லென்ஸ் சிமிட்டும் நேரம் - 6

By வனிலா பாலாஜி

அண்மையில், கன்னடத்தில் புதிதாக பாடம் ஒன்றை படித்திருக்கிறான் எனது மூத்த மகன் மதி. அது கர்நாடகாவில் உள்ள சிவகங்கே எனும் ஆன்மிக தளத்தைப் பற்றியது. அங்கிருக்கும் பாதாள கங்கையையும் மலை உச்சியில் உள்ள பிரம்மாண்ட நந்தி சிலையையும் பற்றி படிக்கையில், அவனுக்கு வியப்பாக இருந்திருக்கிறது. உடனே, அங்கு செல்லவேண்டும் என நச்சரிக்க ஆரம்பித்துவிட்டான். பாடம் சம்பந்தப்பட்ட ஓர் இடத்துக்கு இழுக்கிறானே என்றதும் எங்களால் தட்டவும்முடியவில்லை; ஓகே சொன்னோம்.

நாங்கள் அந்த ஊருக்குப் போகப் போகிறோம் என்றதும் மதியின் நண்பர்கள் இருவரும் எங்களோடு ஒட்டிக் கொண்டார்கள். பெங்களூருவில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் தும்கூர் செல்லும் சாலையில் இருக்கிறது சிவகங்கே. வீட்டைவிட்டுக் கிளம்பிய 2 மணி நேரத்தில் நாங்கள் சிவகங்கேயில் இருந்தோம். அங்கு ஏதும் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகம் இருந்ததால், வழியிலேயே காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம்.

ஒரு காலத்தில் ஹொய்சாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிவகங்கே, பெங்களூருவைத் தோற்றுவித்த மகாடி கெம்பே கவுடாவால் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அடிவாரத்திலிருந்து மலை உச்சிக்குச் செல்லும் வழி நெடுகிலும் சின்னச் சின்னதாய் கோயில்கள் கண்ணில்படுகின்றன. அதில் ஒன்றுதான் பாதாள கங்கை. 2 பாறைகளுக்கு நடுவில் நீர் ஊற்று ஒன்று சலசலத்துப் பயணிக்கிறது. அதையே, பாதாள கங்கை என்று வழிபடுகின்றனர் மக்கள். இந்த ஊற்றை கங்கைக்கு நிகராக மக்கள் போற்றுவதால் சிவகங்கேவுக்கு தக்‌ஷிண காசி (தென் காசி) என்ற பெயரும் உண்டு.

மலை நெடுகிலும் சின்னச் சின்னதாய் கோயில்கள் என்று சொன்னேன் இல்லையா... அப்படி ஓரிடத்தில் நந்தி சிலை ஒன்றை சுத்தம்செய்து, அதற்கு பூஜை செய்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி. அனைத்து சாதியினரும் அரச்சகர் ஆகலாம் என இப்போதுதான் நாம் அரசாணை பிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நந்தி கோயிலில் பல வருடங்களுக்கு முன்பு இருந்தே இந்தப் பாட்டிதான் அர்ச்சகர் என்றபோது, ஆச்சரியமாகத்தான் இருந்தது.

மலை உச்சியில் உள்ள பிரம்மாண்ட நந்தியைத் தரிசிக்கத்தான் மதி ஆவலோடு வந்தான். ஆனால், எங்களால் ஒரு கட்டத்துக்கு மேல் நடக்கமுடியவில்லை. அதனால் ஓய்வாக ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டோம். பாலாஜிதான் மதியையும் அவனது நண்பர்களையும் கூட்டிக்கொண்டு மலை உச்சிவரை சென்றார்.

சிவகங்கே மலையில் இருக்கும் கோயில்களையும், அந்த மலையின் அழகையும் நாங்கள் ரசித்துத் திரும்பிய அதே நேரத்தில், இன்னொரு சங்கடத்தையும் எதிர்கொண்டோம். மலை ஏறுபவர்கள் தாங்கள் எடுத்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே பொறுப்பின்றி வீசிச் செல்கிறார்கள். மலையில் இருக்கும் குரங்குகள் உள்ளிட்ட பிராணிகளுக்கு இவற்றால் பெரும் ஆபத்து இருப்பதுடன், இந்தக் கழிவுகள் சுற்றுப்புறச் சூழலையும் மாசுபடுத்துகின்றன.

பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிப் பேசும்போது, இன்னொரு நிகழ்வும் ஞாபகத்துக்கு வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் ‘கடலைக்காய் பரிஷே’ எனும் கடலைச் சந்தை ஒன்று நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற அந்தச் சந்தையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் விவசாயிகள் செலவழித்தது ரூ.1.7 லட்சம். “பிளாஸ்டிக் பைகள் தரமாட்டோம் என்று சொல்ல வேண்டியதுதானே” என அந்த விவசாயிகளைக் கேட்டால், “நாங்கள் தரமாட்டோம் என்று சொன்னால் எங்களிடம் கடலை வாங்காமல் பக்கத்துக் கடைகளில் வாங்கிச் செல்வார்கள்” என்று வருத்தப்பட்டனர். “பாலிதீன் பைகளுக்காக நாங்கள் செலவு செய்த பணம் எங்கள் கையில் இருந்திருந்தால், நாங்கள் இந்தச் சந்தைக்கு வந்துபோகிற பயணச் செலவுக்கு உபயோகப்பட்டிருக்கும்” என்பது அவர்களின் உபரி புலம்பல்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE