பேசிக்கிட்டாங்க...

By காமதேனு

திருச்சி

பெட்ரோல் பங்க் ஒன்றில்...

"அண்ணே... தீபாவளிக்கு நோட்டுப் போட்டாச்சு. பார்த்துப் போட்டுக் குடுங்க...”

“என்னா நோட்டு?”

“தீபாவளி காசு எழுத மொய் நோட்டுண்ணே.”

“யோவ்... நானே ஒரு இத்துப்போன டிவிஎஸ் 50-க்கு 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். என்கிட்டப் போய் கேட்கிற?"

“நீங்க நம்ம பங்க் ரெகுலர் கஸ்டமராச்சே.”

“பெட்ரோல் விக்கிற காசுல நானே மாசத்துக்கு ஒருவாட்டிதான் வண்டியை வெளில எடுக்கிறேன்... ரெகுலர் கஸ்டமராம் ரெகுலர் கஸ்டமர்.”

(பங்க் ஊழியர் ஸ்தம்பித்து நிற்கிறார்)

-சிவம், திருச்சி

தஞ்சாவூர்

பேருந்தில் கண்டக்டரும் பள்ளி மாணவனும்...

“தம்பி! உன் முதுகில் இருக்கிற புத்தக மூட்டையை இறக்கிவெச்சா, அந்த இடத்திலே நாலுபேரு நிற்கலாம்!”

“அதுக்குத்தான் இறக்கல! கேரளாவுல குடைபிடிச்சு சோஷியல் டிஸ்டன்ஸிங்கைக் கடைப்பிடிக்கிற மாதிரி... நாங்க ஸ்கூல் பேகை சுமந்து சோஷியல் டிஸ்டன்ஸிங்கை நிலை நாட்டறோம்!”

“ஆனாலும் இந்தக் கரோனா காலத்திலே நல்ல தயாராயிட்டீங்கடா டோய்!”

- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

தஞ்சாவூர்

ஏடிஎம் பூத் வாசலில் பணம் எடுத்து திரும்பியவரிடம்...

“என்னடா... டல்லா வர்றே? எதிர்பார்த்தது கிடைக்கலையோ?”

“டேய்... எவன் பணத்தையோ எடுத்துட்டு வர்ற மாதிரி கேட்கிறே? என் பணம்டா... பேலன்ஸ் குறையுதேன்னு கவலையா வந்தா கலாய்க்கிறே?”

“அதுசரி... எதிர்பாராததை எதிர்பார்த்தா... இப்படித்தான் தோணும். நீ பிக்பாஸ் பார்க்கிறத நிறுத்து... எல்லாம் சரியாகிடும்.”

- பா.து.பிரகாஷ், தஞ்சாவூர்

வேதாரண்யம்

கடைவீதியில் 2 இளைஞர்கள்...

“மாப்ள... நானும் நாலஞ்சு நாளா பார்க்கறேன். யாரு வண்டிலயாச்சும் ஏறிப் போயிட்டிருக்கே... உன் பைக் என்னாச்சு?”

“வீட்டுல கிடக்குடா... தொழில்ல வருமானம் சரியா இல்ல. அதுக்குக்காக தீபாவளி டயத்துல சரக்கடிக்காம இருக்க முடியமா? அதான் தெரிஞ்சவங்க வண்டில ஏறிப் போயிட்டிருக்கேன். பெட்ரோல் போடற காசை மிச்சம் பண்ணி, அதுல சரக்கு வாங்கிடலாம்ல!”

“என்னவோ பொட்டிக்கடைக்கு சரக்கு வாங்கிப் போடுற மாதிரி சொல்ற... டாஸ்மாக் சரக்கு அடிக்க பெட்ரோல் காசை சேவ் பண்ற. இதுல பொருளாதார நிபுணர் மாதிரி பேச்சு வேற!”

-மருத.வடுகநாதன், வேதாரண்யம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE