலும் உசுரு பயம் உலுக்கிச்சு.

அடுத்த போன். “ஒரு தடவை சொன்னா புரியாதா”ன்னு கத்துனாரு. அவ்ளோதான். இப்போ ஆட்டோ ஆட்டோமெட்டிக்கா ஓட ஆரம்பிச்சுது. சைக்கிள் கேப்லலாம் விட்டு அடிச்சாரு.

“மெதுவா போலாமே”ன்னு எனக்கே கேக்காத குரல்ல சொன்னேன். நல்லவேளை தங்கச்சி வீடு வந்துருச்சு. அம்மிணி கிச்சன்ல போய் தங்கச்சிட்ட ஏதோ பேசிட்டு வந்தப்போ, நின்னு போன மூச்சை நான் தேடிப் பிடிச்சு வாங்கிக்கிட்டு இருந்தேன்.

“போவலாமா”ன்னு அம்மிணி வந்தப்போ, “வீட்டுக்குத்தானே”ன்னு கேட்டேன். அம்மிணி அலட்டிக்காம வெளியே போய் ஆட்டோல உக்காந்தாங்க. குமார் போன் விட்டு விட்டு அடிச்சுது. “போன்”னு நான் சொன்னதை கேக்காத மாதிரி, ஆட்டோவ ஸ்டார்ட் செஞ்சாரு.

“இவரு ஃப்ரெண்ட் வீடு. சுபாஷ் நகர்”னாங்க அம்மிணி. எதுக்கு இப்போ என் தங்கச்சி, என் ஃப்ரெண்ட்னு விசிட்னு மண்டை காஞ்சுது.

மறுபடி குமார் போன். ”உனக்கெல்லாம் அறிவே இல்லையா”ன்னு சொல்லிட்டு பழைய ஸ்டைல்ல தாறுமாறா ஆட்டோவை விட்டாரு. ஃப்ரெண்டு வீட்டுலயும் ஒரு சொம்பு தண்ணியைக் குடிச்சு உயிரை மீட்டப்போ, அம்மிணி உள்ர போய் அவன் வொய்ஃப் கூட பேசிட்டு வந்தாங்க.

ஆட்டோல ஏறுனதும் அம்மிணி வாயையே பார்த்தேன். “வீட்டுக்குப் போன்னு சொல்வாங்க”ன்னு,

ஆனா, கொடுத்தாங்க பாருங்க ஒரு ஷாக் !

“குமார் ஒங்க வீட்டுக்குப் போங்க.”

இப்போ குமாரே ஆடிப் போயிட்டார். “என் வூட்டுக்கா”ன்னு பார்த்தாரு. அம்மிணி கெத்தா சிரிச்சாங்க.

குமார் வீட்டு வாசல்ல ஆட்டோ நின்னுச்சு. ஆட்டோவை விட்டு இறங்கறதா வேணாமான்னு குமார் தடுமாறினப்போ, “வீட்டுக்கு வந்தா உள்ர கூப்பிட மாட்டியா”னு செல்லமா மிரட்டுனாங்க.

குமார் வொய்ஃப்கிட்டேயும் போய் பேசுனாங்க. குமார் அவங்க எதிர்ல அடக்க ஒடுக்கமா நின்னதைப் பார்த்தேன். என்ன டாபிக் ஓடுதுன்னு புரியல. அம்மிணி டெக்னிக்கா என்னை உள்ளே வர விடாம தடுத்துட்டுப் போயிட்டாங்க. “ஆட்டோலயே இருங்க. ஒரே நிமிசம்”னு சொல்லிட்டு.

ஒருவேளை குமார் வொய்ஃப்க்கு ஏதாச்சும் அட்வைஸ் பண்ணப் போறாங்கன்னு நினைச்சு அடங்கிட்டேன். பத்து நிமிசம் கழிச்சு அம்மிணி வந்தாங்க. குமார் ஏதோ காருக்குக் கதவைத் தொறக்கிறாப்ல ஆட்டோ பக்கம் வந்து நின்னு, அம்மிணியை ஏறச் சொன்னாரு. அப்புறம்தான் என்னையே ஏற விட்டாரு.

“வீட்டுக்கு போவலாம்”னு அம்மிணி சொன்னதும் எனக்கு நிம்மதி பாதிதான் வந்துச்சு. எதுக்கு இப்போ இந்த விசிட்லாம்.

இறங்கினப்போ குமார் சல்யூட் வைக்காத குறையா, மரியாதை வச்சு திரும்பிப் போனாரு.

அம்மிணி சொன்னாங்க. “அடுத்த வாரம் அவங்க எல்லாரையும் நம்ம வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டுருக்கேன். எதுக்குன்னு தெரியுமா?”

ஙேன்னு முழிச்சப்போ அதிரடியா சொன்னாங்க. “என்னோட வெட்டிங் டே! அதெல்லாம் ஒங்களுக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE