அன்று காலையில் பால்ய நண்பரை போனில் அழைத்த பாச்சா, ஊர்ப்பாசத்தில் உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்தான். அப்போது, “ஞாபகமிருக்கா மச்சி? நம்ம க்ளாஸ்மேட் கார்த்தி வீடு. அட... மேலத் தெருவுல அந்த ஒத்த ஓட்டு(!) வீடு மட்டும் தன்னந்தனியா இருக்குமே...” என்று பாச்சா பேசிக்கொண்டிருக்க, குறுகுறுப்புடன் குறுக்கிட்ட பறக்கும் பைக், “என்னப்பா இது பால்ய நண்பர்கூட பேசும்போதுகூட பாலிட்டிக்ஸைக் கலக்கணுமா?” என்று கேட்டது. பதற்றமடைந்த பாச்சா பாதியில் காலைக் கட் செய்துவிட்டு, “ஊர்க்காரங்ககிட்ட பேசும்போதுகூட உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட்டை மிக்ஸ் பண்ணிப் பேசுற ஆளா நானு? உன் அலும்பு பெரிய அலும்புப்பா” என்று சலித்தபடி ஏட்டிக்குப்போட்டிக்கு... ஸாரி, பேட்டிக்குத் தயாரானான்.
அன்று முதலாமவர் சீமான்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உள்ளூர்த் தம்பிகள் ஒவ்வொருவராக போனில் சொல்லிக்கொண்டே வர, ‘பாட்ஷா’ பாணியில், “போகட்டும்!”, “ஜெயிச்சுக்கட்டும்!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாகப் பதிலளித்துக்கொண்டிருந்தார், அகில இந்தியாவின் ஆகப் பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவரது மேஜையில், அமெரிக்க அதிபர் முதல் ஆப்கன் பிரதமர்வரை அனைவருக்கும் எழுதப்பட்ட குடியுரிமைப் பரிந்துரைக் கடிதங்கள் குவிந்துகிடந்தன. ‘காரியாப்பட்டியிலிருந்து வரும் என் தம்பி கரியமிலன் கணினி மூலம் காசு கலெக்ட் செய்வதில் தேர்ந்தவன். தம்பிக்குக் குடியுரிமை தந்தால் தரணியெங்கும் இருந்து தங்கக்காசுகளை உங்கள் தேசத்துக்கு வாரிக்கொடுப்பான்’ என்று ஒரு கடிதத்தில் செந்தமிழிலேயே எழுதியிருந்தார் செந்தமிழன்.
அந்தக் கடிதங்களைக் கண்டு மிரண்டபடி, “என்ன சார் இது? உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சு திராவிடக் கட்சிகளுக்கு டெர்ரரா மாறுவீங்கன்னு பார்த்தா, டெபாசிட்டே போய் உங்க தம்பிகள் டென்ஷன்ல இருக்காங்கன்னு டிவியில நியூஸா வருது... இப்படி தொடர்ந்து ஜெயிக்காம இருக்கிறதுக்குன்னு ஏதாச்சும் ஸ்பெஷல் வியூகம் வெச்சிருக்கீங்களா?” என்று கேட்டு இம்சையைத் தொடங்கினான் பாச்சா.
“என் கட்சி ஒரு காட்டுச் செடி. ஒற்றைச் செடி உருவாவதற்கு ஒரு வித்து தேவைப்படுது. சத்தான வித்தாக இருந்தாலும் மொத்து மொத்து என மொத்தப்பட்டால் அதன் வளர்ச்சி சற்றே தாமதப்படும் என்கிறது தாவிரவியல். ஆகவே...” என்று அவ்வப்போது சிந்தனையில் வந்துவிழும் சொற்களைச் சேகரித்துக்கோர்த்து அள்ளிவிட்டுக்கொண்டிருந்தார் சீமான்.
“ம்க்கும். ஒரு பக்கம் உங்க கட்சிக்கு உலகமெங்கும் கிளைகள் இருக்குன்னு கோபால் பல்பொடி விளம்பர ரேஞ்சுக்குக் குதூகலம் காட்டுறீங்க. இன்னொரு பக்கம் சின்னஞ்சிறு செடி சென்டிமீட்டர் சென்டிமீட்டராத்தான் வளரும்னு சென்டிமென்ட் பேசுறீங்க. சீமான் பேச்சு சீஸன் முடிஞ்சா போச்சுங்கிற ரேஞ்சுக்கு சோஷியல் மீடியாவுல சொல்லிக்காட்டுறாங்களே... இப்படி இருந்தா கட்சியை எப்படி வளர்க்கிறது?” என்றான் பாச்சா.
“அப்படியெல்லாம் சொல்லிட முடியாது. நான் என்ன பேசுறேனோ அதே மாடுலேஷன்ல மாவீர முழக்கம் போடுற தம்பிகள் என்கூட இருக்கிற வரைக்கும் என் கட்சிக்கு அழிவு கிடையாது” என்று சிங்கம் போல சிலிர்த்துக்கொண்ட சீமானிடம், “எங்கே கூடவே இருக்கிறது? உங்களை மாதிரியே, சுத்துன சாட்டையைத்தான் சுருட்டி உள்ளே வெச்சுட்டாங்க. அடுத்து யூடியூப் யூத்ஸ் பார்த்து ட்ரெண்ட் பண்ணினாத்தான் உங்க கட்சி இருக்கிறதே தெரியுது” என்று சீமானைச் சிந்திக்கவைத்துவிட்டு, சீனிலிருந்து எக்ஸிட் ஆனான் பாச்சா.
அடுத்து அண்ணாமலை.
டெய்லி பேஸில் டெல்லியிலிருந்து வரும் காலுக்காக அரக்கப்பரக்கக் காத்திருந்த அண்ணாமலை, அலைபேசியில் அமித் ஷாவின் குரல் ஒலித்ததும் அரண்டுபோய்க் கேட்டுக்கொண்டிருந்தார்.
“ஐஸா க்யா ஹுவா ஹமாரா பார்ட்டி கோ? கேஸே ஹம்கோ ஏக் வோட் மிலா? இஸ்கே பாரே மேய்(ன்) முஜே அபி பூரா ரிப்போர்ட்ஸ் சாஹியே” என்று அலைபேசி வழியே அமித் ஷா அதட்டிக்கொண்டிருந்தார். (குருடம்பாளையம் ஊராட்சி 9-வது வார்டு ரிசல்ட் தெரிந்தவர்களுக்கு இந்த சீனுக்கு சப்-டைட்டில் தேவைப்படாது!). அடுத்து மோடி அலைபேசியில் லைனில் வந்தபோது ஒற்றை விரல், போனுக்குள்ளிருந்து வெளியே வந்து மிரட்டிய காட்சி அதிரவைத்தது!
அப்போது பார்த்து பாச்சாவும் அங்கு ஆஜராகியிருந்தான்.
“என்ன சார், ஒரே ஓட்டை வெச்சு ஓட்டு ஓட்டுன்னு ஓட்டிட்டாங்களே! டெல்லியில இருந்தும் டெ(ன்ஷன்)லிகால் வந்துக்கிட்டே இருக்கே” என்றதும் அண்ணாமலை, அதிர்ச்சி முகத்தைத் துடைத்து ஆனந்தக் களிப்பைக் காட்டினார்.
“ண்ணா! நீங்க இந்த விஷயத்தை அப்படிப் பார்க்கக்கூடாதுங்க. ‘தமிழ்நாட்டுல நம்ம கட்சி படிப்படியா வளர்ந்துகிட்டு இருக்கு. ஜீரோவுல இருந்து ‘நம்பர் 1’ கட்சியாகிட்டோம். அந்த ஒற்றை ஓட்டைப் போட்ட ஆள் யாருன்னு பார்த்து அவருக்குக் கட்சியில போஸ்ட் குடுக்கலாம்’னு மோடி ஜியும் அமித் ஷா ஜியும் சொல்லியிருக்காங்கண்ணா. ஒற்றை ஓட்டு போட்டவராகட்டும், வாங்கினவராகட்டும்... யார் வந்தாலும் என் பதவியை விட்டுக்கொடுக்கக்கூட நான் தயார்ங்க. மொத்தத்துல பாஜக உருப்பட்டா... ஸாரி பலப்பட்டா எனக்குப் போதும்ங்க...” என்று அடக்கத்துடன் சொன்னார் அண்ணாமலை.
“அதெல்லாம் சரி. வீராவேசமாப் போராடி வீக்கெண்டுலயும் கோயிலைத் திறக்க வெச்சுட்டீங்க. இனி என்ன, வாரம் முழுக்க கோயில் குளம்னு சுத்தி பக்தர்கள்கிட்ட ஆதரவு திரட்ட வேண்டியதுதானே! அடுத்த எலெக்ஷன்ல ஒன்றுக்கும் மேற்பட்ட (!) ஓட்டு வாங்க உதவிகரமா இருக்குமே” என்று அவன் சொன்னதை பாராட்டாக எடுத்துக்கொள்வதா, பங்கம் எனக் கோபம் கொள்வதா என்று அண்ணாமலை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும்போதே அங்கிருந்து அகன்றான் பாச்சா.
அடுத்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கச் சென்றபோது வாசலில் ஒரே கூட்டம். ‘தேர்தல் தோல்வியிலிருந்து தேறுவது எப்படி?’, ‘கவர்மென்ட்டைக் குற்றம்சாட்டும் செய்திகளை வைத்து சமூக வலைதளங்களில் சகட்டுமேனிக்குச் சாடுபவர்களைச் சமாளிக்க என்ன வழி?’ என்பன உள்ளிட்ட புத்தகங்களுடன் பலரும் அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்திருக்கலாம் அல்லது கட்சியின் கதியை எடுத்துரைத்து இடித்துரைக்க வந்திருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டான் பாச்சா.
‘சரி வந்ததும் வந்தோம்! பின்வாசல் வழியாகப் போய் உள்ளே போக வழி கிடைக்குதான்னு பார்ப்போம்’ என பாச்சாவும் பைக்கும் முடிவெடுத்து, வீட்டின் பின்பக்கம் சென்றனர்.
அப்போது அந்தப் பக்கம் எட்டிப்பார்த்த எடப்பாடி, “புறவாசல் வழியா வர்றவங்களை எனக்குப் புடிக்காதுன்னு தெரியாதாப்பா உனக்கு? நேர்மையா நேர்வழியில வா” என்று கடுகடுவெனச் சொல்லி கதவைச் சாத்திக்கொண்டார்.
ஒருவழியாக முன்வாசல் வழியாக உள்ளே நுழைந்த பாச்சா, “கட்சிப் பதவியிலிருந்தே உங்களைக் காலி செய்ய புகழேந்தி புறப்பட்டிருக்கார். இந்த நேரத்துல நீங்க புறவாசல் எதிர்நீச்சல்னு எலெக்ஷன் ரிசல்ட்டை வெச்சு என்னென்னவோ பேசிட்டு இருக்கீங்களே?” என்று அவரிடம் ஆதங்கப்பட்டான்.
“ஜனநாயகப் படுகொலை செய்து தேர்தல்ல திமுக ஜெயிச்சிருக்கலாம். ஆனா, அடுத்த தேர்தல்ல அதிமுக ஜெயிக்கும். அதற்கு இருவரும் சேர்ந்து உழைப்போம்” என்று ஓபிஎஸ்ஸுக்கு வாட்ஸ்-அப் செய்தி அனுப்பிவிட்டு, ப்ளூ டிக் வருமா எனக் காத்துக்கொண்டிருந்த எடப்பாடி எதுவும் பேசாமல் இருந்தார்.
“எம்ஜிஆர் உருவாக்குன கட்சியை எடப்பாடி காலி பண்ணிட்டார்னு எதிர்காலம் பேசிடக்கூடாது இல்லையா? அதுக்கு ஏதாச்சும் ப்ளான்?” என்று கேட்ட கேள்விக்கும் பதில் வராததால், பணியை அத்துடன் முடித்துக்கொண்டான் பாச்சா!