இசை வலம்: கம்பீர நாட்டையில் கணபதி!

By ரவிகுமார் சிவி

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அருளிய கீர்த்தனை 'மகா கணபதிம்'. நாட்டை ராகத்தில் பாரம்பரியமாக இந்தப் பாடல் பாடப்படுவது வழக்கம். மரபார்ந்த இந்தப் பாடலை ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம், கொன்னக்கோல் என இன்றைய தலைமுறையும் சுவீகரித்துக்கொண்டு பாடுவதைக் கேட்கும்போது, அலாதியான பரவசம் மனதில் ஏற்படுகிறது.

பிரியங்கா, சைனிகாவின் குரலில் நாட்டை ராகத்தின் மேன்மையான சங்கதிகள் இம்மியளவும் பிசகாமல் இடம்பெற்றிருக்கின்றன. அக்‌ஷயின் காத்திரமான குரலில் கொன்னக்கோலில் ஜதிகளின் பிரயோகம் தொடங்கும்போதே, ஒரு ராக விருந்துக்கு நம்முடைய செவிகள் தயாராகிவிடுகின்றன.

சர்கம், சரோட், சாரங்கியின் தந்திகளில் ஸ்வரங்களின் தவழலும் அதற்கு இணையாகப் பயணிக்கும் இரு பெண்களின் குரலிசையும் சாகசம் செய்கின்றன. சாதாரண சாகசம் இல்லை; ரோலர் கோஸ்டர் சாகசம்!

https://www.youtube.com/watch?v=m0JcwL7ohaA

அமைதி வடிவமெடுத்த அதிரடிப் பாடல்!

வயலின் மேதை எல்.சுப்ரமணியத்தின் மகள் பிந்து சுப்ரமணியம் குரலில் கேட்பது புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது. நாகசுரத்திலும், புல்லாங்குழல் இசைப் பின்னணியிலும் கேட்ட இந்தப் பாடல், நவீன வாத்தியக் கலவையான இசையோடு தற்போது ஒலிக்கிறது. கீத் பீட்டரின் பாஸ் கிடாரில் தொடங்கி வயலின் (அம்பி சுப்ரமணியம்), டிரம்ஸ் (கார்த்திக் மணி), கிடார் (ஆல்வின் ஃபெர்னாண்டஸ்), கீபோர்ட் (விவேக் சந்தோஷ்) என ஒவ்வொரு இடையிசையிலும் ஒவ்வொரு வாத்தியத்தின் ஒலியைப் பிரதானமாக வெளிப்படுத்தியிருப்பது ரம்யமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பிந்து சுப்ரமணியம் இந்தப் பாடலை மிதமான தாளக்கட்டுடன் இனிமையாகப் பாடியிருக்கும் உத்தியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த த்வனிதான், இதற்கு முன்பாக இந்தப் பாடலைப் பாடியவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது. ஆர்ப்பாட்டமாக இதுவரை ஒலித்த பாடலை, அமைதியின் சுகந்தத்தோடு இசைத்திருக்கிறது `சுப்ரமண்யா’ எனும் இளைஞர் இசைக் குழு. இன்னும் பாடலின் பெயரையே சொல்லவில்லையே என வாசகர்கள் யோசிப்பது புரிகிறது. சொல்கிறேன்!

இந்தக் கால ஏ.ஆர்.ஆர் என்றால் ஆஸ்கர் நாயகன் என எல்லாருக்கும் தெரியும். அந்தக் காலத்தில் ஓர் ஏ.ஆர்.ஆர் இருந்தார். அவர், பெங்களூர் ஏ.ஆர்.ரமணியம்மாள். காத்திரமான குரலில் இவர் பாடிய காவடிப் பாடல்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு தைப்பூச திருவிழாக்களில் இருக்கும். இவர் பாடிய சம்ஸ்கிருத கணபதி துதிப் பாடல் மிகவும் பிரசித்தமானது. பெங்களூர் ரமணியம்மாள் பாடிப் பிரபலப்படுத்திய ‘பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னகதின் பஜன்க்ரே’ பாடலைத்தான், இப்படி அமைதியான நதியில் மிதக்கவிட்டிருக்கிறார்கள் ‘சுப்ரமண்யா’ குழுவினர். மூலப் பாடலில், பின்னணியில் பெங்களூர் ரமணியம்மாளின் கணீர் குரலுக்குத் தோதாக அசுர வாத்தியமான நாகசுரம் தவிலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அவரது கம்பீரக் குரலில் இந்தப் பாடலைக் கேட்பது பக்திப் பரவசத்தை அளித்தது என்றால், இன்றைய தலைமுறையின் இசையில் புதிய தடத்தில் அதே சுகானுபவம் தொடர்கிறது. இதே பாடலை எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் கேட்பது வேறொரு சுகம்!

https://www.youtube.com/watch?v=GhLjkQ-r05I&list=RDGhLjkQ-r05I&start_radio=1

ஆடு மயிலே கூத்தாடு மயிலே...

இந்தப் பாடலும் பெங்களூர் ரமணியம்மாள் பாடிப் பிரபலப்படுத்திய பாடல்தான். அவர் பாடிய சில பாடல்களை எம்சி வீடியோஸுக்காக வைக்கம் விஜயலட்சுமி தற்போது பாடி, அதன் காணொலிகள் யூடியூபில் காணக் கிடைக்கின்றன.

தெம்மாங்கு இசையின் பின்னணியில், ‘தன்னானனானே... தன தந்தானானே…’ எனும் விஜயலட்சுமியின் தனித்துவமான ஆலாபனையோடு, எலக்ட்ரானிக் ரிதம் பாக்ஸின் ஒலி மிக மிக மெதுவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இசைத் தோரணத்தைத் தாண்டியதும் நம்மை வரவேற்கிறது விஜயலட்சுமியின் கம்பீரமான குரலில் பாடல்.

‘ஆடு மயிலே கூத்தாடு மயிலே

கதிர்காமக் கந்தனைக் கூத்தாடு மயிலே

அருகினில் நின்று அருள் புரியும் குகன் கந்தன்

அருமையாய் அந்தரங்கத் திருக்கும் குகன்...’

வைக்கம் விஜயலட்சுமிக்கு ‘செல்லுலாய்ட்' மலையாளப் படத்தில் ‘காற்றே காற்றே நீ பூக்கா மரத்தினு' என்னும் பின்னணிப் பாடலைப் பாடும் வாய்ப்பை எம்.ஜெயச்சந்திரன் வழங்கினார். அந்தப் பாடலைப் பாடியதன் மூலம் கேரள அரசின் சிறப்பு விருதும், ‘நாடன்' படத்தில் ‘ஒற்றைக்கு பாடுந்நு பூங்குயிலே…' பாடலைப் பாடியதற்காக 2013-ல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான கேரள அரசின் விருதும் பெற்றவர் விஜயலட்சுமி. 2014-ல் ஃபிலிம்பேர் விருதும் இவருக்குக் கிடைத்தது.

இந்தப் பாடலில் இடம்பெறும் கதிர்காமம் முருகன் கோயில், இலங்கை நாட்டின் கண்டி நகரில் இருக்கும் பிரசித்தி பெற்ற கோயில். முருகனின் திருவுருவம் பொறிக்கப்பட்ட திரைச்சீலைக்குத்தான் இங்கு வழிபாடு செய்கின்றனர். அதுதான் இந்தக் கோயிலில் விசேஷம்.

ஆடு மயிலே பாடலைக் காண:

https://www.youtube.com/watch?v=0GpPDc6-hVs

பெண்ணே சக்தியின் உருதான்!

மகிஷாசுர மர்தினியான அம்பிகையின் வீரத்தை, கருணையை, தீயதை அழித்து நன்மையை உலகுக்கு வழங்கும் பாங்கை வெளிப்படுத்துவது,

‘அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

பூரிகுடும்பினி பூரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே’

எனும் இந்த சுலோகம் ஆதிசங்கரர் அருளியது.

'அரிய பெரிய காரியங்களை எல்லாம் சாதிப்பவளே, விந்திய மலையில் வீற்றிருப்பவளே...' என்றெல்லாம் அம்பிகையின் சக்தியை, பராக்கிரமத்தை வார்த்தைக்கு வார்த்தை விவரிக்கும் இந்தப் பாடலை, வழக்கமான அதே மெட்டிலேயே பிரதான குரலில் மிகவும் பொருத்தமான ஸ்ருதி அளவில் பாடியிருக்கிறார் சௌரபா. சில இடங்களில் ராம் பிரகாஷின் குரலும் சேர்ந்துகொள்கிறது. சில இடங்களில் சமர்த்தன் சொல்லும் ஜதிக் கோவைகளும் புதிய அனுபவத்தைத் தருகின்றன.

இந்தியாவின் எந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் தெரிந்த பாடலுக்கு, முற்றிலும் புதிதான ஓர் இசைப் பூச்சைக் கொடுத்து இந்த காணொலியைத் தயாரித்திருக்கிறார் நட்சத்திரா புரொடக் ஷன்ஸ் ஸ்ரீநாத் குள்ளாள். தேஜஸ் வெள்ளாளின் கிதார், கௌஷிக்கின் பாஸ் கிதார், ஜோயலின் டிரம்ஸ், சமர்த்தனின் தபேலா, வருண் ராவின் புல்லாங்குழல் ஆகியவை நம் காதுகளுக்கு வாத்திய விருந்தை அளிக்கின்றன.

சக்தியை மையப்படுத்திய இந்த ஸ்லோகப் பாட்டுக்கான காட்சிகளும், ரசனையைத் தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றன. சவாலான வேலைகளைச் செய்யும் பெண்கள், விளையாட்டில் முத்திரை பதிக்கும் பெண்கள் என பெரும்பாலும் பெண் சக்தியை மையப்படுத்தி காட்சிகளைத் தொகுத்திருப்பதில், மலைமகள் மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுமே பெருமை வாய்ந்தவள்தான் என உணர்த்தும் சங்கரரின் ஸ்லோகத்தை மானசீகமாக உருவகப்படுத்துகிறது இந்தப் பாடல்!

https://www.youtube.com/watch?v=EbcdDXEPukk

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE