லென்ஸ் சிமிட்டும் நேரம் - 8

By வனிலா பாலாஜி

சில வருடங்களுக்கு முன்பு மயான கொள்ளை திருவிழாவை பார்ப்பதற்காக, காவேரிப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கே நான் மிகவும் ரசித்து க்ளிக்கியவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்தப் பயணம் குறித்து முன்பே நாங்கள் திட்டமிட்டுக் கொண்டபடி, மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று காலையில் பெங்களூருவில் இருந்து புறப்பட்டோம். ஊர் போய் சேர சரியாக 2 மணி நேரம் பிடித்தது. திருவிழா நடந்ததால் வாகனங்களை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. கோயிலுக்குச் சற்று தொலைவில் காரை நிறுத்திவிட்டு, சாலையின் இருபுறமும் புதிதாக முளைத்திருந்த திருவிழாக் கடைகளை ரசித்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.

அந்த ஊரில் கிராம தேவதைகளான பூங்காவனத்தம்மன், அங்காளம்மன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. விழா எடுக்கப்படும் காரணத்தையும் கதையையும் விக்கிபீடியாவும் இன்னும் சில இணைய தளங்களும் ஏற்கெனவே அதிகமாக செய்திகளை பகிர்ந்துள்ளன. ஆகவே இப்பதிவில், விழாவில் நான் எடுத்த புகைப்படங்கள், ரசித்தவை, மனதை உறுத்தியவை ஆகியவற்றை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவிழாவில் முக்கியமாக, மக்கள் தாங்கள் வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துகின்றனர். கன்னத்தில் அலகு குத்துவதும், ஆண்களும் பெண்களும், சிறுவர் சிறுமியரும், காளி வேடமிட்டு மயானத்துக்குச் சென்று அங்கே சில சடங்குகளைச் செய்துவிட்டு, வேடம் களைவதும் நேர்த்திக்கடனில் சேர்கிறது.

அம்மனின் ஆயுதமான சூலாயுதத்தை மக்கள் பல அளவுகளில் கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர். ஒரு சாண் அளவிலிருந்து, 301 அடி வரையிலும் சூலாயுதத்தின் அளவு வேறுபடுகிறது. இதில் என்னை வெகுவாறு பாதித்த விஷயம், சூலாயுத கம்பிகளில் பிடித்திருந்த துரு. அந்தத் துருப்பிடித்த சூலாயுதங்களை கன்னத்தில் குத்தினால் செப்டிக் ஆகிவிடாதா? அதிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருந்தது. அடுத்தமுறை செல்லும்போது, கண்டிப்பாக அதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

சென்னையிலிருந்து எனது கேமரா நண்பர்கள் பலரும் அந்த நிகழ்வுக்கு வந்திருந்தாலும் அதில் என்னைத் தவிர பெண்கள் யாரும் இல்லாதது, மகளிர் தினத்தில் எனக்கான வருத்தமாக இருந்தது. ஆனாலும் நான் எடுத்த ஒரு சிறுமியின் புகைப்படம் எனது அந்த வாட்டத்தைப் போக்கியது.

பொதுவாக, பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள். அந்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அவர்களை பல கைகள் இருப்பதைப் போல் சித்தரிப்பது வழக்கம். அந்தக் காட்சி அப்படியே புகைப்படமாக கிடைத்தால்... அப்படி ஒரு காட்சியைப் பார்த்ததும் என்னால் அந்தச் சிறுமியை படம் எடுக்காமல் விட முடியவில்லை. சாதாரண ஓர் சிறுமியை இப்படி பல கைகளுடன் பார்த்தது, பெண்களின் சூப்பர் பவரை உணர்த்துவது போல் இருந்தது.

மதியம் வரை கோயிலில் நேரத்தை கடத்திவிட்டு, ஊருக்குச் செல்லலாம் என கிளம்பி வெளியில் வரும்பொழுதுதான் தெரிந்தது, நாங்கள் வரும்பொழுது கூட்டம் சற்று குறைவாக இருந்த தெருக்களை பலவிதமான காளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நீண்ட நெடிய சூலங்களுக்கு தப்பித்து ஒருவழியாக கார் நிறுத்திய இடத்துக்கு வந்து சேர்ந்தோம்.

தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் இருக்கும் மயானத்தில்தான், திருவிழாவின் இன்ன பிற சடங்குகள் நடைபெறும். நேரமின்மை காரணமாக அந்தச் சடங்குகளை பார்க்கமுடியாமலேயே ஊர் திரும்பினோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE