மேஜிக்போல நடக்கும் எடையிழப்பு ஆரோக்கியமானதல்ல!- சொல்கிறார் பாலிவுட் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர்

By காமதேனு

விளையாட்டியல் மருத்துவம் (Sports Science) மற்றும் ஊட்டச்சத்து நிபுணத்துவத்தில் தேசம் தழுவிய அளவில் முக்கியமானவர் ருஜுதா திவேகர். கரீனா கபூர், அலியா பட் தொடங்கி பல பாலிவுட் பிரபலங்கள் இவரிடம் மருத்துவ ஆலோசனை பெறுபவர்கள். ஊட்டச்சத்து, சாப்பாடு முறை, உடற்பயிற்சி குறித்து இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் மிகப் பிரபலம். ‘காமதேனு’வுக்காக அவர் அளித்த பேட்டி இது.

ஒவ்வொருவரும் தமது உடலை மதிக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். விளக்கமாகச் சொல்ல முடியுமா?

நாம், நம் வாகனங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக்கூட சொந்த உடலுக்குக் கொடுப்பதில்லை. பெட்ரோலால் இயங்கும் காருக்கு டீசல் போடுவோமா? ஆனால், நம் உடம்புக்குள் மட்டும் பொருத்தமான உணவைக் கைவிட்டு சம்பந்தமே இல்லாத ஜங்க் உணவுகளைப் போட்டுக்கொண்டே இருக்கிறோம். வாகனங்கள் பழுதடைந்தால், அதைப் பழுதுபார்க்க எவ்வளவு செலவு செய்யவும் தயங்க மாட்டோம். மேம்பட்ட உதிரி பாகங்களை வாங்க அதிக செலவாகுமே என்று யோசிப்பதும் இல்லை. ஆனால், உடல் ஆரோக்கியம் என்று வரும்போது மட்டும் பணம் மீதான நமது அக்கறை அதிகரித்து விடுகிறது. ஆரோக்கிய உணவுகளும், ஜிம்களுக்குச் செல்வதும் அதிக செலவு வைப்பதாக அலுத்துக்கொள்வோம். உடற்பயிற்சியை இஷ்டத்துக்குத் தொடங்குவோம்; கஷ்டமாக இருந்தால் நிறுத்திவிடுவோம். நாம் வாழ்நாள் முழுவதும் ஒரே வாகனத்தை வைத்திருப்பதில்லை. ஆனால், ஒரே உடலுடன்தான் கடைசிவரை வாழ்ந்தாக வேண்டும். எனவே, அதை கொஞ்சம் மரியாதையுடன் நடத்தலாமே!

ஃபிட்னஸ் பற்றிய உங்கள் வரையறையே மிக வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கினீர்கள். இந்தக் கருத்துகளுக்கான அடிப்படை என்ன?

இவை மிகவும் அடிப்படையான விஷயங்கள்தான். நம் உடல் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. உங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், முதலில் உங்களது எடை அதிகரிக்க வேண்டும். அதாவது எலும்புகள் மற்றும் தசைகளின் எடை அதிகரிக்க வேண்டும். நம்மில் பலர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை 2-4 கிலோ வரை தசைகளின் எடையை இயல்பாகவே இழக்கிறோம். குறிப்பாகப் பெண்கள், 30 வயதுக்குப் பிறகு தொடைகளில் உள்ள தசையை இழப்பார்கள். அதற்குப் பதிலாக மிக வேகமாகத் தசைகளுக்குள் கொழுப்பு அதிகரிக்கும். இதுபோல் தொடர்ச்சியாகத் தசைகளையும் எலும்புகளின் அடர்த்தியையும் இழப்பதை உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். உடற்பயிற்சி என்றால் நன்கு கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சி. வலிமை (எடை) பயிற்சியை உள்ளடக்கிய, அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளைப் பின்பற்றும் உடற்பயிற்சியாக அது இருக்க வேண்டும்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் ஃபிட்னஸ் சார்ந்து நிலவும் தவறான கருத்துகள் என்னென்ன?

இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே உடல் எடையிழப்பு ஒரு மேஜிக்போல் எளிதாக நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது ஆரோக்கியமானதல்ல. கிரீன் டீ, கடுமையான உணவுப் பழக்கங்கள் (கிராஷ் டயட்), சாப்பிடாமலே இருப்பது, உடல் எடைக் குறைப்புக்கு என்று பரிந்துரைக்கப்படும் ஓட்ஸ் கஞ்சி போன்ற குறிப்பிட்ட உணவுகளை மட்டும் சாப்பிடுவது ஆகிய எதுவும் எந்த மாற்றத்தையும் விளைவிக்காது. பல ஆண்டுகள் தொடர்ந்து சரியான உணவுகளைச் சாப்பிடுவது, இரவு சீக்கிரம் தூங்குவது, சுறுசுறுப்பாக இருப்பது, உங்கள் முன்னோர்களின் பழக்கவழக்கங்களைச் சரியாகப் பின்பற்றுவது, உள்ளுரில் விளையும் மற்றும் பருவகாலத்துக்கேற்ற உணவுகளைச் சாப்பிடுவது ஆகியவையே ஒருவருக்கு சிக்கென்ற உடல்வாகையும் சரியான உடல் அமைப்பையும் கொடுக்கும்.

கரீனாவின் ஃபிட்னஸ் பயிற்சியாளரான நீங்கள், “அவர் தன் உடலை மதிப்பவர். பட வாய்ப்புகளுக்காக உடல் எடையைக் குறைப்பவர் இல்லை” என்று அவரைப் பாராட்டியிருக்கிறீர்கள். ஆனால், அவர்தான் இன்று சினிமா நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்கும் சைஸ் ஜீரோ உடல்வாகை பிரபலப்படுத்தியவர். இந்த முரணை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கரீனா கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுகிறார். சரியாகக் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறார். இப்படிப்பட்ட ஒழுக்கமும் கடமை உணர்ச்சியும் தன் உடலை மதிக்கும் ஒருவருக்குத்தான் இருக்கும். ஆனால், அவர் திரைத் துறையில் இருப்பதால் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் இருப்பது உட்பட அவர் எதைச் செய்தாலும் அதற்கு முத்திரை குத்திவிடுகிறார்கள்.

கொஞ்சம் சதைப்பிடிப்பாக இருந்தாலே சஞ்சலப்படும் இளைஞர்கள், உடல் எடையைக் குறைக்கிறேன் என்று சாப்பிடாமலே இருப்பது உள்ளிட்ட உடல் நலக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டப்படுகிறார்கள். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் பிறந்து வளர்ந்த பகுதியின் உணவுகளையும் பருவத்துக்கேற்ற உணவுகளையும் சாப்பிடுவது, சரியாகக் கட்டமைக்கப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, நேரத்துக்குத் தூங்குவது. தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாட்டைக் குறைப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆகியவையே உங்களை ஆரோக்கியமாக உணர வைக்கும். அதன் மூலம் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உரையாடல்களிலிருந்து விலகியிருப்பீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழ்வீர்கள். எங்கள் 12 வார ஃபிட்னஸ் திட்டம் இந்தத் திசை நோக்கிய பயணம்தான். எல்லா உடல் வடிவங்களிலும் அளவுகளிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய சமூகத்துக்கு ஃபிட்னஸ் மீது இருக்கும் ஆர்வத்தை வைத்து உடல் எடைக் குறைப்பு என்பது வியாபாரமயமாகி வருகிறது. உண்மையான ஆரோக்கியத்தைத் தரும் ஃபிட்னஸ் திட்டங்களை எப்படிக் கண்டறிவது?

அது மிக எளிது. ஒரு உணவு மிகத் தீவிரமாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றாலே, அதை நீங்கள் எச்சரிக்கையுடன்தான் அணுக வேண்டும். உடல் எடைக் குறைப்புக்கான ஒரு பொருள் இப்போது பிரபலமாக இருக்கிறது. ஆனால், அந்த உணவு அல்லது பழக்கத்தைப் பற்றி 10 ஆண்டுகளுக்கு முன் யாருமே கேள்விப்பட்டதில்லை என்றால், அதிலிருந்து விலகி இருங்கள். நாம் ஒன்றும் சோதனை எலிகள் அல்ல. மருத்துவர், டயட் நிபுணர் அல்லது உடல்நலனுக்கான ஆப்கள் சொல்வதைவிட உங்கள் பாட்டி சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். மருத்துவர் சொல்வதற்கும் பாட்டி சொல்வதற்கும் இடையில் குழப்பம் இருந்தால், பாட்டி சொல்வதையே பின்பற்றுங்கள். அதேபோல் உங்களது அன்றாடப் பழக்கவழக்கம் நிலையானதாக இருக்க வேண்டும். பரீட்சை, விடுமுறைக் காலங்களில்கூட நீங்கள் அதைத்தான் பின்பற்ற வேண்டும்.

கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ஷாருக் கான், அம்பானி போன்ற பிரபலங்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

அனைவருமே நான் சொன்ன விதிகளை அதிக அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் பின்பற்றினார்கள். அதைச் செய்யுங்கள், இதைச் செய்யாதீர்கள் என்று நான் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்று சோதித்துப் பார்க்கவும் தேவையிருக்கவில்லை. அந்த அளவு அவர்களிடம் சுய உந்துதலும், ஒழுக்கமும் இருந்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்களுடன் பணியாற்றியிருக்கிறீர்களா? அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...

எங்கள் க்ளையன்டுகள் பற்றிய தகவல்களை வெளியில் சொல்வது தொழில் தர்மத்துக்கு எதிரானது. எனவே, இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது.

ஃபிட்னஸ், ஊட்டச்சத்து பற்றிய தங்களது ஆங்கில புத்தகங்கள் மிகப் பெரிய அளவில் விற்றிருக்கின்றன. அவற்றை பிராந்திய மொழிகளில் வெளியிட்டால் இன்னும் அதிகம் பேருக்குப் பயனளிக்குமே?

என் புத்தகங்கள் இந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் சில புத்தகங்கள் வந்திருக்கின்றன. என் புதிய புத்தகம் ‘ப்ரெக்னென்ஸி நோட்ஸ்’ (Pregnancy Notes) தமிழிலும் வெளியாகி யிருக்கிறது. என் புத்தகங்கள் இன்னும் நிறைய பிராந்திய மொழிகளிலும் சர்வதேச மொழிகளிலும் வெளியாக வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

ஊட்டச்சத்து ஆலோசகராக இருப்பதையே உங்களது தொழிலாகத் தேர்ந்தெடுத்தது எப்படி?

மும்பையில் ஒரு பல்கலைக்கழகத்தில் தொழிலக வேதியியல் (இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி) பட்டப்படிப்பில் படித்தேன். படிக்கும்போதே இதில் நம்மால் வேலை பார்க்க முடியாது என்று முடிவு செய்துவிட்டேன். அப்போது சில ஏரோபிக்ஸ் (Aerobics) வகுப்புகளில் ‘வார்ம் அப்’ பயிற்சியாளராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதுதான் ஃபிட்னஸ் தொடர்பான தொழில்தான் என் எதிர்காலம் என்று தீர்மானித்தேன். எஸ்என்டிடி பல்கலைக் கழகத்தில் விளையாட்டு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான முதுநிலைப் பட்டப்படிப்பு இருப்பது தெரியவந்தது. அது எனக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால் அதில் சேர்ந்தேன். என் தொழில் வாழ்க்கையின் முதல்படி அதுதான்.

ஊட்டச்சத்து ஆலோசகர் என்பதைத் தாண்டி உங்கள் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் பணி என் வாழ்க்கையின் நீட்சி... என் வாழ்க்கை என் பணியின் நீட்சி!

- கா.இசக்கிமுத்து

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE