எழுத்தாளர்கள் யாரும் கதை சொல்லிகள் அல்ல!

By கா.சு.வேலாயுதன்

எழுத்தாளர் கோணங்கிக்கு இந்த ஆண்டு ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் கூடிய ‘கி.ரா’ விருது அளிக்கப்பட்டிருக்கிறது. எளிய கிராம மக்களின் மொழியில் நேரடியாகப் பேசும் கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பெயரில், அவருக்கு நேர் எதிர்நிலையில் உள்ள பின்நவீனத்துவ எழுத்தாளருக்கு விருது அளிக்கப்படுவது என்பது தமிழ் இலக்கியத்தில் புதுவகை. இது எப்படி சாத்தியம்? என்பது உட்பட பல விஷயங்கள் குறித்து எழுத்தாளர் கோணங்கியுடன் 'காமதேனு' இணைய இதழுக்காக உரையாடினோம்.

கி.ரா-வுக்கு உங்கள் மீதும், உங்கள் எழுத்துகள் மீதும் அபார பிரியம் என்பது உண்மையா?

உண்மைதான். எனக்கு நாவல் சொல்லிக் கொடுத்ததில் முக்கியமான 3 பேர் வருகிறார்கள். ப.சிங்காரம், நகுலன், கி.ரா. ஜடாயு பற்றி நகுலன், கி.ரா. இருவருமே எழுதியிருக்கிறார்கள். கி.ராவின் ஜடாயு கதைக்குள் எங்கேயுமே ஜடாயு நேரடியாக வருவதில்லை. தலைப்பில் மட்டும்தான் இருக்கும். அக்கதையில் வரும் பெத்தா நாயக்கரை ஜடாயு போன்ற தோற்றத்தில் கோபதாபங்களுடன் வடிவமைத்திருப்பார். 4 கயவர்கள் ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தும் நிலையில் அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றப் புறப்படும் நிலையில், எதிரிகளால் கைகள் வெட்டப்பட்டு சிறகுகள் வெட்டப்பட்ட ஜடாயு போல, ‘அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் போச்சே!’ என்று துடிக்கிற நிலையில் மெல்ல, மெல்ல ஜடாயுவாக மாறுவார். இதே ஜடாயுவைப் பற்றி நகுலன் எழுதியது பற்றி, ‘ஜடாயுவினுடைய மரணத்தில் ஒரு பொய், எப்படியான சிக்கலை ஏற்படுத்திவிட்டது. ஜடாயுவுக்கு உள்ளங்கையில் வைத்துக் காரியம் செய்வானாம் ராமன். அதுமாதிரி கோணங்கி!’ன்னு சாத்தூர் இலக்கியக் கூட்டத்தில் சொன்னார் நாஞ்சில்நாடன். கி.ரா.வின் ‘ஜடாயு’ கதை, ‘புராணத்தை ஒளித்து வைப்பது அல்லது கமுக்கப்படுத்துவதன் மூலமாக ஜடாயு உருவமற்று எழுகிறான்!’ என்று சொல்லாமல் சொல்கிறது. கி.ரா எழுதியதிலேயே டாப் ஒன் கதை. அதை நான் விரிவாக எழுதியும் உள்ளேன்!’

சரி, இதில் ப.சிங்காரம் எங்கே வருகிறார்?

இது ப.சிங்காரத்தின் நூற்றாண்டு. நாவலைப் பற்றி பெரியதொரு திறவுகோலை எனக்கு கொடுத்தவர் ப.சிங்காரம் தாத்தா. ‘அவர் அலுவலகத்திற்குப் போனால் இரவு வரை அவருடன்தான் இருப்பேன். ஓரிரு முறை அவரோடவே தங்கிட்டேன். அவர் சொல்லுவார்: “வாழ்க்கைக்கான அர்த்தம் எவ்வளவு ஆழம் தோண்டினாலும் ஒன்றுமில்லப்பா. நீ கவனமாக உலக வரலாறு, கலைக் களஞ்சியங்கள், ‘என்சைக்கிளோபீடியா’ வெல்லாம் படி. ‘ஹெமிங்வே’, காஃப்கா, சித்தர்கள் படி. திருமந்திரத்தை விட்டுடாதே. திருக்குறளையும் சேர்த்துக்க. எல்லாம் கலந்து கட்டிப் படி. அப்பத்தான் நாவல் வரும்.’’


நீங்கள் இலக்கிய வாசிப்பைத் தொடங்கிய இடம் என்று எதைச் சொல்லலாம்?

நாட்டார் வழக்காற்றியலில் நான் கிழக்குச்சீமையிலிருந்து வர்றேன். குண்டாற்று பள்ளத்தாக்கு நாகரிகம், தேனி மேற்குத்தொடர்ச்சி மலைப்பக்கம் இருக்கு. ரோமானியர்கள் வந்த பாதை. மனிதகுலம் வந்த அந்தப் பாதையில வரும்போது நான் 3-ம் வகுப்புப் படிக்கிறேன். நா.முத்துசாமியின் ‘அன்று பூட்டிய வண்டி’ சிறுகதை அஃகு என்கிற இதழில் வருகிறது. எங்க சித்தப்பா பிச்சையா கம்யூனிஸ்ட். அவர் இலக்கிய வாசிப்பில் சிறந்தவர். அவரது அலமாரியில் இருந்த ‘அஃகு’ புத்தகத்தை அப்போது படிக்க ஆரம்பித்தது. அதில் நடந்த அதிசயம் ‘அஃகு’ என்னை அதீத எழுத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது.

கோணங்கி

இதில் கி.ரா எங்கே இணைகிறார்..?

சொல்கிறேன். கம்பனுடைய அதீதமும், நா. முத்துசாமியின் அதீதமும், ஜூலியன்பகத்சார் என்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளருடைய அதீதமும் என்னை ஈர்த்து இந்தப் பாதைக்கு தள்ளியது. அப்ப பூமணியும், தேவதச்சனும் “உன் கதைகளில் பரத்தையா டெரகோட்டாவில் இருக்கிற காளி தெய்வங்கள், நடுக்காட்டு மண்சிலைகள் மாதிரி பெரிய பெரிய கண்களோட, பெரிய பெரிய காதுகளோட இருக்கே. இது என்னப்பா?”ன்னு கேட்டாங்க. அன்று கேட்டது, இன்றைக்கு அதுதான் ஆட்டம். நான் டெரகோட்டா மாதிரி மண் சிலைகளை செஞ்ச குயபட்டணத்தைச் சேர்ந்தவன். குண்டாறுங்கிறது பேருண்மைகளால் ஆன குயப்பட்டணம். ஆதிச்சநல்லூர் குயப்பட்டணம். பானைகள் வந்துட்டே இருக்கு. தமிழ் பிராமி எழுத்துக்கள் வந்துட்டேயிருக்கு. கீழடி நெசவுப்பட்டணம். அங்கேயும் பானைகள் வந்துட்டே இருக்கு. குண்டாற்றுப் பள்ளத்தாக்கு நாகரிகத்தில், அந்தக் குண்டாற்றுக்குள் ஒளிந்து வரும் கிருதுமால் நதி எக்கியதால் வந்த எக்கல், அடித்தது ஒரு நகரம். அந்த கோரந்தைப் பொட்டலைத் தோண்டத் தோண்ட நம் இடம் எதுன்னு தேடித் தேடி போயிட்டிருக்கேன். இதுலதான் வருது கி.ரா.வின் கோபல்லபுர கிராமம். அந்த நாவலுக்கும் பைபிளுக்கும் தொடர்பு இருக்கு.

எப்படி..?


மோசே இஸ்ரவேல் சனங்களை, கொடுங்கோல் ராஜாக்களிடமிருந்து விடுவித்துச் செல்ல பெரும்படை வருகிறது. மக்களை கடல் விலகி வழிவிட்டுக் காப்பாற்றும். பின்னாலேயே படை நெருங்க, கடல் மூட, படைகள் திரும்பிச் சென்று விடும். கி.ரா.வின் கோபல்லபுர கிராமத்தில் மக்களை உஸ்லாம் படைகள் துரத்தி வரும். ஆறு விலகும். அரச மரம் சாய்ந்து, மக்கள் அதில் ஏறுவார்கள். பிறகு மரம் கிளைவாரியாக காயும். மக்கள் இறங்கிடுவாங்க. படைக்கு தப்பிச்சு நம்ம கரிசல் பூமியை நோக்கி வருவார்கள். அங்கே தொட்டாரம்மன் என்று ஒரு சிலை. உஸ்லாம் படைகள் தொட விடாத கன்னியா அம்மன் உருவகப்படுத்தப்படும். இது கி.ரா. நாவலில் பதிவாகிற மாதிரி, கு.அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதையிலும் பதிவாகிறது.

என் முதல் நாவலான ‘பாலி’யில் இந்த பைபிள், கோபல்லபுரம் உருவகம் மாதிரி, வேலம்மாள் என்கிற 80 வயசு பாட்டி சொல்கிறாள். “ஐயா, நெல்லை எண்ணிடலாம். புல்லை எண்ண முடியாதய்யா”ன்னு. ஆக, கதை சொல்லல் என்பது ஞான மரபு. விவசாயிகளோட ஞான மரபு. ஆயிரம் புல்வகைகளைப் பார்த்த, அனுபவித்த 70 ஆண்டுகள் காட்டுக்குள் களையெடுக்க, கதிர் அறுக்க, நாற்று நடவு செய்யப் போன படிக்காத ஒரு தாயிடமிருந்து உருவானதொரு ஞானமரபுதான் கி.ராஜநாராயணனுடைய கதை சொல்லல் என்கிற ஞானமரபு.

அது பஞ்சதந்திரக் கதைகள், போதிசத்துவர் கதைகள், புத்த ஜாதக கதைகள், எச்ச ஜாதகக் கதைகள் போன்றெல்லாம் வெளிப்படுகிறது. இதை முன்வைத்துப் பார்க்கும்போது கி.ராஜநாராயணன் ஒரு கதை சொல்லியே அல்ல. சொல்லிகள் என்பவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக துகள் துகளாக, காலம் காலமாக சொல்லி வந்ததனுடைய துகள்கள். சொல்லிகள் என்பவர்கள் சொல்லின் மூலம் தொண்டைக்குழிக்குள் வந்து மறைந்து விடுவார்கள். கி.ராஜநாராயணனோ, கு.அழகிரிசாமியோ, இந்த கோணங்கியோ கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நவீன எழுத்தாளர்கள். ஆயிரம் வகையிலான தானியங்களுடைய குரல்வளைதான் கி.ராஜநாராயணனிடம் வருவது. என்னிடம் வருவதும் அதுதான். அவர் அதை திரட்டுப்படுத்தினார். அகராதியைக் கொண்டு வந்தார். கதைகளைக் கொண்டு வந்தார். நான் அவற்றை நவீனத்தை நோக்கி நகர்த்துகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE