இழப்பீட்டில் ஏமாற்றம்...வேதனையில் விவசாயிகள்

By கரு.முத்து

வெப்பச்சலன மழை, அதைத் தொடரும் வடகிழக்குப் பருவமழை என்று தொடர்ந்து மழைபெய்து பூமி குளிர்ந்து கிடந்தாலும்கூட உள்ளம் கொதித்துப்போய் இருக்கின்றனர் டெல்டா விவசாயிகள். அவர்களின் கொதிப்புக்குக் காரணம் அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதுதான்.

விஸ்வநாதன்

கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டுத் தொகை இம்மாதம் மூன்றாவது வாரம் வரையிலும் அறிவிக்கப் படாமலே இருந்தது. பல்வேறு விவசாய சங்கங்களும் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்திவந்த நிலையில் தற்போது விவசாயிகளுக்கான இழப்பீடு அறிவிக்கப்பட்டு, வங்கிக் கணக்குகள் வழி வழங்கப்படுகிறது. இதில்தான் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டதாகப் புலம்புகிறார்கள் விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் சங்கத்தலைவர் விஸ்வநாதன், ‘’நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் ஜனவரி மாதம் பெய்த பெரும் மழையால் நெற்கதிர்கள் முற்றிலும் அழிந்தது. அதை அதிகாரிகளும், அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்துச்சென்றனர். அதையடுத்து தமிழக அரசு 100 சதவீதம் முழு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாகவும் வழங்கியது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, காப்பீட்டு நிறுவனம் மூலமாகப் பெற்றுத் தரப்படும் என்றும் அப்போது அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அதனால் நாங்கள் நிம்மதியாக இருந்தோம். ஆனால், இப்போது பெரும்பாலான ஊர்களில் பாதிப்பே இல்லை என்றும், அதனால் இழப்பீடு ’ஜீரோ’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமே பாதிப்பு என்று சொல்லி நிவாரணம் கொடுத்திருக்கும்போது இவர்கள் எப்படி பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு வந்தார்கள்? இழப்பீடு இல்லை என்றால் கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது என்று தெரியாமல் தவிக்கிறோம்” என்கிறார்.

மயிலாடுதுறை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயலும் விவசாயிகள்

பயிர்க் காப்பீடு நிறுவனமான இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் மட்டும் 182 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு இல்லை என குறிப்பிட்டு வழங்க மறுத்துள்ளது. மேலும் 53 கிராமங்களில் பெயரளவுக்கு மட்டுமே இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் என்று 10 சதவிகிதம் வரை அக்கிராமங்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பைச் சந்தித்த விவசாயிகள் மீள வழி இன்றி பரிதவிக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இப்படி விவசாயிகள் ஏமாற்றப்படும் நிலையில் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் மோசடி குறித்தும், காப்பீட்டில் எப்படிப்பட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்குகிறார் டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம். ‘’ பாரத பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த 2020 – 21 சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு நிறுவனங்கள் 13.01 லட்சம் விவசாயிகளிடம் பிரிமியமாக ரூ. 3176.53 கோடியை வசூலித்துள்ளன. ஆனால், தற்போது சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 1597.18 கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் பெற்ற கொள்ளை லாபம் ரூ. 1579 கோடி ரூபாய்.

ஆறுபாதி கல்யாணம்

பொதுவாக பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நிறையக் குறைபாடுகள் உள்ளன. இந்த முறை காப்பீடு நிறுவனங்களுக்குச் சாதகமாக உள்ளது. ஐந்து ஆண்டுகள் புள்ளிவிவரத்தின் படி 28 சதவீத விவசாயிகள் மட்டுமே இழப்பீடு பெற்றுள்ளனர். மீதி 72 சதவீத விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட இழப்பீடு கிடைக்கவில்லை. பயிர்க் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகள் ரத்தம்சிந்தி சம்பாதித்த பணம் சுமார் 33,000 கோடி ரூபாய் நியாயமின்றி சம்பாதித்துள்ளனர். இதை மாற்றி அமைக்கத் தமிழக முதல்வர், பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

எப்படியும் இழப்பீடு வரும் என்று காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பக்கத்துப் பக்கத்து வயல்களில் ஒரு வயலுக்கு இழப்பீடு கிடைத்து, இன்னொரு வயலுக்கு இல்லை என்பது அநீதி. அதனால் பயிர்க் காப்பீடு செய்து பூஜ்யம் முதல் 19 சதவீதம் வரையிலும் இழப்பீடு அறிவித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த பட்சம் 20 சதவீதம் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க தமிழ்நாடு அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடப்பு பருவம் தொடங்கி இனிவரும் காலங்களில் பயிர்க் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளும் குறைந்த பட்சம் 20 சதவீத இழப்பீடு பெற ’ஊக்கத்தொகை இணைந்த, புதிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை’ அமல்படுத்த வேண்டும். இது குறித்து மாநில திட்டக்குழுவில் எங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகள் பூஜ்ஜியம் இழப்பீடு பெற்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் ஊக்கத் தொகை/ இழப்பீடு வழங்க வேண்டும்” என்ற யோசனைகளை முன்வைக்கிறார் ஆறுபாதி கல்யாணம்.

வேளாண் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தியை சந்தித்து மனு அளிக்கும் பி.ஆர்.பாண்டியன்

பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இழப்பீடு வழங்க வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் 9-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தியை நேரில் சந்தித்து விளக்க மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

அப்போது, முதல்வர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பாதிப்பு குறித்து முழு விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக வேளாண் துறை இயக்குநர் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்களுக்கும் முழு ஆதாரங்களோடு விடுதல் கிராமங்களில் ஆய்வறிக்கை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சமயமூர்த்தி உறுதியளித்ததாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

மெய்யநாதன்

விவசாயிகளின் ஏமாற்றம் குறித்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் கேட்டபோது, ‘’இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளேன். வேளாண் அதிகாரிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஆலோசித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதனால் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம்” என்று மெய்யநாதன் உறுதியளித்தார்.

சோறுபோடும் விவசாயிகளை சோகத்திலிருந்து காப்பாற்றுங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE