பேசிக்கிட்டாங்க

By காமதேனு

தஞ்சாவூர்

பெட்ரோல் பங்க் ஊழியரும் கரைவேட்டிக்காரரும்...

“பெட்ரோல், சாதாவா, ஸ்பீடா சார்?”

“சாதாவையே ஸ்பீடா போடுப்பா. ஆங்... என்னப்பா லிட்டர் 103 ரூபாய்னு போட்டிருக்கு?”

“விலை ஏறிடுச்சு சார்.”

“இப்பத்தானே எங்க தலைவர் லிட்டருக்கு 3 ரூபாய் குறைச்சாரு?"

“டெல்லி தலைவர் ஏத்திட்டாரே சார். பேனர்ல அவர் படம் இருக்கு. வேணும்னா இங்கே இருந்தே பேசிக்குங்க...”

“ஏம்ப்பா என்னை வெச்சு ஸ்டேட்டுக்கும் சென்ட்ரலுக்கும் சண்டை மூட்டிவிடப் பார்க்கிறியா? வழக்கம்போல 100 ரூபாய்க்குப் போட்டுவுடு.”

-கி. வசுதேவன், தஞ்சாவூர்

கும்பகோணம்

ஒரு சலூன் கடையில்...

“சூப்பர் தம்பி! சலூன்ல சாம்பிராணி போட்டு, ஊதுபத்தியெல்லாம் கொளுத்தி வச்சு தெய்வீகமா வெச்சிருக்க.”

“தொழில் செய்யற இடம் நமக்கு கோயில் மாதிரிதானுங்களே!”

“அப்படீன்னா கோயில்ல மொட்டையடிக்க ஃப்ரீன்னு அரசாங்கம் உத்தரவு போட்டிக்கே... நீ முடிவெட்ட பணம் வாங்கமாட்டேன்னு நினைக்கிறேன்.”

“இங்கே கட்டிங் மொட்டை எல்லாத்துக்கும் காசுதான். உங்களுக்கு மட்டும் வேணும்னா மொட்டை ஃப்ரீயா அடிச்சிவிடுகிறேன்.”

“அய்யய்யோ... சும்மா தமாஷுக்குச் சொன்னேன். கட்டிங் மட்டும் பண்ணிவிடுப்பா. என்னைக் காலி பண்ணிடாதே!”

- எஸ்.இராஜேந்திரன், கபிஸ்தலம்

தஞ்சாவூர்

மெக்கானிக் ஷாப் ஒன்றில்...

“சார்... இன்னுமா இந்த ஸ்கூட்டர வெச்சிருக்கீங்க? வருஷாவருஷம் ஆயுதபூஜைக்கு ரிப்பேர் பார்க்க தள்ளிட்டு வந்துடறீங்களே?"

“ஏற்கெனவே பிசினஸ் நட்டத்துல ஓடுது. புது வண்டியெல்லாம் வாங்க வழியில்லப்பா. நீ நக்கல் பண்ணாம ரிப்பேர் பாரு!”

“ஏர் இந்தியாவையே வித்து கவர்ன்மென்ட் டாட்டா காட்ற காலத்தில, நீங்க இன்னும் கஷ்டம் கஷ்டம்னு கம்பி கட்ற கதையையே சொல்லிட்டு இருக்கீங்க...ம்ஹூம்!”

- பா.து. பிரகாஷ், தஞ்சாவூர்

வேதாரண்யம்

காய்கறிக் கடையில் இரு பெண்கள்...

“என்னக்கா இந்த முறை ஆயுத பூஜை ரொம்ப ஸ்பெஷல் போல? வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்ல படம்லாம் ஒரே அமர்க்களமா இருக்கு!”

“ஆமா! வீட்ல உள்ள எல்லா சாமான்களையும் வெச்சி பூஜை பண்ணிட்டேன்!"

“அதென்ன நடுவுல சிலிண்டரையும் வெச்சி அதுக்குப் பொட்டெல்லாம் வெச்சிருக்கீங்க?”

“பின்னே... இதைவிட காஸ்ட்லியான பொருள் வேறென்ன? அடுத்த மாசம் சிலிண்டர் வாங்க முடியுமோ என்னவோ, அதான் இப்போவே சிறப்பா செலிப்ரேட் பண்ணிட்டேன்!”

-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE