மாடிப்படி ஏறாதே!? பளு தூக்காதே!? : அவ(ள்) நம்பிக்கைகள்-3

By டாக்டர் சசித்ரா தாமோதரன்

நம்பிக்கை :

"கருத்தரித்த முதல் 3 மாதங்கள் மாடிப்படியில் ஏறக்கூடாது! மலைகளுக்குப் பயணம் செய்யக் கூடாது! ஓய்வு மிகவும் அவசியம்..?"

உண்மை :

மாடிப்படியில் தினமும் மனைவியைத் தூக்கிச் செல்லத் தெம்பிருக்கும் கணவன்மார்கள் மட்டுமே, இந்தப் படிக்கட்டு கேள்வியைக் கேட்கலாம்.

இயற்கையின் வரமான கர்ப்ப காலத்தில், ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்துக்கு முன்பைப் போலவே தனது இயல்பான வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும். ஆனால், அதற்கு உடன் இருக்கும் மற்றவர்களும் உதவ வேண்டும் என்பதே உண்மை.

கர்ப்பகாலத்தில் படிக்கட்டுகளிலும் ஏறலாம், மலைப் பிரயாணங்களையும் மேற்கொள்ளலாம். அத்துடன் மருத்துவக் காரணங்கள் இன்றி, படுக்கை ஓய்வு என்பது எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக உடல் அசதியையும், மனச்சோர்வையும் அதிகரிப்பதுடன், உடல் எடையையும் சேர்த்தே அதிகரிக்கச் செய்யும் என்பதே உண்மை.

நம்பிக்கை :

"உடற்பயிற்சி மற்றும் பளு தூக்குதல் போன்றவற்றைக் கர்ப்பகாலத்தில் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!"

உண்மை :

சாதாரண காலங்களில் உடற்பயிற்சி என்ன நன்மைகளைத் தருமோ, அதேபோன்ற அல்லது கூடுதல் பலன்களைத்தான் கர்ப்பகாலத்தில் உடற்பயிற்சிகள் அளிக்கின்றன.

உடற்பயிற்சி கர்ப்பிணிப் பெண்ணின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நுரையீரல்களின் செயல்பாட்டைச் செம்மைப்படுத்தும். உடல் தசைகளை வலிமைப்படுத்துவதோடு, மன உற்சாகத்தையும் அதிகரிக்கும். இத்தனை நேரடி விளைவுகளைத் தருவதோடு உடற்பயிற்சி பிரசவத்தையும் சுலபமாக்குகிறது.

அதேசமயம், இந்த அனுகூலங்களை உள்ளே வளரும் குழந்தைக்கும் தாயின் உடல் கடத்துவதால், பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் உடற்பயிற்சிகளில் இயல்பாகவே ஈடுபாட்டை உண்டாக்கும் எபிஜெனிடிக்ஸ் பயன்பாடும் நிகழ்கிறது.

இதனால்தான், நடைபயிற்சி, நீச்சல், எளிமையான பளு தூக்குதல், யோகா போன்ற உடல் ஒத்துழைக்கும் அனைத்து பயிற்சிகளையும் கர்ப்பகாலத்தில் மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமின்றி கர்ப்பகால சர்க்கரை நோய்க்கும், ரத்த அழுத்தத்துக்கும் மருந்தை விட உடற்பயிற்சிகளையே அதிகம் பரிந்துரைக்கின்றனர்.

ஆக, மருத்துவர் பரிந்துரையுடன் நீங்கள் உங்களுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதேநேரம் கருப்பை வாய் விரிந்த நிலை, பனிக்குட நீர் கசிவு, கீழாக அமைந்துள்ள நஞ்சு, முந்தைய குறைப்பிரசவம், இருதய மற்றும் நுரையீரல் நோய்கள் போன்ற நிலைகளில், தொடர் உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
100 நாள் வாந்தியும், சாம்பல் தின்பதும்!: அவ(ள்) நம்பிக்கைகள் - 2

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE