லென்ஸ் சிமிட்டும் நேரம் - 3

By வனிலா பாலாஜி

சோம்நாத்பூர் பற்றிய சில குறிப்புகளோடும் நான் அங்கு ரசித்து எடுத்த அழகான சிற்பங்களின் புகைப்படங்களோடும் இன்று உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

வார இறுதி நாட்களில் பெங்களூருவில் இருந்து எளிதாகச் சென்று வரக்கூடிய இடங்களை தேடும்போது, சோம்நாத்பூர் பற்றியும் நிறையக் கேள்விப்பட்டோம். மேலும், என் மூத்த மகனுக்கு வரலாற்றில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பதால், இந்த கோயிலை ரசிப்பான் என நம்பி அவனையும் அழைத்துக் கொண்டு, ஓர் சனிக்கிழமை காலையில் சோம்நாத்பூருக்குப் புறப்பட்டோம்.

கோயிலின் எழில் தோற்றம்

மைசூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சோம்நாத்பூர். பெங்களூருவிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம். இவ்வூர், செழிப்புமிக்க காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஹொய்சாளர்களின் திறமை வாய்ந்த கட்டிடக் கலைக்குச் சான்றாய் நிற்கும் சில கோயில்களில் இதுவும் ஒன்று.

இக்கோயில், ஹொய்சாள மன்னர் ‘நரசிம்ஹா III’ என்பவரின் படைத்தளபதி தண்டநாயக என்பவரால் கி.பி.1268-ல் கட்டப்பட்டுள்ளது. ‘schist’ எனப்படும் ஒருவித தகட்டுப்பாறைகளால் கட்டப்பட்ட இக்கோயில், அந்தத் தகட்டுப் பாறைகளின் தன்மையால் மிகவும் அழகான சிற்பங்களுடன், பார்ப்பவர்கள் அனைவரையும் எளிதாகக் கவர்ந்து விடுகிறது. அணிகலன்களை செதுக்குவதில் புகழ்பெற்ற ருவாரி மலிதாம்பா எனும் சிற்பியின் கைவண்ணத்தில் உருவானதே இக்கோயில். கோயில் முழுவதும் சிற்பியின் கைபடாத இடமே இல்லையெனச் சொல்லலாம். அந்த அளவுக்கு, திரும்பிய பக்கமெல்லாம் சிற்பங்கள். இங்குள்ள சில சிற்பங்களுக்கு அடியில், ‘மலிதாம்பா’ என்ற அந்த சிற்பியின் கையெழுத்தையும் காணலாம்.

கோயிலின் உட்புறத்தில் 3 கர்ப்பகிரஹங்கள். அதில் முறையே கேசவர், ஜனார்தனர் மற்றும் வேணுகோபாலன் போன்ற மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் காணப்படுகின்றன. இங்கு முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர்கள், அந்நியர்களின் படையெடுப்பால் சூரையாடப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக வைக்கப்பட்ட சிலைகளே இப்போது அங்கே காணப்படுகின்றன. 3 கர்ப்பகிரஹங்களுக்கு 3 கோபுரங்கள் என்று, இக்கோயில் ஓர் சிறிய நட்சத்திர வடிவ மேடையின்மேல் கட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியான கட்டிடக் கலையானது ஹொய்சாளர்களுக்கே உரிய பாணி. ஆதலால், கோயில் கட்டிடக்கலையில் அவர்களுடைய பாணியை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.

கோயிலின் அடிப்பாகம், 2 பகுதியாக 6 வார்ப்புகளாக அழகான சிற்பங்களுடன் காட்சியளிக்கின்றன. கீழிருந்து முதல் வார்ப்பில் யானைகளின் அணிவகுப்பும்,2-வதில் குதிரைவீரர்களும் உள்ளன. 3-வதில் பசுமையான இலைத்திரள்களும், 4-வது வார்ப்பில் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரும் காட்சிகளும் வருகின்றன. 5-வதில் யாளிகளும்,6-வது வார்ப்பில் அழகிய அன்னங்களின் அணிவகுப்பும் கோயில் சுவரை அலங்கரிக்கின்றன.

6 வார்ப்புகளுடன் கூடிய கோயிலின் அடிப்பாகம்...

கோயிலின் தெற்கு வெளிப்புற சுவர்களின்4-வது வார்ப்பில் ராமாயணக் கதைகளும், பின்புற சுவற்றில் கிருஷ்ணரின் கதைகளும், வடக்குச் சுவற்றில் மகாபாரதக் கதைகளும், சிற்பியின் உளி வழியாக சிற்பங்களாகி கோயிலின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

15-ம் நூற்றாண்டு கல்வெட்டுகளின்படி, இக்கோயில் எதிரி மன்னர்களால் சிதையுண்டு, பின் 16-ம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இச்சீரமைப்பில் விஜயநகர மன்னர்களின் பங்கு மிகச்சிறப்பானது. இதை, இக்கோயில் கட்டுமானத்தில் உள்ள கற்களின் வண்ணங்களால் நாம் அறியமுடிகிறது. சீரமைக்கப்பட்ட கோயில் 19-ம் நூற்றாண்டில் மறுபடியும் சிதையுண்டுள்ளது. அதை, 20-ம் நூற்றாண்டின் மைசூர் அரசு சீரமைத்துள்ளது. ஹொய்சாளர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும், பேலூர், ஹளபேடு வரிசையில் சோம்நாத்பூரும் சிறப்புதான். அடுத்த முறை, மைசூர் பயணம் மேற்கொள்ளும்போது தவறாமல் சோம்நாத்பூருக்கும் போய்வரலாம் என திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE