நிழற்சாலை

By காமதேனு

ஒளிநாளென்பது...

ஐந்தாவது தளத்தின் பத்தாவது படுக்கையில்
ஆதரவற்றுக் கிடக்கும்
அந்த உயிருக்கு
தூரத்து வான் பட்டாசின் வெளிச்சம்
போதுமானதாக இருக்கிறது.

நோய்மையுற்ற குழந்தையின்

சின்னஞ்சிறு அக்குளுக்குள் போய்

ஒளிந்து உட்கார்ந்துகொள்கிறது
வீட்டின் பண்டிகை.

யாரோ நெய்கிறார்கள்
யாரோ அடுப்பில் இருக்கிறார்கள்
யாரோ கந்தகம் சுற்றுகிறார்கள்
யாரோ கொண்டாடுகிறார்கள்.

எந்த விழா நாள்
எப்படி புடவை எடுத்துக்கொடுத்தாலும்
எண்பத்தைந்தைக் கடந்த கமலாப்பாட்டி
அதையுடுத்த வேறோர் நாள் தேர்ந்தெடுத்துவிட்டு

பழைய உடுப்புடனேயே இருக்கிறாள்
அப்படி என்னதான் இருக்கும்
யாரிடமும் சொல்லா
அன்போ
வலியோ
ஏதொன்றோ!

-சுரேஷ் சூர்யா

பாவனை தோல்விகள்

பூனை மாதிரி கத்திவிட்டு

நானில்லை என்கிறான்

தெரியாதது போல் முகத்தை

வைத்துக்கொண்டு

பூனை வந்துவிட்டதா என்கிறேன்

ஜன்னலுக்குப் பின்னாலிருப்பதாக

கைக்காட்டிவிட்டு

உரக்கச் சிரிக்கிறான்

சிங்கம்

நாய்க்குட்டி

பாம்பு

ஆடு என

நீள்கிறது சிரிப்பு

ஏமாந்துட்டியா என கேட்டபடியே

என் ஒவ்வொரு ஏமாற்றத்தின்போதும்

ஒரு முத்தமிடுகிறான்

இப்படித்தான்

அவனுக்குத் தெரிந்த விலங்குகளுடன்

சேர்ந்து வேட்டையாடிவிடுகிறேன்

குட்டி மகனின்

முத்தங்களை.

- ச.ஜெய்

அறிந்திரா கலை


முன்பொரு காலத்தில்

கூத்தாடிய ரங்கு தாத்தா

இன்று தனியார் வங்கியில்

ஏடிஎம் காவலாளி

கூத்து கட்டும் சதுரம் போல்தான்

தெரிகிறது ஏடிஎம் அறை

சலங்கை இறுக்கிய

சுவட்டில் கச்சிதமாய் பொருந்துகிறது பூட்ஸ்

வட்டமிட்டு ஆடி

விழித்திருந்த

இரவுகள் புதிதல்ல

வாசலுக்கு வெளியே

வயதான கால்களின்

ஆட்டத்தைக் காண

தனிமை மட்டும் அமர்ந்திருக்கிறது

நடிக்கத் தெரிவதில்

சந்தேகமே இல்லை

நுழைவோரை

சந்தேகிப்பதுபோல்

நடிப்பதில்தான்

தடுமாறி நிற்கிறார்

தாத்தா!

-ந.சிவநேசன்

உறுத்தல்கள்


வாடிக்கையாளர்கள்

எவருமில்லாத சாலையை

ஒரு மரத்தினடியிலமர்ந்து

வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்

செருப்பு தைப்பவர்


அவர் பார்வை எப்போதும்

கடந்துசெல்பவர்களின் பாதங்களிலேயே

லயித்திருக்கும்

தனது கடையை நோக்கி

ஏதாவது பாதங்கள்

நெருங்கினாலே போதும்

ஊசியை எடுத்துக்கொள்வார்

உன்னிப்பு இன்னும் கூர்மையாகும்

இன்று யதேச்சையாய்

என் இருசக்கர வாகனம்

அவர் கடை அருகில் நிற்கவும்

பரபரப்பாகிறார்


சில நொடிகளுக்குப் பின்

ஏமாற்றம் அடைந்தவராய்

இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்

அறுந்துபோகாத என் செருப்பு

இப்போது உறுத்தத் தொடங்குகிறது


- மகேஷ் சிபி

நினைவுச் சுமை

நனவிலி மனதின் கனவுகளாய்

உட்புகும் மூளையின்

நியமனத்தை உணர்ச்சிக் கூடுகள்

கர்ப்ப காலம்போல்

நினைவகங்களில் சேமிக்க,

மனசாட்சிகளை மாபெரும்

படைவலிமையாக்கி புற விழியில்

அகப்படாத நிலைத்தேக்கியாய்

மாற்றி வைக்கிறது மனது!

-பா.தேசப்பிரியா

ஸ்பேனர் மீட்டும் சரஸ்வதி!

உட்காருவதற்கும் நேரமற்ற பொழுதுகளில்

இருசக்கர வாகனங்களின் பழுதுநீக்கும் கடையில்

நட்டுகளுக்கும் ஸ்பேனர்களுக்கும் இடையில்

நகர முடியாமல் சிக்கியிருக்கின்றன

அவனது நாட்கள்

வறுமையின் வெளிச்சங்களை

கிரீஸ் அப்பிய கருமைகொண்டு

மறைக்கிறான் அவன்

இடுப்பொடிக்கும் வேலைநாளான

ஆயுதபூஜையன்று வேலைமுடிந்து

இரவில் சற்று முன்னதாக வீடு திரும்புகிறான்

பிழைப்பதற்குப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டவனின்

பையில் நிறைந்துகிடக்கும்

பொரி பொட்டுக்கடலைகளுக்குள்

வாசம் செய்கிறாள் சரஸ்வதி

- நேசன் மகதி

இன்னொரு நட்சத்திரம்

மிகச் சிறியதாய்

இருக்கிறது அந்த ஒளி

அது விழுந்த மனத்தினிடையே

தெரியும் துண்டு வானுக்கு

நித்திரையில்லை

நிஜம் எதுவோ என

அவ்வொளியைக் கையிலடைத்து

நடக்கிறேன்

நான் ஓடியதாகச் சொன்னவர்களை

பார்க்கையில்

பறந்ததாகச் சொன்னார்கள்

திரும்பி என்னையே பார்த்த பிறகு

சரி எனப்பட்டது பறந்ததும்

இளைப்பாறலற்ற என்னுடல் மீது

என் சுமை

தாங்கொணா அமைதியாக

பூமியைச் சுமந்தபடி செல்வதாக

தொடுவானம் மினுமினுக்கிறது

அண்ணாந்து பார்க்கிறேன்

தலைகுனிந்து பார்த்தது போல

பிரபஞ்சத் தோகை துண்டு வானத்தை

விரிக்கிறது

பயணக் களைப்பில் வெகு தூரத்தில்

புள்ளியாய் அசைய ஆரம்பிக்கிறேன்

உங்களுக்கு வானில் புலப்படலாம்

இன்னொரு நட்சத்திரம்.

- கவிஜி

மொழியறிதல்

தாயைப் பிரிந்து கத்தித் தீர்க்கிறது

பால்மணம் மாறாத நாய்க்குட்டி

என் அணைப்பு போதாதபோது

அதற்கு ஆறுதல் சொல்லித்

தேற்றவேனும்

அதன் மொழியைக்

கற்றிருக்கலாம் நான்.

- கி.சரஸ்வதி

அடையாளங்கள்

யானை பொம்மையுடன்

பேருந்தில் மகளும் நானும்.

'ஒரு அரை டிக்கெட்

ஒரு லக்கேஜ்'

என்றபடி

இருக்கைகளுக்கு நடுவிலான

நீள் பாதையில்

நடக்கிறார் நடத்துநர்.

- ரகுநாத்.வ

இராப்பறவை

உறக்கமிழந்த இரவு

பேராழியை நிரப்புகிறது

விரகத் தழும்புகளால்


ஆர்ப்பரிக்கும் அலைகளாய்

எண்ணக் கரைகளில்

மோதி உடையும் நினைவுகள்


பொலிவிழந்த வான் பரப்பில்

நேசத்தின் சாட்சிகளாய்

எஞ்சிய சில நட்சத்திரங்கள்


நிசப்தம் நீள்பொழுதொன்றை

தழுவி வீசும் பெருங்காற்றில்

அகாலத்தின் சமிக்ஞைகள்

திரள் துயர் ஒலியெழுப்பி

ஓலமிட்டுப் பறக்கிறது

தூரத்திலோர் இராப்பறவை!


- வேலணையூர் ரஜிந்தன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE