தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணி தொய்வின்றி தொடர வேண்டும்!

By முனைவர் து.ரவிக்குமார் எம்.பி.,

நிதிப் பற்றாக்குறையால் தேங்கி நிற்கும் ‘தமிழ்ப் பேரகராதித் திருத்தப்பணித் திட்ட’த்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்தவேண்டும்.

தமிழறிஞர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் தலைமையில் பல்வேறு அறிஞர்களின் பேருழைப்பால், 1924-க்கும் 1939-க்கும் இடையில் 15 ஆண்டுகால இடைவெளியில் 7 தொகுதிகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தால் தமிழ்ப் பேரகராதி வெளியிடப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம்

அந்த அகராதி வெளிவந்து 80 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அதில் புதிய சொற்களைச் சேர்த்துத் திருத்தி வெளியிடுவதற்கான ‘தமிழ்ப் பேரகராதி திருத்தப்பணி திட்டம்’ சென்னைப் பல்கலைக்கழகத்தால் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன் மூலம் 2 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. 3-வது தொகுதி வெளியிடத் தயார் நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் நிதிப் பற்றாக்குறையால் அந்தத் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்துக்குத் தேவையான நிதி ஆண்டொன்றுக்கு ரு.25 லட்சம் தான் எனக் கூறப்படுகிறது. பேரகராதியினால் தமிழ் மொழிக்குக் கிடைக்கும் வளத்தை ஒப்பு நோக்கினால், இந்தத் தொகை மிகவும் சிறிதே ஆகும்.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் அகராதிகளின் பங்கு இன்றியமையாதது. ஆனால், அகராதி இயலில் புலமை பெற்ற தமிழ் அறிஞர்கள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இங்கு உள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கும்போதே இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தவறினால், எதிர்காலத்தில் இதைச் செயல்படுத்த இயலாமலே போய்விடும். எனவே, தமிழக அரசின் தமிழ்ப் பண்பாட்டுத் துறை இதில் தனிக்கவனம் செலுத்தி, இந்தத் திட்டத்தைத் தொடரச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE