‘கிரீடத்தை கேரேஜிலேயே விட்டுட்டு வா!’

By ம.சுசித்ரா

“நவம்பர் மாதம் 2009-ம் வருடத்தில் ஒருநாள்... பெப்சிகோ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான நான், இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் மத்தியில் நின்றுகொண்டிருந்தேன். என்னை அறிமுகப்படுத்த ஒபாமா வாய் திறந்தார். அப்போது, ‘எங்களில் ஒருவராயிற்றே அவர்’ என்றார் மன்மோகன் சிங். அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே தாளம் தப்பாமல், ’எங்களிலும் அவர் ஒருவராயிற்றே’ என்றார் ஒபாமா. நான் இரண்டு உலகங்களையும் சேர்ந்தவளே!”

- இப்படி, ‘My Life in Full: Work, Family and our Future’ என்ற தலைப்பிலான தனது புதிய புத்தகத்தில் எழுதியுள்ளார், பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி.

‘My Life in Full: Work, Family and our Future’ புத்தகத்துடன் இந்திரா நூயி

உலகின் டாப் 100 சாதனை பெண்களின் பட்டியலில், கடந்த பத்தாண்டுகளாக முன்வரிசையில் இடம்பிடித்துவருபவர் இந்திரா நூயி. சென்னையில் பிறந்து வளர்ந்து அமெரிக்காவின் முதல் பெண் தலைமை செயலதிகாரியானவர்.

மாஸ்ட்டர் கார்ட் நிறுவனத்துக்கு அஜய் பங்கா தலைவரானது, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக சத்ய நாதெல்லா உயர்ந்தது, கூகுளுக்கு சுந்தர் பிச்சை சிஇஓவாக ஏற்றம் கண்டது போன்ற வரலாற்றுச் சம்பவங்களெல்லாம் இந்திரா நூயியைத் தொடர்ந்தே நிகழ்ந்தன. 2018-ல் ஓய்வுபெறும்வரை பலமுறை தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்தவர், தற்போது தனது புதிய புத்தகம் மூலமாக மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறார்.

பணிவாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இடையில் சமநிலையை எட்ட பெண்கள் படும்பாட்டை எப்போதுமே வெளிப்படையாகப் பேசி வந்திருக்கிறார் இந்திரா நூயி. அதேபோன்று, இப்புத்தகத்தில் வாசகரின் கரம்பிடித்து பணிவாழ்க்கையில் தான் எட்டிய உயரத்தை விவரிக்கும்போதே தன்னுடைய தனிவாழ்க்கையையும் எடுத்துரைத்துள்ளார்.

அமெரிக்காவின் பெப்சிகோவுக்குள், நடுத்தர வயது இந்திரா 1994-ல் அடியெடுத்து வைத்தார். அப்போது, அமெரிக்க வெள்ளையின ஆண்கள் மட்டுமே அந்நிறுவனத்தின் அனைத்துவிதமான தலைமைப் பொறுப்புகளையும் வகித்தனர். அந்த ஆண்களின் மனைவிமார்களிலும் எவரும் வீட்டைவிட்டு வெளியே பணிக்குச் சென்றதாகத் தெரியவில்லை. இவர்களைத் தவிர, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த திறமைசாலியான பெண்கள்கூட இடைநிலை நிர்வாகப் பொறுப்புகளை மட்டுமே வகித்தனர். அன்றைய தேதியில், அமெரிக்காவின் டாப் 500 பன்னாட்டு நிறுவனங்களில் ஒரே ஒரு பெண் சிஇஓகூட இல்லை.

இளைய மகள் தாரா, ”எப்படியாவது வீட்டுக்கு வந்துட்டீங்கனா உங்க மேல திரும்ப அன்பு வந்திடும் அம்மா...ப்ளீஸ்” என்று நீளமான காகிதத்தில் எழுதியிருக்கிறாள். ‘ப்ளீஸ்’ என்ற சொல்லை மட்டுமே தாரா 7 முறை குறிப்பிட்டிருந்ததாகக் கண்கலங்கியபடி எழுதியுள்ளார் இந்திரா.

இந்நிலையில், 12 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனத்தின் சிஇஓ-வாக உயர்ந்தார் இந்திரா நூயி. பெருநிறுவனத்தின் தலைவராகச் செயல்படும் வாய்ப்பு கிட்டியபோது, இரு மகள்களின் தாயாகவும் கணவருக்கு இணக்கமான மனைவியாகவும் வாழ்ந்துவந்தார். சமையல், துணி துவைத்தல், தூய்மைப் பணிகள், தோட்டப் பராமரிப்பு, வீட்டை அலங்கரித்தல், விருந்தினரை உபசரித்தல், விடுமுறை மற்றும் பிறந்தநாட்களை விமர்சையாக கொண்டாடுதல், மகள்களின் பள்ளிப் படிப்புடன் தொடர்புடைய பொறுப்புகளை நிர்வகித்தல்...இப்படி சங்கிலித் தொடராக நீளும் குடும்பப் பொறுப்புகள் இந்திரா தலைக்குள் புகுந்துகொண்டிருந்தன. கணவர் ராஜுவுக்கோ வெவ்வேறு ஊர்களுக்குப் பயணம் சென்று செய்யவேண்டிய வேலை.

இதற்கிடையில் வீட்டைப் பராமரிக்க ஒரு பெண் பணியாளரும் குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்க்க உறவினரில் ஒரு அத்தைமாரும் இருந்தனர் என்று தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் இந்திரா நூயி. தன்னுடைய தாய் அமெரிக்கா வந்திருந்தாலும் பெரும்பாலான நேரம் சகோதரி, சகோதரன் வீடுகளில்தான் தங்கியதாகவும் கூறுகிறார். கணவரின் தாயும் குடும்பப் பராமரிப்பில் அவ்வப்போது உதவி வந்திருக்கிறார்.

வெளி உலகத்தில் நட்சத்திரமாக ஜொலித்தபோதிலும், தாயாக அன்றாடக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் போன தருணங்களை எண்ணிக் குற்ற உணர்வுக்கு ஆளானதாகப் பதிவு செய்துள்ளார் இந்திரா. தனது மூத்த மகள் ப்ரீத்தா பதின்பருவத்தை அடைந்தபோது, எந்நேரமும் பரபரப்பும் மன அழுத்தமும் நிரம்பிய தன்னைப் பார்த்து வருந்தியதாக எழுதுகிறார். ஒருமுறை இளைய மகள் தாரா, ”எப்படியாவது வீட்டுக்கு வந்துட்டீங்கனா உங்க மேல திரும்ப அன்பு வந்திடும் அம்மா...ப்ளீஸ்” என்று நீளமான காகிதத்தில் எழுதியிருக்கிறாள். ‘ப்ளீஸ்’ என்ற சொல்லை மட்டுமே தாரா 7 முறை குறிப்பிட்டிருந்ததாகக் கண்கலங்கியபடி எழுதியுள்ளார் இந்திரா.

”அந்தச் செய்தி காத்திருக்கட்டும். முதல்ல நீ போய் பால் வாங்கிட்டுவா” என்று அதட்டலாகச் சொன்னார் இந்திராவின் தாய்...

அதிலும், 2000-ல் நிகழ்ந்ததாக அவர் தன் புத்தகத்தில் நினைவுகூர்ந்திருக்கும் இன்னொரு சம்பவம், இன்று பல ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் ஆகியுள்ளது. வழக்கம்போல் டிசம்பர் 1 அன்றும் இரவு நேரங்காலம் பாராமல் அலுவலகப் பணிகளை இந்திரா செய்துகொண்டிருந்தார். அன்றைய தேதியில் பெப்சிகோவின் சிஇஓ-வான ஸ்டீவ் அழைத்து, “இந்திரா நீங்கள்தான் பெப்சிகோவின் அடுத்த பிரசிடன்ட்” என்றார்.

இந்திராவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. உடனடியாக வீட்டுக்கு தனது காரில் புறப்பட்டார். வீட்டை நெருங்கும்போது மணி 10 இருக்கும். இருளும் அமைதியும் போர்த்தியபடி குளிரிரவில் வீதிகள் வழிவிட்டன. சமையலறைக்கான கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தார். வண்டி சாவியையும் கைப் பையையும் வைத்தார். நற்செய்தியை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளும் பூரிப்பிலிருந்தார்.

முதலில் அம்மா கண்ணில்பட்டதும், “நம்ப முடியாத செய்தி ஒன்று என்னிடம் உள்ளது” என்றார் இந்திரா. ”அந்தச் செய்தி காத்திருக்கட்டும். முதல்ல நீ போய் பால் வாங்கிட்டுவா” என்று அதட்டலாகச் சொன்னார் இந்திராவின் தாய். சொல் பேச்சைத் தட்டாமல் காரை ஓட்டியபடி, வீட்டிலிருந்து 1 மைல் தொலைவில் இருந்த கடைக்குச் சென்று பெரிய பால் பாட்டிலை வாங்கி வந்தார். வீடு திரும்பி சமையலறைக்குள் நுழைந்ததும் துள்ளிக்குதித்தார் இந்திரா.

பால் பாட்டிலை மேஜை மீது மோதியபடி வைத்துவிட்டு, “நான் பெப்சிகோவுக்கு பிரெசிடன்ட் ஆகிவிட்டேன். அந்தச் செய்தியைக்கூடக் கேட்க நீ நிற்கவில்லையே” என்றார் தாயிடம். ”நான் சொல்வதைக் கவனி... நீ பெப்சிகோவுக்கு பிரெசிடன்டோ, எது வேணும்னாலும் ஆகலாம். ஆனால், வீடு திரும்பியதும் நீ ஒருவரின் மனைவி, குழந்தைகளுக்குத் தாய் மற்றும் மகள் என்பதை மறவாதே. உன்னுடைய கிரீடத்தை கேரேஜிலேயே விட்டுட்டுவா!” என்றாராம் இந்திராவின் தாய்.

இந்தியப் பெண்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் உச்சாணிக் கொம்பை எட்டிப்பிடித்தாலும் வீடு மாறுவதில்லை என்பதை இதன்வழி பதிவுசெய்துவிட்டார், டாலர் தேசத்தின் முதல் பெண் தொழில் துறை ஜாம்பவான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE