பல் மருத்துவமனைக்குள் படிப்பகம்!

By என்.சுவாமிநாதன்

நாகர்கோவில், புன்னகை நகர் சந்திப்பில் இருக்கும் 'ஜாப்ரோ' பல் மருத்துவமனைக்கு நோயாளிகள் மட்டுமல்லாமல், புத்தகக் காதலர்களும் படையெடுக்கிறார்கள். காரணம், இந்த மருத்துவமனைக்குள் மிகத் தரமான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இங்கே அணிவகுக்கின்றன.

இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பெரில், அடிப்படையில் புத்தகங்களை சுவாசித்து வளர்ந்தவர். இவரது தாய் லாரன்ஸ் மேரி நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இதனாலேயே வாசிப்போடும், படைப்புகளோடும் மிகவும் நெருக்கமான வாழ்வைத் தகவமைத்துக்கொண்ட பெரில், தன் மருத்துவமனையின் நுழைவுப் பகுதியிலேயே இடம் ஒதுக்கி விசாலமான நூலகத்தை அமைத்துள்ளார்.

பெரில்

‘காமதேனு’ மின்னிதழுக்காக ’ஜாப்ரோ’ மருத்துவமனையில் பெரிலைச் சந்தித்தேன். “என் அம்மா கல்லூரி ஒன்றில் நூலகராகப் பணிபுரிந்தவர். எனவே, என் வீட்டில் எப்போதுமே நிறையப் புத்தகங்கள் இருக்கும். ஒருகட்டத்தில் அம்மா புத்தகங்கள் எழுதவும் தொடங்கினார். இலக்கியக் கூட்டங்களுக்கும் செல்வார். அங்கிருந்தும் நிறைய புத்தகங்கள் வாங்கிவருவார். இப்படி வீட்டின் மூலைமுடுக்கெல்லாம் புத்தகங்கள் நிறைந்திருக்கும். எனவே, வாசிப்புப் பழக்கம் என்னை இளம் வயதிலேயே இயல்பாகத் தொற்றிக்கொண்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனையைக் கட்டினோம். கட்டிடப் பணிகளைத் தொடங்கும்போதே நூலகத்திற்கு என தனியாக இடம் ஒதுக்க வேண்டும் என தீர்மானித்து அதற்கான இடத்தையும் ஒதுக்கிவிட்டோம்.

பெரில்

இந்த நூலகத்தில் தமிழ் நாவல்கள், இலக்கியம், ஆங்கிலப் புத்தகங்கள், சிறார் புத்தகங்கள், அறிவியல், மருத்துவம், சட்டம், ஆன்மிகம் என பல்துறை சார்ந்த புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பல் மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போதே, பிற நோயாளிகள் சற்று நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். பொதுவாக, மருத்துவமனையின் காத்திருப்பு அறையில் ஒரு டிவியை வைத்தாலே போதுமானது எனப் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், நோயாளிகளுக்கு டிவி பார்ப்பதற்கும், செல்போனைப் பார்ப்பதற்கும் வீட்டிலேயே வாய்ப்பு கிடைக்கிறது. நாம் படித்த மருத்துவக் கல்வியால் நோயாளியின் உடலுக்குச் சிறந்த சிகிச்சை கொடுத்தாலும், மனதுக்குப் புத்தகங்கள்தான் மருந்தாக அமையும் என்று நினைத்தேன். அதனால்தான் இந்த முயற்சி’’ என்று சொன்னார் பெரில்.

நூலகத்தின் ஒரு பகுதி

இவரது மருத்துவமனையில் அமைந்திருக்கும் நூலகத்தை நோயாளிகள் மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்களும் பயன்படுத்துகின்றனர். புத்தகங்களை இங்கு வாசிப்பது போக, அவற்றை வீட்டுக்கே எடுத்துப்போய் வாசிக்கவும் அனுமதிக்கப் படுகிறார்கள். இதற்கென்று, இந்த நூலகத்தில் பதிவேடும் இருக்கிறது.

இதுகுறித்தும் பேசத் தொடங்கினார் பெரில். “என்னதான் பள்ளிக்கூட படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், அதைத் தாண்டிய பரந்த வாசிப்புதான் நம் மனதை விசாலமாக்கும். நாம் வாசிக்கும் நல்ல புத்தகங்கள் நமக்குள் தன்னம்பிக்கையைத் தூண்டிவிடக்கூடியவை. அதனால்தான் வாசிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மருத்துவமனையில் இடம் ஒதுக்கினோம். இங்கு சிகிச்சைக்காக வருபவர்களில் பெரும்பாலானோர் தாங்கமுடியாத பல் வலியோடுதான் வருவார்கள். அந்த நேரத்தில், அவர்களின் மன ஓட்டத்தை மடைமாற்றம் செய்யும் பணியை இந்த நூலகம் செய்யும். இதுபோக, நோயாளியின் உடன் வந்தோருக்கும் நூலகத்தில் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அது அவர்களது மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள உதவும்” என்றார் பெரில்.

பெரிலின் இந்த வாசிப்பு உபயத்துக்கு இவரது கணவர் மார்க் ரிஜோ தன்னாலான உதவிகளையும் செய்து ஊக்குவிப்பது கூடுதல் சிறப்பு. நூலகத்தைத் தன் தாய் லாரன்ஸ் மேரியின் பொறுப்பிலேயே விட்டிருக்கிறார் பெரில்.

இதுகுறித்துப் பேசத் தொடங்கும்போதே லாரன்ஸ் மேரியின் முகம் பிரகாசமாகிறது. “மருத்துவர் அறை, மருந்தகம், பணிசெய்யும் இடம் ஆகியவற்றுக்கு மத்தியில் உள்ளே நுழைந்ததுமே நூலகமும் அமைந்தால் எப்படி இருக்கும் என ஒருநாள் என் மகள் என்னிடம் கேட்டார். அந்த அளவுக்கு பெரிலுக்கு வாசிப்பின் மீது நேசம் இருக்கிறது. அதுதான் இந்த நூலகம் அமைவதற்கு முக்கியக் காரணியாக அமைந்தது” என்று பெருமிதத்துடன் சொன்னவர், புத்தகங்களுடனான தனது பந்தத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.

“குமரி மாவட்டத்தில் நூலக அறிவியலில் முதன்முதலில் முனைவர் பட்டம் பெற்றவள் நான்தான். நூலக அறிவியல் படித்த பலருக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் இருந்தேன். எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே நூலகத்தின் மீது ப்ரியம் அதிகம்.

லாரன்ஸ் மேரி

என் கணவர் இறந்து 25 ஆண்டுகள் ஆகின்றன. அவர் தூத்துக்குடியில் கருவூலத்தில் பணிசெய்தபோது, உடன் பணிசெய்தவர்களோடு சேர்ந்து நடமாடும் நூலகம் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது, அவர்களுக்குள் பணம் பிரித்து அனைத்து பத்திரிகைகள், வார, மாத இதழ்கள் வாங்குவார்கள். அது சுழற்சிமுறையில் அனைவரின் வீடுகளுக்கும் செல்லும். அப்படித்தான் எங்கள் வீட்டிற்கும் அனைத்துப் புத்தகங்களும் வந்துவிடும். பொதுவாகவே ‘அம்புலிமாமா’, ‘முத்து’ காமிக்ஸ் புத்தகங்களைக் குழந்தைகள் விரும்பி வாசிப்பார்கள். குழந்தைப் பருவத்திலேயே பெரிலுக்கும் அப்படித்தான் வாசிப்புப் பழக்கம் பரிச்சயமானது. அந்த வாசிப்பு, இன்று மருத்துவமனைக்குள் நூலகத்தைக் கொண்டு வந்துவிட்டது“ என லாரன்ஸ் மேரி நெகிழ்ச்சியோடு சொல்ல, அதைக் கேட்ட பெரில், “அப்பா இறந்ததும், அம்மா என்னையும் கூட்டிட்டு பாட்டி ராஜம்மாள் வீட்டுக்குப் போயிட்டாங்க. அங்கு புத்தகங்கள் வைப்பதற்கு இடவசதி இல்லாத காரணத்தாலேயே, தனி வீடு கட்டிப்போனாங்க அம்மா. அப்பவே நூலகத்துக்கு வீட்டில் இடம் ஒதுக்குனாங்க. நூல்களுக்கு அம்மா தன் வீட்டில் இடம் கொடுத்தாங்க. நான் மருத்துவமனையில் இடம் கொடுத்திருக்கேன்’’ என்று சொல்லிப் புன்னகைத்தார்.

பல்துறைப் புத்தகங்களின் அணிவகுப்பு...

நாம் அங்கிருந்த போது பெரிலின் நூலகத்துக்கு வந்த இளம்பெண்கள் சிலர், தங்கள் மனதுக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்து வாசிக்கத் தொடங்குகின்றனர். மருத்துவமனையின் பக்கத்திலேயே புன்னை நகர் பேருந்து நிறுத்தமும் இருப்பதால், இந்த நூலகத்தைப் பயன்படுத்துவோரும் அதிக அளவில் உள்ளனர்.

அதை நெகிழ்ச்சியோடு குறிப்பிடும் பெரில், “அம்மா தனது ஓய்வூதியத் தொகையில் ஒரு பகுதியை புத்தகங்கள் வாங்க ஒதுக்கிவிடுவார். அவர் பாணியிலேயே நானும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு தொகைக்குப் புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இதனால் இங்கு புதிய, புதிய புத்தகங்கள் எப்போதும் இருக்கும். வாசிப்பு மட்டும்தான் நல்ல தலைமுறையை உருவாக்கும் என்பதை ஆழமாக நம்புபவள் நான். அந்த வகையில் என்னால் ஆன சமூகப் பங்களிப்பாகவே இந்த நூலகத்தை அமைத்துள்ளேன்” எனச் சொல்ல, மகளைப் பெருமிதம் ததும்பப் பார்க்கிறார் லாரன்ஸ் மேரி.

“நீங்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே விஷயம், நூலகம் அமைந்திருக்கும் இடம்தான்” என்பார் ஐன்ஸ்டைன். அந்தக் கூற்றின் மகத்துவத்தை உணர்ந்த லாரன்ஸ் மேரியையும், பெரிலையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE