ஒட்டிக்கிட்டு வந்த அண்ணாச்சி!

By ரிஷபன்

ஒவ்வொரு வருசமும் மார்ச்ல கணக்கு முடிக்கிறதுக்கு முன்னால, டெல்லில மீட்டிங் போடுவாங்க. எல்லா ஸ்டேட்லேர்ந்தும் போவோம்.

பாஸ் கூப்பிட்டுச் சொல்லிட்டாரு. "மூணு பேரும் போயிட்டு வந்துருங்க. இப்பவே டிக்கட் புக் பண்ணிருங்க.”

பாஸ் அந்தப் பக்கம் போனதும் ரெண்டு பேரும் ஆர்வமா என் சீட்டுக்கு பக்கத்துல வந்தாங்க.

ஒரு அண்ணாச்சி, ஒரு அம்மிணின்னு என் டீம். “நீங்களே டிக்கட் போட்டுருங்க சார். பணம் கொடுத்துடறோம்”னு ரெண்டு பேரும் (வழக்கம்போல) சொல்லிட்டாங்க.

அம்மிணி மட்டும் ஒரு சீட்டை நீட்டுனாங்க. “இவருக்கும் சேர்த்து ரெண்டு டிக்கெட்டா எனக்குப் போட்டுருங்க. நம்மகூட ரெயில்ல வந்துட்டு டெல்லில ஒரு வேலையா போயிருவாரு.”

“ரிட்டர்னுக்கும் போடணுமா”ன்னு அப்பிராணியா கேட்டேன். வேணாமாம். ஒன் வே மட்டும்னு சொன்னாங்க. டிக்கெட் போட்டதும் அம்மிணி கரெக்டா பணம் செட்டில் பண்ணிட்டாங்க. அண்ணாச்சி டெல்லில வந்து தரேன்னாரு.

மீட்டிங்குக்கு தேவையான ஃபைல்ஸ் நான் எடுத்து வச்சப்போ, எங்கெங்கே போகலாம்னு ரெண்டு பேரும் லிஸ்ட் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு ஒரு கூட்டமே கூடியிருச்சு. ஆளுக்கொரு லிஸ்ட் கொடுத்தாங்க.

ஒரு அம்மிணி வந்து நின்னாங்க. “ஒரு பொருள் தரேன். கெஸ்ட் ஹவுஸ்ல வந்து எம் பொண்ணே வாங்கிக்குவா. ஒதவ முடியுமா?“ன்னாங்க. இதுல என்ன கஷ்டம்னு தலையாட்டுனேன். அவங்க குஷியா போனதும், டீம் அம்மிணி வந்தாங்க. “வெவரம் புரியாம தலையாட்டிட்டீங்க. அவங்க தரேன்னு சொன்ன பொருள் என்னனு கேட்டீங்களா.”

விசாரிச்சா அம்மிக்கல்லாம்! மிக்சில அரைச்சா சமையல் நல்லா இல்லியாம். ஸ்ஸ்ஸப்பா... ஒரு கும்புடு போட்டு, மாட்டேன்னுட்டேன். மீட்டிங் போகன்னு ஒரு பொட்டி வச்சிருக்கோம். அதுல டிஸ்கஸ் செய்யத் தேவையான ஃபைல்ஸ், பஞ்சிங் மெஷின், கத்திரி, ரப்பர் பேண்ட்னு அடைச்சிருவோம்.

“சார் இந்தப் பொட்டியை மட்டும் நீங்களே கொண்டு வந்துருங்க. எங்க வீட்டுல ரெண்டு வானரம் இருக்கு. உள்ர என்ன வச்சிருக்கன்னு கொதறிடும்”னுஅன்பா சொல்லி என் தலையில கட்டிட்டாங்க.

“ஒரே பேன்ட வச்சுக்கிட்டு ஒரு வாரம்னாலும் ஆம்பளைங்க சமாளிச்சுருவாங்க. நம்மளால அப்படி முடியுமா”னு, என் டீம் அம்மிணி போன்ல சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டுத் தொலைச்சேன். என்னா ஒரு வில்லத்தனம்.

கெளம்பிட்டோம். ஏசி 2 டயர். ஒரே இடத்துல நாலு பேரும். அண்ணாச்சியையும் என்னையும் அப்பர்ல தள்ளிட்டு அம்மிணி டெக்னிக்கா கீழ் பர்த் ரெண்டையும் புடிச்சுக்கிட்டாங்க.

காபி, டீ , சாப்பாடு எது வந்தாலும் அண்ணாச்சி கண்ணைத் தொறக்காம படுத்திருந்தாரு. நானே நாலு பேருக்கும் வாங்க வேண்டியதாச்சு. “கணக்கு எழுதிருங்க. மொத்தமா தீர்த்துடறேன்”னாரு அண்ணாச்சி. செலவைச் சொன்னாரா என்னையேச் சொன்னாரான்னே புரியல.

கீழே இறங்கலாம்னு பார்த்தா, அம்மிணி அண்ட் கோ கம்பளியைப் போர்த்திக்கிட்டு அசையாம படுத்திருந்தாங்க. ஒக்கார்ந்து வந்ததுல தலை இடிச்சதால படுத்தே கிடக்க வேண்டியிருந்துச்சு. எதிர் பர்த்ல அந்த அண்ணாச்சி, இனிமே தூங்கவே மாட்டாத மாதிரி தூங்குனாரு. டீ, சாப்பாடு வரப்போ எழுப்பிக் கொடுக்க வேண்டியதாச்சு.

எறங்கப்போற ஸ்டேஷன் வந்ததும் கீழ் பர்த் அம்மிணி முனகுனாங்க. “கொடுத்து வச்சவங்க நீங்க ரெண்டு பேரும். ஒரு தொல்லையும் இல்லாம நிம்மதியா படுத்துக்கிட்டே வந்துட்டீங்க. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ஆளுங்க எறங்கி ஏறுனப்போ என்னா சத்தம். சீட்டு நம்பர் தெரியாம எழுப்பி வேற விட்டாங்க. பொட்டிய பார்த்துக்க முழிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதாபோச்சு.”

டெல்லி போனதும் கெஸ்ட் ஹவுஸ் போக டாக்ஸி புடிச்சா, அம்மிணியோட அவரும் ஏறிட்டாரு. “கெஸ்ட் ஹவுஸ் பார்க்கணுமாம்”னு அம்மிணி கொஞ்சுனாங்க.

கெஸ்ட் ஹவுஸ்ல மேனேஜர் முறைச்சாரு. “மூணு பேருக்குத்தானே புக்கிங் வந்துச்சு.”

“இவர் இப்போ கிளம்பிருவாரு”ன்னு அம்மிணி சொல்லவும் மேனேஜர் மேலே வளர்த்தல. அம்மிணி ரூம்ல சிங்கிள் காட்னு, என் ரூம்ல கோர்த்து விட்டாரு.

“காலைல எட்டு மணிக்கே மீட்டிங்”னு சொன்னதை ரெண்டு பேரும் காதுல வாங்கல. ஏதோ கிசுகிசுன்னு பேசுனாங்க.

அம்மிணியோட அண்ணாச்சி இந்தா கிளம்புவாரு அந்தா கிளம்புவாருன்னு பாத்தா... கூடவே சாப்பிட வந்துட்டாரு. “சாப்பிட்டு போயிரட்டுமேன்னு நாதான் நிறுத்தி வச்சேன்”னு அம்மிணி குழைஞ்சாங்க.

சப்பாத்தியை இதுவரை பாத்ததே இல்லாதது மாதிரி அண்ணாச்சி வெளுத்துக் கட்டுனாரு. கெஸ்ட் ஹவுஸ்ல சாப்பாட்டுக்குப் பணம் கட்டணும். மேனேஜர் அரண்டு போய் ஒரு பேப்பர்ல இவர் சாப்பிட்டதைக் கணக்கு எழுத ஆரம்பிச்சுட்டாரு.

நைட் ராக மாலிகைதான்! அட, அவர் விட்ட குறட்டை. ரொம்ப லேட்டாச்சு, தூங்கிட்டு காலைல போவார்னு அம்மிணி தன் ரூமுக்குள்ர போய் கதவை சாத்திக்கிச்சு. டபுள் காட்ல அவரு சுதந்திரமா தூங்க நான் ஒரு ஓரத்தில அரைத் தூக்கத்துல.

காலைல எங்க கூடவே கார்ல வந்தாரு. ஹெட் ஆபிஸ் வாசல்ல இறங்கிக்கிட்டாரு. ஈவினிங் கரெக்டா வந்துட்டாரு. மீட்டிங் முடியற வரை இதே கதைதான்.

“நீங்களே முடிச்சிருங்க சார். ஷாப்பிங் போயிட்டு வரோம்”னு, ரெண்டு பேரும் நடுவுல ஒருநாள் காலைல ஓடிட்டாங்க. முழி பிதுங்கிப் போச்சு.

ரிட்டர்ன்ல ஸ்டேஷனுக்கும் அண்ணாச்சி வந்தாரு. ரெயில்ல அதே கோச்ல ஏறினாரு. எங்க பக்கத்துலயே வந்து ஒக்காந்தாரு. செண்ட் ஆஃப் பண்ணப் போறாருன்னு நினைச்சா மனுசன் அசையவே இல்லை.

வண்டி கெளம்பிருச்சு. சின்னப் புள்ளைத்தனமா கேட்டேன். “ரிட்டர்ன் டிக்கெட் போடலியே. இவரு எப்படி”ன்னு.

“டில்லில மீட்டிங்னதும் இவரு பதறிட்டாரு. தனியா போவியான்னு. ஆபிசுக்கு லீவு போட்டு என் கூடவே வரேன்னு. நீங்க டிக்கெட் போட்டதும் உடனேயே அவரும் ரெயில்வேல தெரிஞ்சவங்களை வச்சு அதே கோச்ல டிக்கட் போட்டுட்டாரு.”

அப்புறம் ஒண்ணு சொன்னாங்க பாருங்க... ஆயுசுக்கும் மறக்க முடியாதபடி.

“என்ன இருந்தாலும் ரெண்டு ஆம்பளைங்ககூட, என்னை எப்படித் தனியா அனுப்பறதுன்னு இவருதான் ரொம்பத் தவிச்சுப் போயிட்டாரு!”

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE