நிழற்சாலை

By காமதேனு

பிரதியன்பு

கிளைகளை ஆட்டி

பாரமாக இருக்கும்

மழைத்துளிகளை

கீழிறக்கிவிடுகிறேன்

பதிலுக்கு

சாமரம் வீசுகிறது

மரம்.

- ச.ஜெய்

கதவுகளுக்குள் அடைபட்ட காலம்

புது வீட்டுக்குக் குடி புகுந்ததும்

அப்பா படத்தை

ஆணியடித்து மாட்டியாயிற்று...

அவளுக்குப் பிடிக்குமென

புத்தக அலமாரியை

அக்னி மூலைப்பக்கமாய்

இடமாற்றியாயிற்று...

பயணத்தின் பாதியில்

உடைந்த

புத்தர் சிலையை

எறிய மனமில்லாமல்

பரண்மேல் போட்டாயிற்று...

எல்லாம் முடிந்தபின்

எஞ்சியிருக்கும்

பழைய வீட்டின் ஞாபகங்களைத்தான்

எங்கு வைப்பதென்றே

தெரியவில்லை.

- இனியவன் காளிதாஸ்

வேண்டுதல்

சாலையோரம் அமைந்திருக்கும்

அந்தக் கோயிலின்

சந்நிதியை நோக்கி

காணிக்கைக் காசு

வீசி எறிவதற்கு போதுமானதாகவே

இருக்கிறது

பேருந்தின்

ஜன்னல் அளவு.

வேண்டுதலின் முடிவில்

கன்னத்தில் போட்டபடியே

இறைவனிடத்தில் நான் கேட்ட

வரங்களனைத்தும் வந்து

சேர்வதற்குத்தான்

இடம் தருவதில்லை

அந்தச் சிறிய சாளரம்.

-வெ.தமிழ்க்கனல்

சாஸ்வதம்

நிரம்பி வழிகிறது

மளிகைக் கடை பாக்கியால்

சிகரெட் அட்டை

பாயைச் சுருட்டும் பாவனையில்தான்

பிதுக்கி எடுக்க வேண்டியிருக்கிறது

பற்பசையை

கடிகாரம் குறைத்துக் காட்டும் நேரத்தை

சமன்செய்ய

துரிதப்படுத்த வேண்டியிருக்கிறது

இரு கால்களை...

குழல் விளக்கின்

தவணை முறை வெளிச்சத்தில்தான்

நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது

அன்றாடப் பணிகளை...

இருப்பினும்

எல்லா நாட்களிலும்

மூன்று வேளையும்

நேரம் தவறாமல்

பசித்துவிடுகிறது வயிறு.

- மகிவனி

சூளைக்காரர் வாழ்வு


நெருப்பில் சூடாகி வெந்துபோயின

செங்கல்கள்

எங்கள் உடல்களும் கூடவே

வெந்து கறுத்துத்தான் போயின...

செங்கல் வில்லாக

விலை ஏறிப்போவதும்

எங்கள் கூலி கடுகாகக் குறைந்துபோவதும்

நீங்கள் அறியாததல்ல...

பல மாடி வீடுகள் கட்ட

செங்கல் சுட்டுத் தந்த

எங்களையும் மழை புரட்டிக்கொண்டே இருக்கிறது

இழுத்துக் கட்டிக்கொண்டே இருக்கிறோம்

ஓட்டைக் கூரையை

-கலை

குளிர்ச்சியின் இதம்

ஓய்ந்திருக்கிறது மழை

குளிர்ச்சி பரவிய வெளியை

கிளைகளால்

தயக்கத்துடன் ஸ்பரிசிக்கும் மரம்

ஞாபகப்படுத்துகிறது

புத்தம்புது நாய்க்குட்டியின்

நெற்றியைத்

தொட்டுத் தொட்டு

சிலிர்க்கும் ஒரு குழந்தையை!

- மகேஷ் சிபி

முடிவற்ற தேடல்


தாகத்தில் தவித்த

வேரின் வாய்கள்

நிலத்தடி நீரை

குடிக்க முயன்று

களைத்துவிடுகின்றன


கட்டிடங்களின்

காலடி எங்கும்

ஆழ்துளைக் கிணறுகள்.

- சங்கீதா சுரேஷ்

பக்தர்களைக் கண்டடையும் கடவுள்

மண்டகப்படியை முன்னிட்டு பலரும்

குடும்பங்களாக நிறைந்திருந்தனர் கோயிலில்

வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குழந்தைகள்

கோயில் வளாகம் தந்த பிரம்மாண்டத்தில்

குதூகலமாய் விளையாடத் தொடங்குகின்றன

அலங்காரம் முடிவுற்று திரைச்சீலை விலகி

இருவரிசைகளில் எதிரே நின்றவர்கள்

கன்னத்தில் போட்டுக்கொள்ள

பூஜையைத் தொடங்குகிறார் அர்ச்சகர்

தீபாராதனை நெருங்கும் வேளையில்

குழந்தைகளைக் கூவியழைக்கிறார்கள்

சாமி கும்பிட

எதையும் காதில் வாங்காத

அக்குழந்தைகளோடு

ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்

கடவுள்.

- நேசன் மகதி

ரசனை

பார்வையற்ற

ரயில் பிச்சைக்காரரின்

பாடல்களுக்கு

தற்காலிக ரசிகர்களாகும்

பயணிகள்

ஜன்னலுக்கு

வெளியே பார்வையைப்

பதிக்கின்றனர்

பிச்சைப்பாத்திரம்

நீளும் கணங்களில்...

- ப்ரணா

தொடர்பு எல்லைக்கு வெளியே

அடிக்கடி இல்லாவிட்டாலும்

எப்போதாவது எதிர்ப்படுகிறான்

பள்ளிக்காலத்துக் குறும்புகள்

மார்கழிக் கோலம் ரசிக்க

பால்ய வீதிகளில்

குட்டிச் சைக்கிளில் சுற்றித்திரிந்ததென

ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தை முடித்து

அம்மாவின் உடல்நிலை

தங்கையின் குழந்தை என

வழக்கமான விசாரிப்புகளுடன்

ஒவ்வொரு முறையும்

கைகுலுக்கி விடைபெறுகையில்

மறக்காமல் அலைபேசி எண்

குறித்துக்கொள்ளும்போது

விளங்கிவிடுகிறது

அவன் நினைவில்

நானில்லையென்பது.

-காசாவயல் கண்ணன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE