இந்தக் கறுப்பு உடைக்குப் பின்னால் ஒரு கதை இருக்கு!

By என்.சுவாமிநாதன்

மனிதர்களில் சிலர் வெளிப்பார்வைக்கு எளியவர்களாகத் தெரிவார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கையை வழிநடத்தும் லட்சியங்களை உற்றுநோக்கினால், அவர்களின் விஸ்வரூபம் நம்மை வியப்பில் ஆழ்த்திவிடும். நாகர்கோவிலைச் சேர்ந்த திருத்தமிழ் தேவனார் அப்படியானவொரு அசத்தல் மனிதர்தான்.

திருத்தமிழ் தேவனாருக்குச் சொந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆனாலும் தினமும் கைநிறைய மனுக்களோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறார். ஏதேனும் ஒரு பொதுப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி மனு போட்டுக்கொண்டிருப்பார். மற்ற நேரங்களில், ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் எந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அதில் கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்பிக்கொண்டிருப்பார். இந்த இடைவெளியில் நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக எளிய மக்களுக்காக வாதாடும் திருத்தமிழ் தேவனார், இதுவரை 20 புத்தகங்களைத் தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு தந்தவரும்கூட!

கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ் இலக்கியத்தைக் காக்கக் கோரும் போராட்டம்வரை எல்லாவற்றிலும் முன்வரிசையில் நிற்கும் இவரது வாழ்க்கையே ஆச்சரியங்கள் நிறைந்தது. நாகர்கோவிலில் வசிக்கும் திருத்தமிழ் தேவனாரை ‘காமதேனு’ மின்னிதழுக்காகச் சந்தித்தேன். எப்போதும் கறுப்பு உடையிலேயே இருக்கும் திருத்தமிழ் தேவனார் அன்றும் அப்படியே இருந்தார். அதற்கான காரணத்தில் இருந்தே பேசத் தொடங்கினார்.

“பொதுவாகவே கறுப்பு உடை என்பது திராவிடர் கழகத்தின் குறியீடு போல் ஆகிவிட்டது. ஆனால், நான் தீவிர ஆன்மிகவாதி. இந்தக் கறுப்பு உடையின் பின்னால் ஒரு கதை இருக்கிறது. என்னிடம் மொத்தமே 2 உடைகள்தான் இருக்கின்றன. இரண்டுமே கறுப்புதான். ஒரு உடையைப் போட்டிருப்பேன். மற்றொரு உடை காய்ந்துகொண்டிருக்கும். எல்லா நாள்களுமே கறுப்பு உடையில் இருப்பதால் ஆடை மீதான ஆசை என்னிடமிருந்து அகன்றுவிட்டது. தீபாவளி, ஈஸ்டர், புத்தாண்டு, பிறந்தநாள் என எந்த நல்ல நாள்களுக்கும் துணி எடுக்க வேண்டும் எனும் ஆசையே வராது. தொழில்நிமித்தமாக வழக்கறிஞராக இருப்பதால் அங்கேயும் கறுப்பு அங்கிதான்” என்று சிரிக்கும் திருத்தமிழ் தேவனார், “இந்தக் கறுப்பின் பின்னால் எளிமையாக வாழ வேண்டும் எனும் கருத்தியல் இருக்கிறது. எனக்குச் சின்ன வயதிலிருந்தே ஆன்மிகத்தின் மீது நாட்டம் அதிகம். ஏழ்மையாக வாழ்க்கையைத் தகவமைப்பதே என்னளவில் சிறந்த ஆன்மிகம்” என்று தத்துவார்த்த ரீதியில் பேசுகிறார்.

ஆடை மட்டுமல்ல... இன்னும் பல ஆச்சரியங்களும் இவரைச் சுற்றிச் சுழல்கின்றன. கிறிஸ்தவம், இஸ்லாம் என ஏற்கெனவே இரு மார்க்கங்களிலும் இருந்தவர், இப்போது இந்து மதத்தைத் தழுவியுள்ளார். ஆனால், இதுவும் நிறைவு அல்ல. தேடல் தொடர்கிறது என்றவாறே பேசத் தொடங்கினார்.

“பிறப்பால் கிறிஸ்தவன் நான். பத்தாம் வகுப்பிலேயே படிப்பை முடித்துவிட்டு கத்தோலிக்க பாதிரியாருக்குப் படிக்கச் சென்றேன். அது மொத்தம் 14 ஆண்டுகள் கல்வி. 6 வருடத்திலேயே அதிலிருந்து முரண்பட்டு வெளியேறிவிட்டேன். என்னுடைய நிஜப்பெயர் தமிழ்ச்செல்வன். என் அக்காவின் பெயர் செந்தமிழ்ச் செல்வி. அண்ணனின் பெயர் கலைச்செல்வன். இப்படி தூயத் தமிழில் பெயர்வைக்கும் அளவுக்கு என் அப்பா தமிழ்ப் புலவர். 1970-களில் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டவே, கத்தோலிக்கத் திருச்சபைகள் கடும் எதிர்ப்பு காட்டின. அப்படியான சூழலில், என் அப்பா தமிழின்பால் கொண்ட அன்பால் எங்களுக்கு இப்படி பெயர் சூட்டினார். கால ஓட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலரும் தமிழில் பெயர் சூட்டத் தொடங்கியுள்ளனர். இது ஆரோக்கியமான ஒரு மாற்றம்.

வாழ்க்கையில் எனக்கு எப்போதுமே அலாதியான தேடல் உண்டு. நான் பெங்களூருவில் ரட்சகர் சபையில் படித்துக்கொண்டிருந்தபோதே, ‘இது நமக்கான இடம் அல்ல’ என மனதுக்குள் தோன்றியது. இதனால், மதபோதகர் படிப்பை விட்டுவிட்டு எம்.ஏ தத்துவம் படித்தேன். அதில் இஸ்லாமிய மார்க்கம் குறித்து ஒரு பாடம் வரும். அதைப் படித்ததும் என் தேடல் இஸ்லாத்தை நோக்கி நகர்ந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சேலம் கல்லூரியில் இஸ்லாம் குறித்துப் படித்தேன். ஒருகட்டத்தில் இந்து மதம் பற்றிய தேடல்கள் என்னுள் உருவாகின. திருவாவடுதுறை ஆதீன மடம் ஒருங்கிணைக்கும் சைவ சித்தாந்த வகுப்புகளின் மூலம் பயிற்சி பெற்றேன். கடைசியில், வெள்ளிமலை ஆசிரமத்தின் குருஜி சுவாமி சைதன்யானந்த சுவாமி ஜி தலைமையில் இந்து மதத்தில் இணைந்தேன். சைவ சிந்தாந்தம் மீதான ஈர்ப்பே என்னை இந்து மதத்தில் இணையவைத்தது” என்கிறார் திருத்தமிழ் தேவனார்.

இத்தனை மதங்களில் பயணித்திருந்தாலும் மத ரீதியான விவாதங்களோ, முன்னெடுப்புகளோ இல்லாமல் அவற்றைத் தன் மனதோடு நிறுத்திக்கொள்கிறார். இவ்வளவு ஏன், தான் பின்பற்றும் மார்க்கங்களுக்கு மாறுமாறு தனது மனைவி லூர்துமேரியை வலியுறுத்துவதே இல்லை. அதைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார் திருத்தமிழ் தேவனார்.

“எல்லா நதிகளும் இறுதியில் கடலைப் போய்ச் சேர்வதைப் போல, எல்லா சமயக் கோட்பாடுகளும் இறைவனை நோக்கித்தான் நகர்கின்றன. நம் சிந்தனை விசாலமடைய ஒரு வட்டத்துக்குள் சிக்கிவிடக் கூடாது. கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவரும் அல்ல. அவர் மதங்களைக் கடந்தவர். என் தேடல் இன்னும்கூட முடிந்துவிடவில்லை.

நான் பெண்ணுரிமையை ரொம்பவும் மதிப்பவன். அந்த வகையில் என் மனைவியின் சுதந்திரம் வீட்டுக்குள்ளும் இருக்கிறது. நான் கடந்து செல்லும் மதங்கள் குறித்த அனுபவங்களை அவரிடம் பகிர்ந்துகொள்வதுண்டு. ஆனால், ‘நீயும் என்னோடு அந்த மதத்துக்கு மாறிவிடு’ என நான் இதுவரை சொன்னதே இல்லை. என் மனைவி இன்றுவரை கிறிஸ்தவர்தான். அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. நான் தேவாரம் படிக்கும் நேரத்தில் அவர் ஜெபம் செய்துகொண்டிருப்பார். பல மதங்களைப் போல் பல கட்சிகளும் மாறியிருக்கிறேன். பதவிக்காக எந்தக் கட்சிக்கும் போகவில்லை. இன்னும் சொல்லப்போனால் கட்சி கொடுத்த பதவிகளையே உதாசீனப்படுத்திவிட்டு வெளியேறியிருக்கிறேன். அரசியலும் எனக்கு ஒரு தேடல்தான்!” என்று புன்னகைக்கிறார்

கல்லூரி காலத்தில் இவர் மதிமுகவில் இருந்திருக்கிறார். வழக்கறிஞரான போது திமுகவில் இணைந்தார். பாஜக, தேமுதிக கட்சிகளில் மாவட்ட மீனவரணித் தலைவராகவும் இருந்திருக்கிறார். ஏன் அப்படி என்று கேட்டால், “விஷயம் ரொம்பவும் எளிமையானதுதான். நீங்கள் தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என முடிவு செய்கிறீர்கள். நான் யாருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என என் முடிவைப் பொறுத்து அவர்களுக்கு எதிரான கட்சியில் சேர்ந்து தேர்தல் வேலை செய்வேன். இதற்காக ஒரு குவளை தேநீர்கூட அவர்களிடம் வாங்கிக் குடித்தது இல்லை. கட்சியில் இணையும்போதோ, வெளியேறும்போதோ போஸ்டர் ஒட்டுவதோ, பத்திரிகைகளில் செய்தி வரவைப்பதோ கிடையாது. ஓசையின்றி என்னால் முடிந்த சிறு மாற்றத்தைச் சமூகத்தில் விதைப்பவன் நான்.

சொந்த வீடோ, சொத்தோ எனக்குக் கிடையாது. ரேஷன் அரிசிதான் சாப்பிடுகிறேன். இதனால் குறைந்த வருமானமே என் வாழ்க்கைக்குப் போதுமானது. 20 புத்தகங்கள் இதுவரை எழுதியிருக்கிறேன். இன்னும் 3 புத்தகங்களுக்கான எழுத்துப் பணி முடிந்திருக்கிறது. வழக்கறிஞர் தொழிலில் வருமானம் வரும்போது அதை புத்தகமாக வெளியிடுவேன். மேலும், என் அமைப்பின் மூலம் இளம் எழுத்தாளர்களுக்கு மலிவுவிலையில் புத்தகம் பதிப்பிக்கிறேன். அவர்களிடம் பணமே இல்லாவிட்டால் கைக்காசைப் போட்டு உதவுகிறேன். சம்பாதிக்க எனக்கு ஆசை இல்லை. என்னளவு பெருந்திருப்தியோடு வாழ்கிறேன்’’ என்கிறார் திருத்தமிழ் தேவனார்.

நற்சிந்தனையும், நெறிமுறைகளும் கொண்ட திருத்தமிழ் தேவனார் போன்றோரின் வித்தியாசமான முயற்சிகள் வெற்றியடையட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE