வங்காள மொழியில் ராஜ இசை!

By வெ.சந்திரமோகன்

இசைக்கு மொழி கிடையாது. இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் புகழ்பெற்ற பாடல்கள், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது கேட்டு ரசிக்க தமிழ் ரசிகர்கள் தயங்கியதில்லை. அதேபோல தமிழிலிருந்தும் பல பாடல்கள் இந்தி உள்ளிட்ட வேற்றுமொழிகளில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கின்றன. அந்த வகையில்,‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘நிலா அது வானத்து மேலே’ பாடலை வங்காள மொழியில் அழகான பஜனைப் பாடலாக மாற்றி இளையராஜாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் பாடகி உஷா உதுப்.

மும்பையில் பிறந்துவளர்ந்த தமிழரான உஷா உதுப், ஒருகட்டத்தில் கொல்கத்தாவில் வசிக்கத் தொடங்கியவர். அந்த மண்ணின் கலாச்சாரத்தையும் ஆழமாக உள்வாங்கியவர். 1970-களில் இந்தித் திரையுலகில் நுழைந்த உஷா, ஜாம்பவான்களான ஆர்.டி.பர்மன் தொடங்கி பப்பி லஹரி வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். தமிழில் வெகு சில பாடல்களைத்தான் பாடியிருக்கிறார். இளையராஜா மீது பெரும் மதிப்பு கொண்ட உஷா உதுப், பிற மொழி மேடைகளிலும் அவரைப் பற்றிப் புகழ்பாடத் தயங்குவதில்லை. இளையராஜாவின் இசையில் வெளியான ‘அஞ்சலி’ படத்தின் ‘மேஜிக் ஜர்னி’ பாடலை உஷா உதுப் பல மேடைகளில் பாடியிருக்கிறார். அப்போதெல்லாம் ராஜாவின் மேதைமை குறித்துச் சிலாகிப்பார்.

இளையராஜாவின் பிறந்ததினமான ஜூன் 2-ம் தேதி, ‘சைக்கோ’ படத்தின் ‘நீங்க முடியுமா’ பாடலை வங்காள மொழியில் உஷா உதுப் பாடிய காணொலி இளையராஜாவின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் வெளியானது. பாடலும் அதன் காட்சி வடிவமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. தமிழ்ப் பாடலை எந்த அளவுக்கு உஷா உதுப் உள்வாங்கியிருந்தார் என்பதை அவரது குரலின் ஜாலம் உணர்த்தியது. அதேபோல், அந்தப் படத்தின் இன்னொரு ஹிட் பாடலான ‘உன்னை நினைச்சு நினைச்சு’ பாடலையும் வங்காள மொழியில் பாடி வெளியிட்டார்.

இந்நிலையில், ‘நிலா அது வானத்து மேலே’ பாடலின் வங்காள வடிவமாக ‘பொய்மா பொய்...’ எனும் நவராத்திரி பஜனைப் பாடலை உருவாக்கியிருக்கிறார் உஷா உதுப். அவருடன் இணைந்து பாடியிருக்கும் கராஜ் முகர்ஜி, சிறந்த நடிகரும்கூட. பாடலின் காட்சி வடிவமும் அத்தனை அழகு. குறிப்பாக, நிலவொளியில் மினுங்கும் கடற்பரப்பில் படகில் குயிலி பாடியாடும் ‘நிலா அது’ பாடல், வங்காள மொழியிலும் படகிலிருந்தே தொடங்குகிறது. இளையராஜா பயன்படுத்திய தாளக்கட்டும், இசைத் துணுக்குகளும் வேறொரு வடிவில் ஒலிக்கும்போது மொழிகளைக் கடந்த இசையின் பூரணத்துவத்தை உணர முடிகிறது. வழக்கம்போல இந்தப் பாடலுக்கும், தமிழ் உட்பட பல்வேறு மொழி ரசிகர்களிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்பால் உற்சாகமடைந்திருக்கிறார் உஷா உதுப். தனது இசை வாழ்க்கை சென்னையில் தொடங்கியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கும் அவர், இளையராஜாவின் இசையில் பாடுவது தனக்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பின்னூட்டத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.

‘நாயகன்’ படத்தின் தீம் பாடலான ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலுக்கான தாலாட்டு மெட்டாக இளையராஜா உருவாக்கிய ‘நிலா அது’ பாடல், பின்னர் கதாநாயகன் கமலின் கடத்தல் தொழிலுக்கு நடுவில் பலான பாடலாக உருவமெடுத்தது இசையுலகின் சுவாரசிய வரலாறு. அதே பாடல் இப்போது பக்திமயமாகியிருக்கிறது.

இளையராஜாவின் பாடல்கள் வங்காள மொழியில் மறுஆக்கம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. 1970-களின் இறுதியிலும், 1980-களிலும் வெளியான அவரது பாடல்களை வங்காள மொழி இசைக் கலைஞர்கள் ரசனையுடன் மீளுருவாக்கம் செய்து சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர். அந்தப் பட்டியலில், ‘நினைவோ ஒரு பறவை’, ‘இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு’, ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ என ராஜா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் அற்புதப் பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றைத் தாண்டி இளையராஜாவின் பாடல்களைத் தழுவி வங்கக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாடல்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

இளையராஜாவுக்கும் வங்காள இசைக் கலைஞர்களுக்கும் இடையிலான உறவும் புதிதல்ல. வங்காளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஆர்.டி.பர்மனின் அன்பைப் பெற்றவர் இளையராஜா. சென்னை வரும்போதெல்லாம் ராஜாவைச் சந்தித்து, அவரது இசைப் பணிகளைப் பார்வையிட்டுக் கொண்டாடியவர் ஆர்.டி.பர்மன். இளையராஜாவின் ஆதர்சங்களில் ஆர்.டி.பர்மனின் தந்தையான எஸ்.டி.பர்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இளையராஜாவின் இசை வாரிசான கார்த்திக் ராஜாவும் எஸ்.டி.பர்மனின் தீவிர ரசிகர். திரையிசையில் தனது முன்னோடிகளில் ஒருவராக எஸ்.டி.பர்மனைக் கார்த்திக் ராஜா குறிப்பிட்டதுண்டு.

ஜி.கே.வெங்கடேஷின் இசைக்குழுவில் இளையராஜா கிட்டார் வாசித்த காலத்திலேயே, புகழ்பெற்ற இசைமேதையும் வங்காளியுமான சலீல் சவுத்ரியின் இசைக் குழுவிலும் பணிபுரிந்திருக்கிறார். அப்போதே இளையராஜாவின் திறனைக் கண்டு வியந்தவர் சலீல் சவுத்ரி.

இளையராஜாவுக்கும் சலீல் சவுத்ரிக்கும் இடையில் வியக்கவைக்கும் அளவுக்கு ஒற்றுமைகள் உண்டு. அவர்களின் சொந்த வாழ்க்கை, இசையில் கைக்கொண்ட தாக்கம், பயன்படுத்திய இசை வகைமைகள் எனப் பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ப்ரியா’ படத்தின் ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ பாடலை சலீல் சவுத்ரி முன்பு ஒலிக்கவிட்டு அவரது ஆச்சரியம் கலந்த ஆசியைப் பெற்றவர் இளையராஜா.

தென்னிந்தியாவில், குறிப்பாக மலையாளத் திரையுலகில் பணியாற்றிய சலீல் சவுத்ரி, வங்காள நாட்டுப்புற இசையின் கூறுகளைப் பயன்படுத்தி தென்னிந்திய ரசிகர்களின் பண்பாட்டுக் கூறுகளைச் செழுமைப்படுத்தினார். அதேபோல, தமிழக நாட்டுப்புற இசைக்கூறுகளைத் திரையிசையில் பயன்படுத்திய இளையராஜாவின் பாடல் இப்போது வங்காள மொழிப் பண்பாட்டுக்கும் செழுமை சேர்க்கிறது.

90-களில் இந்தித் திரையுலகின் மிக முக்கியமான பாடகராகத் திகழ்ந்த குமார் சானுவும் வங்காளிதான். இளையராஜா மீது மிகுந்த மதிப்பு கொண்ட குமார் சானு, பிரசாந்த் நடிப்பில் தேவா இசையமைத்த ‘மன்னவா’ படத்தின் பாடல் பதிவுக்காகச் சென்னை வந்திருந்தபோது இளையராஜாவின் இல்லம் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். “உங்கள் இசையைப் போலவே உங்கள் இல்லமும் கலைநயம் கொண்டது” என்று பாராட்டினார்.

ஏதோ ஒரு சூழலுக்காக இசைக்கப்பட்ட இளையராஜாவின் தமிழ்ப் பாடல், இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னொரு கலாச்சாரப் பின்னணிக்குச் செழுமையும் இனிமையும் சேர்க்கிறது என்றால் அந்தக் கலைநயம்தான் எத்தனை மேன்மையானது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE