இசை வலம்: சாமானிய உலகுடன் சங்கமிக்கும் மிருதங்கம்!

By ரவிகுமார் சிவி

கர்னாடக இசை உலகில் ராஜ வாத்தியம் என்று புகழப்படுவது மிருதங்கம். இசைக் கச்சேரிகளில் பாடகரை அடியொற்றி, அவரின் குரலின் நிழலாக வயலின் பயணிக்கும். குறிப்பாக, ஆலாபனைகளில் பாடகரின் குரலை மிகவும் நெருக்கமாகப் பிரதியெடுத்ததுபோல் வயலின் தொடரும். பாடல் தொடங்கியவுடன் பாடகருக்குப் பக்கபலமாக மிருதங்கத்தின் வாசிப்பு வழிநடத்தும். பிரதான தாள பக்கவாத்தியமான மிருதங்கத்தை அனுசரித்தே, உப பக்க வாத்தியங்களான கடம், முகர்சிங் போன்றவை வாசிக்கப்படும்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட இசைக் கருவியான மிருதங்கத்தை, இணையம் வழியே இளம் தலைமுறையினருக்குக் கற்றுத்தருகிறார் இளம் மிருதங்க கலைஞரான பிரவீன் ஸ்பார்ஷ்.

மிருதங்கம் வாசிப்பதில் இருக்கும் நுணுக்கங்கள், அடிப்படை தாள ஞானம், மிருதங்கம் வாசிக்கும் முறையை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் 3 பாகங்களாக அருமையாக விளக்கியிருக்கிறார் இந்த இளைஞர். மிருதங்கத்தின் எந்தப் பக்கத்தில் கை விரல்களை எப்படிப் பிரயோகித்து ‘தா, தி, தொம், நம்' என்னும் சொற்கட்டுகளை வாசிப்பது என்பதை பொறுமையாக காட்சிபூர்வமாகப் பிரவீன் விவரிக்கும் பாங்கு அருமை.

பிரவீன் ஸ்பார்ஷ்

மிருதங்கத்தை முறையாகக் கற்றுக்கொள்பவர்களுக்கு உதவுவதோடு பிரவீனின் பங்கு நிறையவில்லை. சாஸ்திரபூர்வமான இசைக்குப் பக்கவாத்தியமான மிருதங்கத்தை, நந்தி தேவர் வாசித்த வாத்தியம் என்று புனிதமாகப் போற்றி ஆராதிப்பவர்களுக்கு இடையில், சந்தடிகள் நிறைந்த கடைவீதி, மீனவர்களின் தாய்வீடான கடற்கரைப் பகுதி என எல்லா இடங்களிலும் அந்தந்த இடங்களில் ஒலிக்கும் சத்தங்களின் ஊடாகவே மிருதங்கத்தை வாசிக்கிறார். இப்படி எடுக்கப்படும் காணொலிகளை ‘UNRESERVED’ என்னும் தலைப்பின்கீழ் பதிவிட்டிருக்கிறார்.

வாகனங்களின் ஹார்ன் ஒலி, சந்தையில் கதம்பமாகத் தெறிக்கும் ஒலிகள் இவற்றின் மேலாக பிரவீனின் மிருதங்கம், கொன்னக்கோல், கஞ்சிரா, ஜோனா லெவைனின் டிராம்போன், நேப்பியர் நவீனின் பாஸ் கிதார் வாத்தியங்களின் சங்கமம், சராசரி மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பாடுகளோடு சேர்ந்தே ஒலிக்கிறது. ஆட்டோவின் தடதடக்கும் ஓசையைத் தாளமாக மாற்றித் தொடங்கும் இந்தக் காணொலி, நேர்த்தியான படமாக்கலில் மேலும் மிளிர்கிறது!

மனங்களைச் சங்கமிக்க வைக்கும் மிருதங்கம்: https://www.youtube.com/watch?v=VK5bqQ6I5DU

லஷ்மி ரத்தீஷ் - ராதிகா

ராகதாள சொரூபம்!

‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் பொதுவான இறைவா போற்றி...’ எனத் துதிக்கப்படும் இறை சொரூபம் சிவன். சிவ பெருமையை, ஆடல்வல்லானின் சிறப்பை எத்தனையோ அருளாளர்கள் பாடியிருக்கின்றனர். “சிவபெருமான் அன்பிற்கு அடிபணிவான். செருக்குற்றவரைச் சீறி அழிப்பான். அடியவரைக் காக்கும் பொருட்டு எதனையும் செய்யும் அருள் மிக்கவன். அடியும், முடியும் காண மாட்டாது அரற்றிய திருமாலும் பிரமனும் சிவன் பெருமை உணர்ந்து அவனைப் போற்றித் துதித்து மகிழ்ந்தனர். காலம் தவறாது உயிர்களைக் கொல்லும் எமன், மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க முயன்றபோது, தன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயனுக்காக எமனையே உதைத்த கால்களை உடையவன்” என்று காரைக்கால் அம்மையார் எழுதிய பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.

சிவனை நாதவடிவாக, தாள வடிவாக நம்மை தரிசிக்கவைக்கும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கிருதியை அளித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. சிவபெருமானின் சிறப்பை ஏகாந்த ரூபத்தின் பெருமையை விளக்கும் இந்தப் பாடலை, இந்தத் தலைமுறையினர் விரும்பும் வகையில் பாடியிருக்கின்றனர் சகோதரிகள் லஷ்மி ரத்தீஷ் - ராதிகா வேணுகோபால்.

தம்புராவின் ஸ்ருதியில் நாபிக் கமலத்தில் காத்திரமான ஸ்தாயியில் ‘போ... சம்போ’ எனத் தொடங்கும் பாடல், ஆரோகண கதியில் வளர்ந்து உச்சத்தைத் தொடும். அதன்பின், மீண்டும் மந்திர ஸ்தாயியில் முடியும் தோற்ற அமைப்புடன் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் சுவாமி தயானந்த சரஸ்வதி. கர்னாடக இசை மேடையாக இருந்தாலும் சரி, நடன அரங்கமாக இருந்தாலும் சரி, இந்தப் பாடல் இடம்பெறாத மேடையே இருக்காது. ரேவதி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை சகோதரிகள் லஷ்மியும் ராதிகாவும் பதச் சேதம் ஏற்படாமல் பாடியிருப்பதுடன், பேஸ் கிதார், டிரம்ஸ், ரிதம்பேட் என மேற்கத்திய வாத்தியங்களை உறுத்தல் இல்லாமல் மெல்லிசையுடன் வழங்கியிருக்கின்றனர். பாடலுக்கேற்ற மேற்கத்திய இசை கற்பனைகளை அசுவத்தாமன் சிவன் மிகவும் நேர்த்தியோடு செய்திருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=AmEhqGLbmGs

பென்னி தயாள்

உயிரை உருக்கி ‘உயிரே...’ பாடும் பென்னி

‘இரு பூக்கள் திரை மேலே

ஒரு புயலோ மலை மேலே...’ என்று விரியும் `உயிரே' படப் பாடலையும், அதன் இந்திப் பதிப்பான `தில்சே' பாடலையும் தன்னுடைய பாணியில் கவர் வெர்ஷனாகப் பாடி தன்னுடைய யூடியூப் பதிப்பில் வெளியிட்டிருக்கிறார் நவீனமான குரலுக்குச் சொந்தக்காரரான பென்னி தயாள். அந்தப் பாடல்தான் பள்ளிக் காலத்திலேயே தன்னை இசை மீதான ஆர்வத்தை உருவாக்கியதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியான ஒரு பாடலைப் பாட வேண்டும் என்று அப்போது நினைத்ததாகக் குறிப்பிட்டிருக்கும் பென்னி, அதே பாடலை இப்போது பாடி வெளியிட்டிருக்கிறார்.

ருக்மிணி விஜயகுமார்

‘உக்கலேலே' என்னும் கைக்கு அடக்கமான நரம்பு வாத்தியத்தை மீட்டியபடியும் ‘உடு' என்னும் ஆப்பிரிக்க தாள வாத்தியத்தை வாசித்தபடியும் அவர் பாடியிருப்பது, கண்களுக்கும் காதுகளுக்கும் மட்டுமல்ல மனதுக்கும் நெருக்கமாக இருக்கிறது. கூடவே அர்த்தபுஷ்டியோடு பாடலுக்கு ஏற்ற நடனத்தையும் வழங்கியிருக்கிறார் ருக்மிணி விஜயகுமார். தன்னுடைய மாடி வீட்டுத் தோட்டத்தின் நடுவே ருக்மிணி பிடித்திருக்கும் அபிநயங்கள் அபாரம். ‘என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே... எனும் வார்த்தைகளுக்கு அவர் பிடித்திருக்கும் அபிநயம், பாரம்பரியமான பதம், ஜாவளிகளுக்குப் பிடிக்கும் அபிநயத்துக்குச் சற்றும் குறைவில்லாமல் இருந்தது. கால், கைகளின் வேகமான அசைவும் மின்னலாய் பாவனைகள் முகத்தில் தோன்றி மறையும் லாகவமுமாய் நடனமாடும் இந்தப் பெண்ணை, இதற்கு முன்பு எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறதா? பாரதிராஜாவின் த்ரில்லரான ‘பொம்மலாட்டம்' திரைப்படத்தில் நடித்த ருக்மிணி இவர்தான்!

https://www.youtube.com/watch?v=s87VOQx8t78

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE